Load Image
dinamalar telegram
Advertisement

புதுச்சேரியின் முந்தைய அதிகபட்ச மழை அளவுகள் தகர்ப்பு... நடப்பாண்டில் புதிய உச்சம் தொட வாய்ப்பு

Tamil News
ADVERTISEMENT
புதுச்சேரி : புதுச்சேரி பிராந்தியத்தில் தீவிரமாக பெய்து வரும் வடகிழக்கு பருவமழை, ஏற்கனவே பதிவாகியுள்ள அதிகபட்ச மழையளவுகளை கடந்து வருகிறது.

மழை மேலும் தொடரும் பட்சத்தில், உச்சபட்சமாக, 1943ம் ஆண்டில் பதிவான 2,604 மி.மீ., கடக்கும் வாய்ப்பு உள்ளது.புதுச்சேரி, காரைக்காலில் வடகிழக்கு பருவழை கடந்த மாதம் 26ம் தேதி முதல் தீவிரமடைந்து, கனமழை பெய்து வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் புதுச்சேரி பிராந்தியத்தில் 1,084 மி.மீ., மழையும், காரைக்கால் பிராந்தியத்தில் 1,201.4 மி.மீ., மழை கொட்டித் தீர்த்துள்ளது.

இதன் காரணமாக, புதுச்சேரி, காரைக்காலில் பிரதான ஆறு, குளங்கள் அனைத்தும் நிரம்பி விட்டன. ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. பல ஆண்டுகளுக்கு பிறகு படுகையணைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், கரையோர கிராமங்களுக்கு வெள்ள எச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ளது.புதுச்சேரி பிராந்தியத்தை பொறுத்தவரை, கடந்த 1943ம் ஆண்டு 2,604 மி.மீ., மழை கொட்டித் தீர்த்தது.

இதுவே, இதுவரை அதிகபட்ச மழை அளவாக இருந்து வருகிறது. அந்த ஆண்டில் வழக்கத்திற்கு மாறாக மே மாதம் மட்டும் 1,097.5 மி.மீ., மழை கொட்டியது.அதன்பிறகு, கடந்த 2015ல் பெய்த 2,382 மி.மீ., மழை இரண்டாவது அதிகபட்ச மழை அளவாக உள்ளது. அந்தாண்டு நவம்பரில்-834.8 மி.மீ., டிசம்பரில்--900.4 மி.மீ., மழை பதிவானது.கடந்த 1997ம் ஆண்டில் 2,118 மி.மீ., மழை, 1996ம் ஆண்டில் 2,059 மி.மீ., மழை பெய்தது. 1998ம் ஆண்டில் 2,043 மி.மீ., மழையும், 1985ல் 2,031 மி.மீ., மழை பெய்தது அதிகபட்ச அளவுகளாக பதிவாகி உள்ளது.

இந்நிலையில், இந்தாண்டு தொடர்ந்து தீவிரமாக பெய்து வரும் வடகிழக்கு பருவ மழையானது, புதுச்சேரியில் ஏற்கனவே பதிவான அதிகபட்ச மழை அளவுகளை கடந்து வருகிறது.நேற்று 28ம் தேதி காலை 8.30 மணி வரையிலான நிலவரப்படி, புதுச்சேரி பிராந்தியத்தில் 2,315 மி.மீ., மழை கொட்டித் தீர்த்துள்ளது.இதன் மூலம், 1985ல் பதிவான 2,031 மி.மீ., மழை, 1996ல் கொட்டித் தீர்த்த 2,059 மி.மீ., 1997ல் பதிவான 2,118 மி.மீ., 1998ல் பெய்த 2,043 மி.மீ., மழை அளவுகளை ஏற்கனவே கடந்து விட்டது.இன்னும் 68 மி.மீ., பெய்தால் 2015ம் ஆண்டு பதிவான 2,382 மி.மீ., மழையளவை பின்னுக்கு தள்ளி, இரண்டாம் இடத்தை பிடிக்கும்.மேலும் 290 மி.மீ., மழை கொட்டினால், 1943ம் ஆண்டு புதுச்சேரியின் உச்சபட்ச மழையளவான 2,604 மி.மீ., அளவையும் கடந்து, புதுச்சேரி மழை வரலாற்றில் முதலிடம் பிடிக்கும்.

இந்தாண்டு முடிய இன்னும் ஒரு மாதம் உள்ளது. தற்போது மேலடுக்கு சுழற்சி காரணமாக கன மழை பெய்து வருகிறது.அடுத்து, வங்கக் கடலில் புதிய காற்றழுத்த மண்டலம் உருவாக உள்ளது. இதனால் மழை மேலும் நீடிக்கும் சூழல் உள்ளது.கடந்த காலங்களில் புதுச்சேரி பிராந்தியத்திற்கு டிசம்பர் மாதத்திலும் நல்ல மழைப்பொழிவு இருந்துள்ளது. எனவே, மழை மேலும் நீடிக்கும் பட்சத்தில், புதுச்சேரியில் உச்சபட்ச மழையளவு பதிவாகும் வாய்ப்பு உள்ளது.
Telegram Banner
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement