dinamalar telegram
Advertisement

ஏன் இப்படி செயல்படுகிறீர்கள்? மாலிக்குக்கு நீதிமன்றம் கேள்வி!

Share
மும்பை : 'ஏன் இப்படி செயல்படுகிறீர்கள்' என, மும்பை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியதை அடுத்து, 'போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வான்கடே குடும்பத்தார் குறித்து எந்தக் கருத்தையும் பதிவிட மாட்டார்' என, மஹாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.


மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி அரசு அமைந்துள்ளது. போதைப் பொருள் வழக்கில் பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து போதைப் பொருள் தடுப்புப் பிரிவு மண்டல இயக்குனர் சமீர் வான்கடே குறித்து, தேசியவாத காங்கிரசைச் சேர்ந்த மாநில அமைச்சர் நவாப் மாலிக் தொடர்ந்து பல்வேறு புகார்களை கூறி வருகிறார்.

தன் மதத்தை மறைத்து வேலையில் சேர்ந்ததாகவும், அவர் மீது புகார் கூறினார். மேலும் வான்கடேவின் குடும்பத்தார் குறித்தும் தொடர்ந்து பல்வேறு கருத்துகளை கூறி வந்தார். சமூக வலைதளங்களிலும் பதிவிட்டு வந்தார்.

இது தொடர்பான வழக்கை, நேற்று விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம், 'சமீர் வான்கடே தன் மதத்தை மறைத்தது தொடர்பாக புகார் கூறினீர்களா? அவர் மீது தொடர்ந்து புகார் கூறுவது, அவருக்கு எதிராக தீங்கு நினைப்பதாகவே உள்ளது. 'ஒரு அமைச்சராக உள்ளவர் இப்படி செயல்படலாமா' என, கேள்வி எழுப்பியது.

இதையடுத்து 'வழக்கின் அடுத்த விசாரணை டிசம்பர் 9ம் தேதி வரும் வரை, சமீர் வான்கடே மற்றும் அவருடைய குடும்பத்தார் குறித்து எந்தக் கருத்தையும் வெளியிட மாட்டார்; சமூக வலை தளங்களில் பதிவிட மாட்டார்' என, நவாப் மாலிக் சார்பில், அவரது வழக்கறிஞர் உறுதி அளித்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement