dinamalar telegram
Advertisement

கிராமங்களில் உற்பத்தி, சேவைத்தொழில் துவங்க விருப்பமுள்ளதா

Share
Tamil News
மதுரை: கிராமங்களில் பிரதமரின் வேலை வாய்ப்பு திட்டத்தின் (பி.எம்.இ.ஜி.பி.) கீழ் தொழில் துவங்கினால் பெண்களுக்கு 35 சதவீதம் வரை மானியம் வழங்கப்படுகிறது,'' என்கிறார், மதுரை கோட்ட கதர் கிராமத் தொழில்கள் ஆணைய (கே.வி.ஐ.சி.) இயக்குனர் (பொறுப்பு) பி.எஸ்.அசோகன்.
தொழில்கள் துவங்குவது, அதற்காக அரசு வழங்கும் மானியம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து அவர் அளித்த சிறப்பு பேட்டி...
பி.எம்.இ.ஜி.பி., திட்டத்தின் கீழ் என்னென்ன தொழில்கள் துவங்கலாம்?
கோழி, மீன்வளர்ப்பு, பட்டுப்புழு வளர்ப்பு தவிர மற்ற தொழில்களை துவங்குவதற்கு அரசு மானியம் உண்டு. தேனீக்கள் வளர்ப்பதற்கு பயிற்சியும் மானியமும் வழங்கப்படுகிறது.
தொழில் துவங்குவதற்கு முன்அனுபவம் தேவையா?
தொழில் துவங்க ஆர்வம் இருப்பவர்களுக்கு கே.வி.ஐ.சி., சார்பில் பயிற்சி வழங்க தயாராகவுள்ளோம். மதுரை பெருங்குடி ரூட்செட் பயிற்சி மையத்தில் இலவச பயிற்சிக்கு வழிகாட்டப்படுகிறது. அங்கு பயிற்சி பெற்ற பின் தொழில் துவங்குவதற்கு ஆன்லைனில் கே.வி.ஐ.சி.,க்கு விண்ணப்பிக்கலாம். குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே தொழில் துவங்க அனுமதி உண்டு.
வயது வரம்பு, கல்வித்தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளதா?
18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் தொழில் துவங்கலாம். உற்பத்தி பிரிவு தொடங்குவதற்கும் சேவைத்தொழில்கள் செய்வதற்கும் மானியம் வழங்கப்படுகிறது. கிராமங்களில் வேலை வாய்ப்பை அதிகப்படுத்தும் நோக்கத்தில் மானியம் வழங்கப்படுகிறது. ரூ.10 - ரூ.25 லட்சத்தில் உற்பத்தித்தொழில் துவங்கினால் குறைந்தது எட்டாம் வகுப்பு படித்திருக்க வேண்டும். ரூ. 5 - ரூ.10 லட்சத்தில் சேவைத்தொழில் துவங்கினால் எட்டாம் வகுப்பு படித்திருக்க வேண்டும். அதற்கு குறைந்த முதலீட்டில் தொழில் துவங்குவோருக்கு கல்வித்தகுதி தேவையில்லை.
கிராமப்புறங்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படுமா?
பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டமானது மாவட்ட தொழில் மையம், கதர் கிராமத்தொழில்கள் ஆணையம் மற்றும் வாரியம் மூலம் செயல்படுத்தப்படுகிறது. ஆணையம், வாரியத்தின் மூலம் தலா 30 சதவீதம் மானியம் கிராமப்புற தொழில்களுக்கு வழங்கப்படுகிறது. மாவட்ட தொழில் மையம் மூலம் 40 சதவீதம் நகர்ப்புறம், 20 சதவீதம் கிராமப்புறங்களுக்கு வழங்கப்படுகிறது. கிராமங்களில் துவங்கும் போது 35 சதவீதம் வரை மானியம் வழங்கப்படுகிறது.
ஒரு தொழில் துவங்கி எட்டு பேருக்கு வேலை வாய்ப்பு தர வேண்டும் என்பது கே.வி.ஐ.சி., நிபந்தனையாக உள்ளது. இது சாத்தியமா?
