உ.பி., மாநிலம் நொய்டா அருகே ஜிவாரில், நொய்டா சர்வதேச விமான நிலையத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இந்த விமான நிலையம், ஆசியாவிலேயே மிகப்பெரிய விமான நிலையம் ஆகும். இந்த விழாவில் உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டார்.
பின்னர் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: முன்பு ஜிவார் உலக வரைபடத்தில் இடம்பெறவில்லை. டில்லி என்சிஆர், மேற்கு உ.பி.,யை சேர்ந்த கோடிக்கணக்கான மக்கள் பயன்பெறுவார்கள்.இந்த பகுதியை முந்தைய அரசு புறக்கணித்தது. மேற்கு உ.பி.,யின் வளர்ச்சியை முந்தைய அரசுகள் புறக்கணித்தன என்பதற்கு உதாரணமாக இந்த விமான நிலையம் அமைந்துள்ளது.
வட இந்தியாவின் நுழைவு வாயிலாக இந்த விமான நிலையம் அமைவதுடன், அந்த மாநிலங்களை இணைக்கும். விமான போக்குவரத்து துறை வேகமாக வளர்ச்சி பெறுகிறது. இந்த விமான நிலையம், மேற்கு உ.பி.,யை சேர்ந்த ஆயிரகணக்கானோருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கும். கடந்த 7 தசாப்தங்களுக்கு பிறகு, உ.பி.,க்கு தேவையானது கிடைத்துள்ளது. இரட்டை என்ஜீன் கொண்ட அரசு காரணமாக, இந்தியாவில் அதிகம் இணைக்கப்பட்ட பகுதியாக உ.பி., திகழ்கிறது.

இந்த விமான நிலையத்தை, முந்தைய மத்திய மற்றும் மாநில அரசுகள் தடை ஏற்படுத்தியது. முக்கியத்துவம் கொடுக்கவில்லை. உள்கட்டமைப்பு என்பது அரசியல் அல்ல. அது தேசிய கொள்கையின் ஒரு அங்கம். நாங்கள் எந்த திட்டத்திற்கும் இடையூறு ஏற்படுத்தவில்லை. அதனை நிறைவேற்றுவதற்கு முக்கியத்துவம் அளித்தோம்.
முந்தைய அரசுகள் இருளில் வைத்திருந்த உ.பி., தற்போது தேசிய அளவில் மட்டுமல்லாமல், சர்வதேச அளவிலும் முத்திரை பதிக்கிறது. தற்போது சர்வதேச முதலீட்டாளர்களின் கவனத்தையும் உ.பி., ஈர்த்துள்ளது. இங்கு 5 சர்வதேச விமான நிலையங்கள் அமைந்துள்ளன. சர்வதேச நிறுவனங்களின் மையமாக அமைந்துள்ளது.
நமது நாட்டில் சில கட்சிகள் சுயநலனுக்கே முன்னுரிமை அளிக்கின்றன. அவர்களின் நலன், குடும்ப நலனை பற்றி மட்டுமே சிந்திக்கின்றனர். நாங்கள் நாட்டின் நலனுக்காக உழைக்கிறோம். இவ்வாறு பிரதமர் பேசினார்.
இந்த காலத்தில் வளர்ச்சி இல்லை எண்டால் முயற்சி இல்லை என்பது தான் அர்த்தம் எது எப்படியோ தென் இந்தியர்களின் உழைப்பையும் சேர்த்து அங்கு கொட்டுகிறீர்கள்...