பெற்றோரிடம் எதையும் மறைக்கக்கூடாது: குழந்தைகள் நல மருத்துவர் அட்வைஸ்
கோவை: குழந்தைகளுக்கு உடல், மன ரீதியாக எந்த பிரச்னை இருந்தாலும், பெற்றோரிடம் மறைக்காமல் தெரிவிக்க வேண்டுமென, பள்ளி நிகழ்ச்சியில் குழந்தைகள் நல மருத்துவர் சங்கீதா தெரிவித்தார்.பாப்பநாயக்கன்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில், 254 மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களுக்கு, எட்டு ஆசிரியர்கள் வகுப்பு கையாள்கின்றனர்.பள்ளியில் குழந்தைகள் தின விழா, போக்சோ விழிப்புணர்வு மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு தினம் என முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது. பெற்றோர், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பங்கேற்றனர்.விழாவில், குழந்தைகள் நல மருத்துவர் சங்கீதா பேசுகையில், ''குழந்தைகளுக்கு பள்ளி சூழல், பாதுகாப்பை தருவதாக இருப்பது அவசியம். வீடு, பள்ளி, வெளியிடங்களில் எப்படி நடந்து கொள்வது என்பது குறித்தும், தொடுதல் சார்ந்த விழிப்புணர்வும், ஏற்படுத்த வேண்டும். குழந்தைகள் பள்ளி, வெளியிடங்களில் என்ன நடந்தாலும், பெற்றோரிடம் தெரிவிக்க வேண்டும்.உடல், மன ரீதியாக அவர்களுக்கு பிரச்னை இருப்பதாக அறிந்தால், பெற்றோரிடம் தெரிவிப்பதோடு, குழந்தைகள் நல மருத்துவரையும் அணுகுவது அவசியம்,'' என்றார்.விழாவில், குழந்தைகள் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் சந்திரசேகர், ஆனந்த், தலைமையாசிரியர் மாலதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!