ரூ. ஒரு லட்சம் கடன் பெற்றால் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும் என்பதே நிபந்தனை. சோப்பு, ஷாம்பூ, அகர்பத்தி தயாரிப்பு, வாழைநார், பனைநார் தயாரிப்பு, உணவுப்பொருட்கள் தயாரிப்பு, டூவீலர் மற்றும் கார் சர்வீஸ், பியூட்டி பார்லர் சேவைத் தொழில்களில் வேலைக்கு ஆட்கள் அதிகம் தேவைப்படுகின்றனர். இதனால் பிரச்னையில்லை.
இயந்திரங்களை வாங்கும் போது ஆட்கள் தேவை குறையுமே. பின் எப்படி கடன், மானியம் பெறுவது?
இயந்திரங்களை பயன்படுத்தும் போது அதை இயக்குவதற்கு ஆட்கள் தேவை. தயாரித்த பொருட்களை விற்பனை செய்யும் வரை மனித உழைப்பு தேவைப்படும். இவையும் வேலைவாய்ப்பில் சேர்க்கப்படுகிறது.
மதுரை மாவட்டத்திற்கு எவ்வளவு மானியம் ஒதுக்கப்பட்டுள்ளது?
ஆணையத்தின் மூலம் 11 மாவட்டங்களுக்கு ரூ.10.65 கோடி மானியம் ஒதுக்கப்பட்டது. மதுரையின் இலக்கு ரூ.90 லட்சம். அதையும் தாண்டி ரூ.94 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. 31 திட்டங்களுக்கு அனுமதி வழங்கியதன் மூலம் புதிதாக 230 பேர் வரை வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.
அனைவருக்குமே 35 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறதா?
பொதுப்பிரிவினர் தவிர மற்ற அனைவருக்கும் 35 சதவீதம், பொதுப்பிரிவினருக்கு 25 சதவீத மானியம் உண்டு. தொழில் துவங்கும் போது பொதுப்பிரிவினர் திட்டத் தொகையில் 10 சதவீதம் முதலீடு, மற்றவர்கள் 5 சதவீதம் முதலீடு செய்ய வேண்டும். கிராமப்புறங்கள், 20 ஆயிரம் மக்கள் தொகைக்கு குறைவாக உள்ள பேரூராட்சிகளில் தொழில் துவங்கலாம். நகராட்சி, மாநகராட்சியில் தொடங்க விரும்புபவர்கள் மாவட்ட தொழில் மையத்தை அணுகலாம்.
வேறு எந்த திட்டங்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது?
பாரம்பரிய தொழில்களை ஊக்குவிக்க குழுவாக தொழில் செய்யும் கைவினைஞர்களுக்கு 'ஸ்பூர்த்தி' திட்டத்தின் கீழ் 75 சதவீதம் வரை மானியம் வழங்கப்படுகிறது. திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் முதலீடு செய்தால் போதும். குறைந்தது 150 பேர் வரையிலான குழுவினர் தொண்டு நிறுவனத்தின் மூலம் தொழில் செய்ய இந்த மானியத் தொகை வழங்கப்படுகிறது. மதுரையில் இதுபோன்ற 5 திட்டங்களுக்கு மானியம் வழங்கப்பட்டுள்ளது.
இலவச பயிற்சி, மானியம் பெற்று தொழில் துவங்கிய பின் விற்பனைக்கு என்ன செய்வது?
எங்களிடம் காதிபவன்கள் நிறைய உள்ளன. மதுரையில் மட்டும் 30 காதி பவன்கள் உள்ளன. உற்பத்தி பொருட்கள் தரமாக இருந்தால் அவற்றை காதி பவன் மூலம் விற்கலாம். இதனால் விற்பனைக்கு வெளியில் தேட வேண்டியதில்லை. இதுதவிர காதி பவன்களை புதுப்பிப்பதற்கும் ரூ.15 லட்சம் வரை நிதி வழங்குகிறோம். ஆண்டுக்கு ஒருமுறை கண்காட்சி நடத்துகிறோம். அதில் இலவச ஸ்டால் அமைக்கவும் உதவுகிறோம்.
ஆணையத்தை எப்படி அணுகுவது?
www.kviconline.gov.in இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் பூர்த்தி செய்யாவிட்டால் ஆணைய அலுவலகத்திற்கு நேரில் வரலாம். மதுரை பைபாஸ் ரோடு அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் அருகில் ஆணையத்தின் அலுவலகம் உள்ளது.
தொடர்புக்கு 0452 - 238 6792.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement