dinamalar telegram
Advertisement

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரியில்... ஆய்வு ; விரைவில் தேதி அறிவிக்கப்படும்: அமைச்சர்

Share
Tamil News
கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் மேற்கொள்ளப்படும் இறுதிக் கட்ட பணிகள் குறித்து அமைச்சர் வேலு ஆய்வு செய்தார்.

முதல்வர் ஸ்டாலினிடம் ஒப்புதல் பெற்று, விரைவில் திறப்பு விழா தேதி அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.கள்ளக்குறிச்சி அடுத்த சிறுவங்கூரில் 398.57 கோடி ரூபாய் மதிப்பில் புதிய மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்தவமனை கட்டுமானப் பணிகள் நடக்கிறது. இதில், 700 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனை கட்டடத்தில், கதிரியக்கத்துறை, மருத்துவக்கிடங்கு, மருந்தகம், ரத்த வங்கி, ஆய்வகம், அவசர சிகிச்சை பிரிவு, நோயாளிகள் பிரிவு, 8 அறுவை அரங்குகள், 2 அவசர அறுவை சிகிச்சை அரங்குகள், 6 சிறிய அறுவை சிகிச்சை அரங்குகள், 8 தீவிர சிகிச்சை பிரிவு அறைகள் உள்ளது.

மேலும், 88 அறைகள் கொண்ட சி.ஆர்.ஆர்.ஐ., ஆண்கள், பெண்கள் விடுதிகள், உணவுக்கூடம், நவீன சமையலறை கூடங்கள், பிரேத பரிசோதனை அறை உள்ளிட்டவை கட்டப்படுகிறது.அதேபோல், மருத்துவக் கல்லுாரியில் துறை தலைவர்கள், பேராசிரியர்கள் அறைகள், 150 இருக்கைகள் கொண்ட 4 விரிவுரையாளர்கள் அரங்குகள், அருங்காட்சியகம், ஆராய்ச்சி ஆய்வகம், தேர்வறை, மத்திய நுாலக அறை, திறனாய்வகம், 545 இருக்கைகள் கொண்ட கருத்தரங்க கூடம், 258 மாணவ மாணவியர்களுக்கு தனி தனி விடுதிகள், கல்லுாரி முதல்வர் மற்றும் அலுவலர்கள் குடியிருப்புகள் கட்டப்படுகிறது.கல்லுாரியில், இக்கல்வியாண்டு முதல் மாணவர்கள் சேர்க்கை நடந்து செயல்பட உள்ளது. இதனால், இறுதிக் கட்ட பணிகள் தீவிரமாக நடக்கிறது. இந்நிலையில், நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் வேலு, புதிய மருத்துவக் கல்லுாரியில் இறுதிக் கட்ட பணிகள் குறித்து நேற்று ஆய்வு செய்தார். ஆய்வின் போது, கலெக்டர் ஸ்ரீதர், எம்.எல்.ஏ.,க்கள் உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன், மணிகண்ணன் டி.ஆர்.ஓ., விஜய்பாபு, திட்ட இயக்குனர் மணி, ஆர்.டி.ஓ., சரவணன், பொதுப்பணித்துறை (மருத்துவமனை கட்டடங்கள் மற்றும் பராமரிப்பு) செயற்பொறியாளர் மணிவண்ணன், மாவட்ட சேர்மன் புவனேஸ்வரி பெருமாள், ஒன்றிய சேர்மன் அலமேலு ஆறுமுகம் உடனிருந்தனர்.

ஆய்வுக்குப் பின், அமைச்சர் வேலு நிருபர்களிடம் கூறியதாவது:கள்ளக்குறிச்சி மாவட்டத்தின், தலைமையிடத்தில் மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனை 398.57 கோடி ரூபாய் மதிப்பில் முழுமையாக கட்டடப்படுள்ளது. இங்கு மருத்துவக் கல்லுாரி, மருத்துவமனை மற்றும் பணியாளர்கள் குடியிருப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.இந்தாண்டே மருத்துவக் கல்லுாரி துவங்குவதற்கு மத்திய அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அதன்படி, இக்கல்வியாண்டில் 150 மாணவர்கள் கல்லுாரியில் பயின்று டாக்டராகும் வாய்ப்பு உருவாகியுள்ளது. மருத்துவக்கல்லுாரி மற்றும் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் குறைபாடுகள் இன்றி கட்டப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.கள்ளக்குறிச்சிக்கு நேரடியாக வந்து கல்லுாரியை முதல்வர் ஸ்டாலின், திறந்து வைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் ஆர்வமுடன் கோரிக்கை வைத்துள்ளனர்.

சென்னைக்கு சென்றவுடன், கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லுாரியை திறந்து வைக்க வருமாறு முதல்வர் ஸ்டாலினிடம் வலியுறுத்தி கேட்க உள்ளேன்.முதல்வரிடம் ஒப்புதல் பெற்று, திறப்பு விழா தேதி பின்னர் அறிவிக்கப்படும். விரைவில் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.இவ்வாறு அமைச்சர் வேலு கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement