dinamalar telegram
Advertisement

முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் ஒருவழியாக 142 அடியை எட்டியது

Share
கூடலுார்:முல்லை பெரியாறு அணையில், நேற்று அதிகாலை நீர்மட்டம் 142 அடியை எட்டியதால் தமிழக நீர்வளத் துறை அதிகாரிகள், அணைப் பகுதியில் முகாமிட்டுள்ளனர். கேரளப் பகுதிக்கு மூன்றாவது இறுதி கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

2,300 கன அடி திறப்பு



கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில், தமிழகத்தின் பராமரிப்பில் முல்லை பெரியாறு அணை உள்ளது. மொத்தம் 152 அடி உயரமுள்ள அணை நீர் பிடிப்பில் தொடர்ந்து பெய்து வந்த மழையால், நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வந்தது. அக்டோபர் கடைசி வாரம் மற்றும் நவம்பர் முதல் வாரத்தில் கூடுதல் மழை பெய்து நீர்மட்டம் 142 அடியை எட்ட வாய்ப்பு இருந்தது.இருப்பினும், 'ரூல் கர்வ்' எனும் நடைமுறையால் தண்ணீர் தேக்க முடியவில்லை.இந்த நடைமுறைப்படி நவம்பர் 30ல் 142 அடி தேக்கலாம்.இந்நிலையில் நேற்று அதிகாலை 3:55 மணிக்கு நீர்மட்டம் 142 அடியை எட்டியது. தமிழகப் பகுதிக்கு குடிநீர், சாகுபடிக்காக 2,300 கன அடி திறந்து விடப்பட்டுள்ளது.அணைக்கு நீர்வரத்து நேற்று காலை 10:00 மணி நிலவரப்படி வினாடிக்கு 7,991 கன அடியாகஇருந்தது.

வெள்ள அபாய எச்சரிக்கை



நீர்மட்டம் 142 அடிக்கு மேல் உயராமல் இருக்க, கேரளப் பகுதிக்கு ஒன்பது ஷட்டர்கள் திறக்கப்பட்டு 5,691 கன அடி வெளியேற்றப்படுகிறது.மழை மற்றும் நீர்வரத்துக்கு ஏற்ப கேரளப் பகுதிக்கு வெளியேற்றும் தண்ணீரின் அளவு மாறுபடும்.வல்லக்கடவு, வண்டிப்பெரியாறு, சப்பாத்து உள்ளிட்ட பெரியாற்றின் கரையோரப் பகுதியில் வசிப்பவர்களுக்கு மூன்றாவது மற்றும் இறுதி கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.நீர்வளத் துறையின் மதுரை மண்டல முதன்மை பொறியாளர் கிருஷ்ணன், கண்காணிப்பு பொறியாளர் சுகுமார் தலைமையில் மெயின் அணை, பேபி அணை, ஷட்டர் பகுதி களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.மழை தொடர்ந்து பெய்து வருவதால், அணையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் வேலுாரில் நிருபர்களிடம் கூறும்போது, ''முல்லை பெரியாறு அணையில், 142 அடி வரை தண்ணீரை நிரப்ப முடியாது என, கேரள அரசு தெரிவித்திருந்த நிலையில், தற்போது நான்காவது முறையாக 142 அடியை எட்டியுள்ளது,'' என்றார்.

ஒரு வாரம் தேக்க நடவடிக்கை



'ரூல் கர்வ்' விதிப்படி, முல்லை பெரியாறு அணையில் 142 அடிக்கு 7.66 டி.எம்.சி., நீர் சேமிக்கப்பட்டு உள்ளது. அணையின் பலத்தை கேரள அரசிற்கு உணர்த்தும் வகையில் ஒரு வாரத்திற்கு, 142 அடிக்கு நீரை சேமிக்க, நீர்வளத் துறை அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டு உள்ளது.மழை ஓய்ந்தபின் தேவைப்படும் பட்சத்தில், தமிழகத்தின் தேவைக்கேற்ப கூடுதல் நீரை திறந்து நீர்மட்டத்தை குறைக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

மார்க்சிஸ்ட் மீது விமர்சனம்



இதுவரை முல்லை பெரியாறு அணை பிரச்னையில் மவுனம் காத்த தமிழக மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி நேற்று கேரள முதல்வர் பினராயி விஜயன் அரசை புகழ்ந்துள்ளது.இது தொடர்பாக அந்த கட்சியின் டுவிட்டரில், 'முல்லை பெரியாறு அணை; 142 அடி நீர் தேக்கம். உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பின் கேரள இடது ஜனநாயக முன்னணி ஆட்சியில் முல்லை பெரியாறு அணையில் நான்காவது முறையாக நேற்று 142 அடி தண்ணீர் தேக்கப்பட்டது' என பதிவிடப்பட்டு இருந்தது.மேலும், இதே வாசகத்துடன் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலர் சண்முகத்தின் பெயரில் படம் ஒன்று இணைக்கப்பட்டு இருந்தது.அதில், முல்லை பெரியாறு அணைக்கு பதில் இடுக்கி அணையின் படம் இருந்தது. இதனால் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சிக்கு முல்லை பெரியாறு, இடுக்கி அணை இடையேயான வித்தியாசம் தெரியவில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    ரூல் இல்லாத கர்வு மூலம் இப்பொழுது தண்ணீரை சேமித்துவிட்டார்கள். ஆனால் மரம் வெட்ட முடியவில்லையே? அதை எப்படி சரி செய்வது... உச்ச நீதிமன்றம் மனது வைத்தால்த்தான் இனி மரம் வெட்ட முடியும்..

Advertisement