dinamalar telegram
Advertisement

ஜெ., அறிவிப்புக்கு ஸ்டாலின் ஒதுக்கினார் மணி... துவங்கியாச்சு சங்கனூர் ஓடை தூர்வாரும் பணி! அறிவித்தால் போதுமா!

Share
Tamil News
கோவை,: முன்னாள் முதல்வர் ஜெ., அறிவித்த சங்கனுார் ஓடை துார்வாரும் திட்டத்துக்கு, தற்போதைய தி.மு.க., அரசு நிதி ஒதுக்கியிருக்கிறது. அதை, முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்ததை தொடர்ந்து, பணிகள் நேற்று துவங்கின.

கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில், கவுண்டம்பாளையம் எருக்கம்பெனி அருகே துவங்கும் சங்கனுார் ஓடை, ரத்தினபுரி, ஜி.பி.சிக்னல், பாப்பநாயக்கன்பாளையம், இந்துஸ்தான் கல்லுாரி, மீனா எஸ்டேட், ஸ்டாக் எக்சேஞ்ச் வழியாக, சிங்காநல்லுார் குளம் அருகே, நொய்யல் ஆற்றில் கலக்கிறது.

இதன் கரையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி, மேட்டுப்பாளையம் ரோடு,சத்தி ரோடு, அவிநாசி ரோடு, திருச்சி ரோட்டை இணைக்கும் வகையில், 7 மீட்டர் அகலத்தில் வழித்தடம் ஏற்படுத்தும் வகையில், அரை வட்டச்சாலை உருவாக்கப்படும் என, 2014ல் மேயர் இடைத்தேர்தல் பிரசாரத்துக்கு வந்திருந்த ஜெ., வாக்குறுதி அளித்திருந்தார்.
அப்போது, நான்கு ரோடுகளையும் இணைக்கும் வகையில், 11.5 கி.மீ., துாரத்துக்கு திட்டமிடப்பட்டது. இதில், மேட்டுப்பாளையம் ரோடு முதல் அவிநாசி ரோடு வரை, 3.5 கி.மீ., துாரத்துக்கு சங்கனுார் ஓடை கரையை பலப்படுத்தி, அரைவட்டச்சாலை ஏற்படுத்த, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. போதிய நிதியாதாரம் இல்லை என கூறி, இத்திட்டத்தை கிடப்பில் போட்டு விட்டனர்.
சங்கனுார் ஓடையை துார்வாரி, அரைவட்டச் சாலை ஏற்படுத்தினால், பிரதான ரோடுகளில் போக்குவரத்து நெரிசல் குறையும் என்பதால், தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், அத்திட்டத்துக்கு துாசி தட்டப்பட்டது.முதல்கட்டமாக, ரூ.49 கோடியில் மேட்டுப்பாளையம் ரோட்டில் இருந்து சத்தி ரோடு வரை, பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தை, கோவையில் நடந்த விழாவில், தமிழக முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். இதைத்தொடர்ந்து, ஓடையை துார்வாரும் பணியை, மாநகராட்சி நேற்று துவக்கியது.ஓடையின் தரைத்தளத்தில் கருங்கற்கள் பதிக்கப்படுகின்றன. முட்செடி வளர வாய்ப்பிருப்பதாலும், கழிவு மண் அள்ள முடியாத சூழல் ஏற்படும் என்பதாலும், 4 இன்ச் உயரத்துக்கு கான்கிரீட் கலவை ஊற்றுவதற்கு ஆலோசனை நடந்து வருகிறது. ஓடை கரையின் இருபுறமும் கான்கிரீட் தடுப்புச்சுவர், கரையில் நடைபாதையுடன் சாலை வசதி ஏற்படுத்த, முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'மேட்டுப்பாளையம் ரோடு முதல் திருச்சி ரோடு வரை, சங்கனுார் ஓடையை துார்வாரி, கரையை பலப்படுத்தி, பாதை ஏற்படுத்தினால், அரைவட்டச்சாலை கிடைக்கும்.முதல்கட்டமாக, மேட்டுப்பாளையம் ரோடு முதல் சத்தி ரோடு வரை, கரை பலப்படுத்தப்படுகிறது' என்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement