dinamalar telegram
Advertisement

இடைத்தரகர்களுக்குதான் லாபம்; எங்களுக்கு நஷ்டமே; ஆதங்கத்தில் விருதுநகர் விவசாயிகள்

Share
விருதுநகர் : தக்காளி விலை உச்சத்தை தொட்டாலும் லாபம் ஈட்டுவது என்னவோ இடைத்தரகர்கள்தான்.எங்களிடம் கிலோ ரூ. 40 க்கு வாங்கி கொள்ளை லாபம் அடைவோரை தடுக்க அரசே காய்கறிகளை கொள்முதல் செய்ய வெண்டும் என்கின்றனர் விருதுநகர் மாவட்ட விவசாயிகள் .இதோ அவர்களின்ஆதங்கம் ...

இடைத்தரகர்களால் உயர்வு



ராமர், விருதுநகர்: வடகிழக்கு பருவமழை பெரிய அளவில் பயிர்களை பாதித்துள்ளது. தக்காளியை எங்களிடம் ரூ.40க்கு வாங்கி ரூ.120 , ரூ.140க்கு விற்கின்றனர் வியாபாரிகள். இதில் இடைத்தரகர்களின் அட்டூழியம் தான் அதிகம். நிலங்களில் உழுது, நடவு செய்து பராமரித்த எங்களுக்கு லாபமில்லை. இடைத்தரகர்களை கட்டுப்படுத்தினாலே விலைவாசி பிரச்னை பாதி கட்டுக்குள் வரும். கண்ணீர் விடும் விவசாயிகளின் நலனை அரசுதான் காக்க வேண்டும்.

விவசாயிகள் நிலை மோசம்



கனகராஜ், அருப்புக்கோட்டை: தொடர் மழையால் விளைந்த காய்களும் பாழாகி விட்டன. காய்கள் விலை உயர்வு வியாபாரிகளுக்கு தான் கொண்டாட்டம், விவசாயிகள் பாடு திண்டாட்டம். எங்களிடம் வழக்கமாக வாங்கும் விலைக்கு தான் வியாபாரிகள் வாங்குகின்றனர். அதை மும்மடங்காக மக்களிடம் விற்கின்றனர். கன மழையால் விவசாயிகள் நிலை தான் மோசமாக உள்ளது.

எங்களுக்கு பயன் இல்லையே



ரமேஷ், ராஜபாளையம்: தற்போது கூடியுள்ள தக்காளி விலை விவசாயிகளான எங்களால் இல்லை. எப்போதும் உள்ள விலையில்தான் வியாபாரிகள் வாங்குகின்றனர். மழையால் 10 சதவீதம் மட்டுமே விளைச்சல் மிஞ்சும் நிலையில் அதிகரித்துள்ள விலையின் பலன் எங்களுக்கு பயன்தரவில்லை. மழையினால் இருக்கும் செடிகளும் அழுகி பழங்களும் வெடித்து அவற்றை பராமரிப்பது பெரும் பாடாக உள்ளது. வரத்து குறைவால் ஏற்படும் தேவை அதிகரிப்பின் காரணமாக ரூ. 100க்கு மேல் வியாபாரிகள் விற்பனை செய்கின்றனர்.இதில் இடைதரகர்களுக்கு மட்டுமே விலை உயர்வு கைகொடுக்கும்.

விவசாயிகளுக்கு நஷ்டமே



சுந்தர்ராஜன், ஒ.மேட்டுப்பட்டி, சாத்துார்: காய்கறி விலை உயர்ந்தாலும் விவசாயிகளுக்கு நஷ்டம் தான் தற்போது மழைக்காலம் என்பதால் அடைமழை பொழிகிறது. 40 கிலோ பறித்த இடத்தில் 10 கிலோ மட்டும் பறிக்க முடிகிறது. வரத்து குறைய இதுவே காரணம். நாட்டு தக்காளி ஒரு நாளிலே அழகி விடும். மொத்த வியாபாரிகள் வாங்கி சில்லரை வியாபாரிகளுக்கு விற்கின்றனர். சிறு வியாபாரிகள் கூடுதல் லாபம் வைத்து விற்கின்றனர். வியாபாரிகளுக்குதான் லாபம். விவசாயிகளுக்கு நஷ்டம்தான். காய்கறிகளை விவசாயிகள் சேகரித்து விற்பனை செய்யும் வகையில், ஒழுங்குமுறை விற்பனை நிலையங்களில் கிட்டங்கிகள் கட்டித் தந்து கடனுதவி வழங்க வேண்டும்

.சோதனை மேல் சோதனை



குமார், நாச்சியார்பட்டி, ஸ்ரீவில்லிபுத்துார்: தக்காளி விலை உயர்வால் இடைத்தரகர்கள், வியாபாரிகள் கூடுதல் லாபம் பெறுவார்கள். ஆனால், விவசாயிகளுக்கு செலவழித்த தொகை மட்டும்தான் கிடைக்கும். இதிலும் மழையால் காய்கறிகள் பறிக்க முடியாத நிலை ஏற்பட்டால் போட்ட முதலும் கிடைக்காது. மழை ஒரு பக்கம் மகிழ்ச்சியை தந்தாலும் பயிர்கள், காய்கறிகள் அறுவடை செய்வதில் சிரமம் ஏற்படுகிறது. இதனால் விவசாயிகளுக்கு தொடர்ந்து சிரமம் ஏற்பட்டுள்ளது. சோதனை மேல் சோதனையை விவசாயிகள் சந்திக்கின்றனர்.

வியாபாரிகள் வாழ்கிறார்கள்



கந்தசாமி, சித்தம நாயக்கன்பட்டி, சிவகாசி : விவசாய பொருட்களின் விலையை விவசாயி நிர்ணயம் செய்தால் மட்டுமே லாபம் உண்டு. வியாபாரியே விலையை நிர்ணயம் செய்கின்றார். தக்காளி கிலோ 100 ரூபாய் ஆனாலும் விவசாயியிடம் பாதி விலைக்குத்தான் வாங்கப்படுகிறது. நேற்று கூட இப்பகுதியில் விவசாயியிடம் ரூ. 48 க்கு மட்டுமே ஒரு கிலோ தக்காளி வாங்கப்பட்டது. இந்த விலை விவசாயிக்கு லாபம் தான். அதைவிட வியாபாரிக்கு தான் அதிக லாபம்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement