dinamalar telegram
Advertisement

விண்ணை முட்டும் விலைவாசி; கழுத்தை நெரிக்கும் குடும்ப பட்ஜெட்: குமுறும் குடும்பத்தலைவிகள்

Share
விருதுநகர் : என்றோ ஒருநாள் எப்போதோ விலை உயர்ந்து வந்த பெட்ரோல், டீசல் விலை தினமும் எகிறி வயிற்றில் புளியை கரைக்கிறது. இதையே காரணம் காட்டி போக்குவரத்து செலவு அதிகமென காய்கறிகளின் விலையும் அவ்வப்போது எகிறி குதித்து அலற வைக்கிறது. நான் மட்டும் என்ன விதிவிலக்கா என்பது போல ஒரு சிலிண்டர் தீர்ந்து மறுநாள் சிலிண்டர் வரும் போதெல்லாம் அபாய சங்காக விலையும் ரூ.50 வரை கூடி விடுகிறது. நடுத்தர வர்க்கத்தினர் கூட ஒருநாளைக்கு ஒரு காய் வைத்து சமைப்பது கனவு போலாகிவிட்டது.

மழையால் தக்காளி விலை தான் தங்கம் போல உயர்கிறது என ஆறுதல்பட முடியாமல் எல்லா காய்கறிகளின் விலையும் பலமடங்கு உயர்ந்து விட்டது. மார்க்கெட் செல்லும் இல்லத்தரசிகளின் பைகள் இப்போதெல்லாம் காய்கறிகளால் நிரம்புவதே இல்லை. கைநிறைய காசை செலவழித்து பெயருக்கு காய்கறிகள் வாங்குவது போலிருக்கிறது என்கின்றனர் குடும்பத்தலைவிகள்.

குடும்ப பட்ஜெட் எகிறுதுஅமுதா, அருப்புக்கோட்டை: காய்கறி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தொடர் மழை காரணமாக தக்காளி வரத்து குறைந்ததால் 1 கிலோ 100 ஐ தாண்டி விட்டது. இதைபோல் மற்ற காய்களும் விலை கூடியுள்ளது. பெட்ரோல், டீசல், காய்கள் என அனைத்தும் விலை கூடியுள்ளதால் குடும்ப பட்ஜெட் எகிறுகிறது. நடுத்தர , பாமர மக்கள் மிகவும் துன்பப்படுகின்றனர்.

கட்டுக்குள் கொண்டு வாங்கமஞ்சுளா, விருதுநகர்: பெட்ரோல், டீசல், காஸ் வரிசையில் தற்போது தக்காளி என தொடர் விலையேற்றம் பொதுமக்களை குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினரை அச்சறுத்தி வருகிறது. இதனால் மக்கள் மிகுந்த மன உளைச்சலில் உள்ளனர். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின் குடிநீர் பாட்டில் கூட விலையேறலாம். அந்த அளவுக்கு அனைத்து பொருட்களின் விலைவாசியும் மெல்ல மெல்ல ஏறி வருகிறது. ஆனால் வருவாய் ஆதாரமும், பொருளாதார முன்னேற்றம் தான் அப்படியே உள்ளது. மத்திய, மாநில அரசுகள் மக்கள் நலனை கருத்தில் கொண்டு விலைவாசி உயர்வை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.

அரசு கொள்முதல் செய்யலாம்தமிழ்ச் செல்வி, சாத்துார்: கத்தரிக்காய் கிலோ ரூ140, தக்காளி ரூ. 150, காரட் ரூ.72க்கு விற்பனையாகிறது. சாதாரண நடுத்தர மக்கள் காய்கறிகளை வாங்க முடியாத நிலை உள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால்தான் காய்கறிகளின் விலையும் உயர்கிறது. மழைக்காலத்தில் காய்கறி, அறுவடை இருக்காது. இடைத்தரகர்கள் காய்கறிகளை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்று கொள்ளை லாபம் பார்க்கின்றனர். அரசே காய்கறிகளை கொள்முதல் செய்தால் மட்டுமே விலை குறையும்.

தக்காளி இல்லா சமையல்தான்ஈஸ்வரி, ராஜபாளையம்:பெட்ரோல் ,காஸ் விலை உயர்வு பதட்டத்தை தந்தாலும் எப்படியோ சமாளித்து விட்டோம். ஆனால் தினமும் உபயோகிக்கும் காய்கறிகள் வழக்கத்தை விட இருமடங்கு விலை கூடியதால் அத்தியாவசிய பட்ஜெட் சமாளிக்க முடியாத நிலை உள்ளது. தக்காளியில்லாத சமையலுடன் விலை குறைவாக உள்ள ஒரு சில காய்கறிகளை வைத்து சமாளிக்கிறோம்.

காய்கறிக்கே வருமானம் போகுதுரோகிணி, விருதுநகர்: பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அனைத்து பொருட்களும் விலை உயர்கிறது. தற்போது தக்காளியின் விலை உச்சத்தை தொட்டு உள்ளது. விலை உயர்வில் காய்கறிகள் வாங்கி சமைப்பதற்கே வருமானம் முழுவதும் செலவாகி விடுகிறது. தக்காளி விலையை கட்டுப்படுத்த உற்பத்தி அதிகம் இருக்கும் நேரங்களில் சேமித்து வைக்கலாம்.

மக்கள் பாடு திண்டாட்டம்கீதாஞ்சலி, ஸ்ரீவில்லிபுத்துார்: காய்கறிகள் விலை உயர்வால் நடுத்தர ஏழை மக்கள் பாதிக்கின்றனர். கத்தரி, தக்காளி, வெங்காயம் இல்லாமல் எந்த காய்கறியும் வைக்க முடியாது. காய்கறி இல்லாமல் தினமும் வெரைட்டி ரைஸ் மட்டும் சாப்பிடவும் முடியாது. ரூ. 500 கொண்டு போனாலும் மார்க்கெட்டில் ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறிகளை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் குறைந்த ஊதியம் பெறுபவர்கள், கூலித்தொழிலாளிகள் சிரமப்படுகின்றனர். காய்கறி விலை உயர்வை கட்டுப்படுத்தவேண்டும்.

நடுத்தர மக்களே பாதிப்புமல்லிகா, சிவகாசி: விலைவாசி உயர்வால் அதிகம் பாதிக்கப்படுவது நடுத்தர மக்கள்தான். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அனைத்துப் பொருட்களின் விலையும் உயர்ந்து கொண்டே செல்கிறது. எவ்வளவுதான் சிக்கனமாக இருந்தாலும் அடிப்படை தேவைகளை சமாளிக்க என்ன விலையானாலும் வாங்கித்தான் ஆகவேண்டும். விலைவாசி உயர்வு ஒரு பக்கம் என்றால், சமையல் எரிவாயு விலை உயர்வு நடுத்தர மக்களை அதிகம் பாதிக்கிறது. விலைவாசி உயர்வை கட்டுக்குள் கொண்டுவந்தால் மட்டுமே மக்கள் தப்பிக்க முடியும்.----

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement