Load Image
dinamalar telegram
Advertisement

இடைவிடாத கன மழையால் கடலூர் மீண்டும் வெள்ளக்காடானது;  மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்பு

Tamil News
ADVERTISEMENT
கடலுார் : கடலுார் மாவட்டத்தில் நேற்று காலை முதல் பெய்த கனமழையால் மாவட்டமே வெள்ளக்காடானது. பொது மக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் முடங்கியதால் இயல்பு வாழ்க்கை பாதித்தது.


குமரிக்கடல் மற்றும் இலங்கை கடல் பகுதியில் வளி மண்டல சுழற்சி அதே இடத்தில் நீடிப்பதால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலுார், புதுச்சேரி, கடலுார், டெல்டா மாவட்டங்களிலும் 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கடந்த 2 நாட்களாக கடலுார் மாவட்டத்தில் மழை பெய்து வந்தது. கடந்த 27ம் தேதி சராசரியாக 58 மி.மீ. மழையும், நேற்று முன்தினம் 33 மி.மீ., மழையும் பெய்தது.

ஆண்டிற்கு இயல்பாக பெய்யும் மழையளவான 1206 மி.மீ., மழைக்கு, இது வரை 1826 மி.மீ., மழை பெய்துள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள குழாய் கிணறு வழியாக ஊற்று தண்ணீர் வழிந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் மிக கனமழை பெய்து வருகிறது. பிற்பகல் 4.30 மணிக்குமேல் மழை குறைந்தது. இதனால் மஞ்சக்குப்பம் நேதாஜி சாலை, திருவந்திபுரம் சாலை, ஜட்ஜ் பாங்களா சாலை, வண்ணாரப் பாளையம், புதுப்பாளையம், உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் வெள்ளமாக செல்கிறது.அதேப் போல பாதிரிக்குப்பம், குண்டு உப்பலவாடி, கூத்தப்பாக்கம், விஜியலட்சுமி நகர், தானம்நகர், புதுப்பாளையம் மணலி எஸ்டேட், கூத்தப்பாக்கம்,


சுத்துக்குளம், வெளிச்செம்மண்டலம், கோண்டூர் உள்ளிட்ட பல இடங்களில் குடியிருப்புகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. கன மழையால் கே.கே.நகரில் உள்ள சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதித்தது. தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து மரத்தை வெட்டி அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர்.நள்ளிரவு முதல் இடைவிடாமல் மழை பெய்ததால் மக்கள் வெளியே வர முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கினர். மாவட்டத்தில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 228 ஏரிகளில் 194 ஏரிகள் நிரம்பின. ஏரியின் பாதுகாப்பு கருதி உபரி நீரை வெளியேற்றி வருகின்றனர். இதனால் அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தென்பெண்ணையாறு, கெடிலம் ஆற்றில் தொடர்ந்து தண்ணீர் வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது. ஏற்கனவே கன மழை மற்றும் வெள்ளத்தால் பாதித்த நெற்பயிர்கள் மீண்டும் தண்ணீர் தேங்கி அழுகியுள்ளது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதித்துள்ளனர். கடலுார் அடுத்த காரைக்காட்டில், வசந்தா என்பவரது வீடு நேற்று கன மழைக்கு இடிந்து விழுந்தது. பரங்கிப்பேட்டை பரங்கிப்பேட்டை மற்றும் கிள்ளை கடற்கரையோர பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக தொடர் கன மழை பெய்து வருகிறது. இதனால், மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. விசைப்படகுகள், மோட்டார் படகுகளை, கிள்ளை முடசல் ஓடை மீன் இறங்குதளம், பரங்கிப்பேட்டை அன்னங்கோவில் மீன் இறங்கு தளத்தில், பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.சிதம்பரம் அடுத்த பிச்சாவரம் வன சுற்றுலா மையத்தில் வனக்காடுகள், சுற்றுலா மைய வளாகம், கண்காணிப்பு கோபுரம், சிறுவர்கள் பூங்கா, படகு நிறுத்துமிடங்களில் அதிக தண்ணீர் தேங்கியது. இதனால், படகு சவாரியை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக சுற்றுலா மேலாளர் தினேஷ் தெரிவித்தார். அண்ணாமலை நகரில் 7.3 செ.மீ., மழை கடலுார் மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை முதல் நேற்று காலை 8.30 மணி வரை பெய்த மழை அளவு விபரம்;


அண்ணமாலை நகர் 7.3 செ.மீ., பரங்கிப்பேட்டை 6.9, காட்டுமன்னார்கோவில் 6.7, புவனகிரி 5.6, சிதம்பரம் 5.3, லால்பேட்டை 5, கடலுார் 4.6, சேத்தியாதோப்பு 3.7, ஸ்ரீமுஷ்ணம் 3.6, கொத்தவாச்சேரி 3.5, குப்பநத்தம் 3.3, வானமாதேவி 3.2, பெலாந்துறை 2.6, எஸ்.ஆர்.சி., குடிதாங்கி 2.5, கீழ்செருவாய், விருத்தாசலம் 2.3, பண்ருட்டி 2.2, வேப்பூர், குறிஞ்சிப்பாடி 1.9, கலெக்டர் அலுவலகம், வடகுத்து 1.6, தொழுதுார், காட்டுமயிலுார் 1.3, லக்கூர், மேமாத்துார் 1.2 செ.மீ., என மாவட்டத்தில் மொத்தம் 83.1 செ.மீ., மழை பெயத்து. சராசரி 3.3 செ.மீ., மழை ஆகும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement