Load Image
dinamalar telegram
Advertisement

அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி பழனிசாமியின் உதவியாளர் கைது

Tamil News
ADVERTISEMENT
சேலம்-அரசு போக்குவரத்து கழகத்தில் உதவி பொறியாளர் வேலை வாங்கி தருவதாக கூறி, 13 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக, முன்னாள் முதல்வர் பழனிசாமியின் உதவியாளரை போலீசார் கைது செய்தனர்.

தலைமறைவான புரோக்கரை தேடி வருகின்றனர்.கடலுார் மாவட்டம், குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்தவர் தமிழ்செல்வன், 29. இவர், 2019ல் போக்குவரத்து கழகத்தில் உதவி பொறியாளர் பணிக்கு விண்ணப்பித்திருந்தார். தொடர்ந்து, சேலம், காடையாம்பட்டி பகுதியைச் சேர்ந்த செல்வகுமார், 35, என்பவரை தொடர்பு கொண்டார்.அவர், அப்போதைய முதல்வர் பழனிசாமியிடம் உதவியாளராக பணிபுரிந்த மணி, 52 என்பவர் வாயிலாக வேலை வாங்கி தருவதாக தெரிவித்தார்.

இதை நம்பி, 2019 ஜனவரி முதல் கடந்த மார்ச் வரை, வங்கிகள் மூலம் செல்வகுமாருக்கு 17 லட்சம் ரூபாயை, தமிழ்செல்வன் கொடுத்தார். அவர், வேலை வாங்கி தரவில்லை.தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட, தமிழ்செல்வன் பணத்தை திருப்பி கேட்டார். ஜூனில், 4 லட்சம் ரூபாய் கொடுத்த நிலையில், 13 லட்சம் ரூபாயை தர மறுத்து மிரட்டல் விடுத்துள்ளார். தமிழ்செல்வன், செப்., 26ல், சேலம் எஸ்.பி., ஸ்ரீஅபிநவிடம் புகார் அளித்தார். மாவட்ட மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து, மணி, செல்வகுமார் மீது மோசடியில் ஈடுபட்டு, கொலை மிரட்டல் விடுத்ததாக அக்., 25ல் வழக்கு பதிந்தனர். இருவரும், சேலம் நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரிய மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.சென்னை உயர் நீதிமன்றத்தில், இன்று மணி ஜாமின் மனு தாக்கல் செய்யவிருந்த நிலையில், நேற்று காலை, அவரை போலீசார் கைது செய்தனர். புரோக்கர் செல்வகுமாரை தேடுகின்றனர்.

ரூ.2 கோடி மோசடி?

பழனிசாமி, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் பதவி வகித்தது முதல், முதல்வர் பதவிக்கு வந்தது வரை, 10 ஆண்டுகள் மணி உதவியாளராக பணிபுரிந்தார். மணி நெருக்கத்தை சாதகமாக்கி கொண்ட செல்வகுமார், தமிழகம் முழுதும் பலரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, வசூல் வேட்டை நடத்தினார்.ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், பணம் கொடுத்தவர்கள், செல்வகுமாருக்கு நெருக்கடி கொடுக்க, அவர் கடந்த ஆக., 20ல் எஸ்.பி., ஸ்ரீஅபிநவிடம் புகார் அளித்தார். அதில், 14 பேருக்கு வேலை வாங்கி தருவதாக, மணி 1.37 கோடி ரூபாய் பெற்றார். அதில், 60 லட்சம் ரூபாயை திருப்பி கொடுத்ததால், 77 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை மோசடி செய்து விட்டதாக கூறியிருந்தார்.

இது குறித்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.இதற்கிடையில், மணியிடம், கட்சி, அரசு பதவிக்கு, அ.தி.மு.க.,வினரும் பணம் கொடுத்து ஏமாந்ததாக தெரிவித்துள்ளனர். ஆனால், அவர்கள் புகார் கொடுக்க முன்வரவில்லை. அப்படி ஏமாந்தவர்கள் வழங்கிய பணம் குறித்த விபரங்களை உளவுத்துறையினர் சேகரித்தனர்.

இதில், 2 கோடி ரூபாய்க்கு மேல் மணி மோசடி செய்தது தெரியவந்துள்ளது.இந்திய கம்யூ., மாநில செயலர் முத்தரசன் சேலத்தில் நேற்று கூறுகையில், ''உதவியாளர் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், முன்னாள் முதல்வர் பழனிசாமியை விசாரிக்க வேண்டும். ''அவருக்கு தெரியாமல் வேலை வாங்கி தருவதாக கூறி, பண மோசடி செய்ய சாத்தியமில்லை,'' என்றார்.
Telegram Banner
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (1)

  • jayvee - chennai,இந்தியா

    புள்ளி வச்சாச்சு .. இனி அடுத்த கோலம் EPS க்கு தான் ..

Advertisement