dinamalar telegram
Advertisement

இன்ஜினியரிங் சேர்க்கைக்கு 2ம் கட்ட கவுன்சிலிங் : உயர் கல்வித்துறை அறிவிப்பு

Share
Tamil News
சென்னை : இன்ஜினியரிங் கல்லுாரிகளில் காலியாக உள்ள இடங்களுக்கு, இந்தாண்டு இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நடத்தப்படும் என உயர்கல்வி துறை அறிவித்துள்ளது.


@உயர்கல்வி துறை முதன்மை செயலர் கார்த்திகேயன் பிறப்பித்துள்ள அரசாணை:

கடந்த, 2003ல் தமிழக உயர் கல்வித்துறை பிறப்பித்த அரசாணையில், இன்ஜினியரிங் கல்லுாரிகளின் சேர்க்கைக்கு, விதிகளை பின்பற்றி கவுன்சிலிங் நடத்த, குறிப்பிட்ட கால அவகாசம் நிர்ணயிக்கப்பட்டது.இந்த கவுன்சிலிங்கில் இட ஒதுக்கீடு பெறும் மாணவர்கள், கல்லுாரிகளில் சேராவிட்டால், அந்த காலியிடங்களை சுயநிதி கல்லுாரிகள், ஒரு வாரத்துக்குள் நிரப்பி கொள்ள அனுமதிக்கப்பட்டது.

பின், 2018 ஏப்ரலில் பிறப்பித்த அரசாணையில், ஆன்லைன் கவுன்சிலிங் முறை அறிமுகமானது. 2019ல் பிறப்பித்த அரசாணையில் கவுன்சிலிங்கை நடத்த, தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது.இதன்படி, நடப்பு கல்வி ஆண்டில் மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடத்தி, இன்ஜினியரிங் கல்லுாரிகளில் முதலாம் ஆண்டு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. முதலாம் ஆண்டு வகுப்புகளை நவ., 30க்குள் துவங்க, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான ஏ.ஐ.சி.டி.இ., உத்தரவிட்டுள்ளது.

ஆனால், கடந்த ஏழு ஆண்டுகளாக கவுன்சிலிங்கில் இட ஒதுக்கீடு பெற்ற மாணவர்கள், கல்லுாரிகளில் சேர்ந்த விபரங்களை ஆய்வு செய்ததில், சில மாணவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லுாரிகளில் சேராமல் விடுவது தெரியவந்துள்ளது. சில மாணவர்கள் கல்லுாரிகளில் சேர்ந்து, இடைநிற்றலாகி விடுகின்றனர். அதனால், கல்லுாரிகளில் பல இடங்கள் காலியாகி விடுகின்றன.

இதுகுறித்து, இன்ஜினியரிங் கவுன்சிலிங்கின் ஒருங்கிணைப்பு கமிட்டி ஆலோசனை நடத்தி, இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒதுக்கீடு பெற்ற மாணவர்கள் உரிய தேதியில் சேராமலும், கல்லுாரியில் சேர்ந்து, பின் மாற்று சான்றிதழ் வாங்கி விட்டு செல்வதாலும் ஏற்படும் காலியிடங்களுக்கு, இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நடத்த, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்துக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

ஏற்கனவே கவுன்சிலிங்குக்கு விண்ணப்பித்து, இடஒதுக்கீடு பெற்ற மாணவர்கள் மட்டும், இந்த இரண்டாம் கட்ட கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம். இதற்கு போதுமான அவகாசம் வழங்கி கவுன்சிலிங் நடத்தப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement