dinamalar telegram
Advertisement

விண்ணை முட்டும் விலைவாசி கழுத்தை நெரிக்கும் குடும்ப பட்ஜெட்; குமுறும் சிவகங்கை மாவட்ட மக்கள்

Share
சிவகங்கை : ''என்றோ ஒருநாள் எப்போதோ விலை உயர்ந்து வந்த பெட்ரோல், டீசல் விலை தினமும் எகிறி வயிற்றில் புளியை கரைக்கிறது. இதையே காரணம் காட்டி போக்குவரத்து செலவு அதிகமென காய்கறிகளின் விலையும் அவ்வப்போது எகிறி குதித்து அலற வைக்கிறது. நான் மட்டும் என்ன விதிவிலக்கா என்பது போல ஒரு சிலிண்டர் தீர்ந்து மறுநாள் சிலிண்டர் வரும் போதெல்லாம் அபாய சங்காக விலையும் ரூ.50 வரை கூடி விடுகிறது.


நடுத்தர வர்க்கத்தினர் கூட ஒருநாளைக்கு ஒரு காய் வைத்து சமைப்பது கனவு போலாகிவிட்டது. மழையால் தக்காளி விலை தான் தங்கம் போல உயர்கிறது என ஆறுதல்பட முடியாமல் அனைத்து காய்கறிகள் விலையும் பன்மடங்கு உயர்ந்து விட்டது. மார்க்கெட் செல்லும் இல்லத்தரசிகளின் பைகள் இப்போதெல்லாம் காய்கறிகளால் நிரம்புவதே இல்லை. கைநிறைய காசை செலவழித்து பெயருக்கு காய்கறிகள் வாங்குவது போலிருக்கிறது என்கின்றனர்.

தட்டுப்பாடே விலை உயர காரணம்எம்.பூபதி ராஜா, விவசாயி, முஷ்டப்பட்டி, எஸ்.புதுார்: கார்த்திகையில் நல்ல விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கூடுதல் செலவழித்து தக்காளி நடவு செய்திருந்தோம். நல்ல விளைச்சல் தரும்நேரத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் தக்காளி விளைச்சல் அதிகரிக்க பூக்கள் பூக்காது. காயில் மழை நீர் படுவதால் அழுகிவிடும். இதனால் வழக்கத்தை விட விளைச்சல் குறைவாக தான் இருக்கும். மார்க்கெட்டில் தட்டுப்பாடு ஏற்படுவதால் விலை அதிகரிக்கின்றன. விவசாயிகளிடம் கிலோ தக்காளி ரூ.65 க்கு வாங்கும் வியாபாரிகள் அதை மக்களிடம் ரூ.120 க்கு விற்கின்றனர். உழைக்கும் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்காது. ஆனால் வியாபாரி, இடைத்தரகர்களுக்கு தான் அதிக வருவாய் கிடைக்கிறது. கார்த்திகையில் தக்காளி விளைச்சல் இருந்தும் மழையால் வீணாகியது. இதன் காரணமாகவே தட்டுப்பாடு அதிகரித்துள்ளன.

காட்சி பொருளாகும் சிலிண்டர்எஸ்.ராகதீபா, குடும்ப தலைவி, ராம்நகர், மானாமதுரை: காஸ் சிலிண்டர் விலை தற்போது ரூ.1000ஐ தொட்டுவிட்டது. மத்திய அரசு வழங்கிய மானியமும் குறைத்துவிட்டன. தற்போது காய்கறி, மளிகை பொருட்களின் விலை உயர்வதால் குடும்ப தலைவிகள் எப்படி சிக்கனமாக சமையல் செய்வது என தெரியாமல் திணறுகிறோம். தி.மு.க., அரசு தேர்தல் அறிக்கையில் சிலிண்டர் மானியம் ரூ.100 தருவதாக உறுதி அளித்தனர். ஆனால் இது வரை தரவில்லை. அதை முதல்வர் ஸ்டாலின் வழங்கினால் குடும்ப சிரமம் குறையும். இந்த நிலை நீடித்தால் வீடுகளில் காஸ் சிலிண்டர்கள் காட்சி பொருளாக மாறும் நிலை வரும்.

ஜன.,வரை விலை உயர்வுதான்எஸ்.மகேஸ்வரி, வியாபாரி, சிங்கம்புணரி: தொடர் மழையால் தக்காளி, கத்தரி அனைத்தும் செடியிலேயே அழுகி விடும். கர்நாடகா உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து தேவையான காய்கறி கிடைக்கிறது. இருப்பினும் அங்கும் மழை பெய்வதால் உற்பத்தி கடுமையாக பாதித்துவிட்டன. கடும் தட்டுப்பாடு காரணமாகவே தக்காளி கிலோ ரூ.140 க்கு உயர்ந்துவிட்டன. மற்ற காய்கறியை போல் தக்காளி பதப்படுத்தி வைக்க முடியாது. சபரிமலை, பழனிக்கு செல்லும் பக்தர்கள் மாலை அணிந்துள்ளதால் ஜன., வரை காய்கறி விலை உயர்வாக தான் காணப்படும்.

அரசு கட்டுக்குள் விலை இருக்க வேண்டும்கே.அலமேலு, குடும்பத்தலைவி, காரைக்குடி: கார்த்திகை பிறந்தாளே காய்கறிகள் விலை உயர்வு வழக்கம் தான். ஆனால் தற்போதைய சூழலில் தொடர் மழை, பெட்ரோல், டீசல் விலை உயர்வால் வழக்கத்தை விட காய்கறிகள் விலை அதிகரித்து, குடும்ப பட்ஜெட்டில் தொய்வை ஏற்படுத்திவிட்டது. சட்னி, சாம்பார் என அனைத்து உணவு பொருளுக்கும் தக்காளி அவசியம். ஆனால் அதன் விலை தான் எட்டாத துாரத்திற்கு உயர்ந்துள்ளன. காய்கறிகளை மட்டுமே நம்பியுள்ள குடும்பத்தினருக்கு வழக்கமான மாதாந்திர பட்ஜெட்டில் காய்கறி விலை உயர்வு 'துண்டு' விழ செய்கிறது. தமிழக அரசு காய்கறிகள் விலையை கட்டுக்குள் வைக்க வேண்டும்.

விலை உயர்வால் முடங்கிய வாகனம்சேகர், வாடகை கார் டிரைவர், திருப்புவனம்: கொரோனா பரவல் காரணமாக 2 ஆண்டாக வாகனங்களை ஓட்ட முடியாமல் வருவாய் பாதித்தன. அரசுக்கு ரோடு வரி, காப்பீடு தொகை கட்டவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நாள் தோறும் பெட்ரோல் விலை உயர்வால் வாடகையை மக்களிடம் கூடுதலாக கேட்க முடியவில்லை. குறிப்பாக அதிகளவில் கார்கள் வாடகைக்கு எடுக்கும் அளவிற்கு திருமணம், திருவிழாக்கள் பெரிய அளவில் நடக்கவில்லை. இ- - பாஸ் திட்டத்தால் வெளி மாநிலங்களுக்கு கூட செல்ல முடியாமல் முடங்கி கிடக்கிறோம்.அரசே மானியம் வழங்கு ராஜா, கனரக வாகன டிரைவர், திருப்பாச்சேத்தி: பெட்ரோல், டீசல் விலை உயர்வால் வாகன இன்ஜின் ஆயில், டயர், வாகன உதிரி பாகனங்களின் விலையும் கணிசமாக உயர்ந்துவிட்டன. ஆனால் மக்களிடம் வாடகையை அதிகரித்து கேட்டால் பிற வாகனங்களை நோக்கி சென்றுவிடுகின்றனர். உரிய வருவாய் இன்றி வாகனத்திற்கான தவணை கூட கட்ட முடியாமல் தவிக்கிறோம். பிற மாநிலங்களை போன்று தமிழக அரசு பெட்ரோல், டீசலுக்கான மானியத்தை வழங்கி விலை உயர்வை கட்டுக்குள் வைத்து வாகன ஓட்டிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

    மேலும் செய்திகள் :

Advertisement