dinamalar telegram
Advertisement

இன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்: வங்கி மேலாளரை சுட்டுக் கொன்று பணம் கொள்ளை

Share

இந்திய நிகழ்வுகள்

வங்கி மேலாளரை சுட்டுக் கொன்று பணம் கொள்ளை

புனே-புனேவில், வங்கியில் பட்டப்பகலில் மேலாளரை சுட்டுக் கொன்று, பணத்தை கொள்ளையடித்த கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு புனே மாவட்டம், தண்டாலி கிராமத்தில் உள்ள மாவட்ட கூட்டுறவு வங்கி கிளை, நேற்று வழக்கம் போல் செயல்பட்டுக் கொண்டிருந்தது.அப்போது, தலையில் ஹெல்ெமட் அணிந்தபடி இரண்டு பேர், வங்கிக்குள் நுழைந்தனர். கண் இமைக்கும் நேரத்தில் சரமாரியாக சுட்டனர். வங்கியில் இருந்தவர்கள் அலறியடித்து ஓடினர்.

கொள்ளையர்கள் சுட்டதில் வங்கி மேலாளர் ராஜேந்திரா, 50, மீது குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் விழுந்தார். இதன்பின், கொள்ளையர்கள் வங்கியிலிருந்த பணத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.தகவல் அறிந்து வந்த போலீசார், மேலாளரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இது பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து, கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.


கடற்படை கமாண்டர் மீது குற்றப்பத்திரிகை

புதுடில்லி: நாட்டின் கடற்படைக்கான ஆயுத கொள்முதல் மற்றும் பராமரிப்பு பணிகள் தொடர்பான ரகசிய தகவல் கசிந்ததாக சி.பி.ஐ., பதிவு செய்த வழக்கில், ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரிகள் ரன்தீப் சிங், எஸ்.ஜே.சிங் மற்றும் பணியில் இருந்த கமாண்டர் அஜித் பாண்டே உள்ளிட்டோர் கைதாகினர். இந்த வழக்கில் கைதான மற்றொரு கடற்படை கமாண்டர் ஜெகதீஷ் சிங்கிற்கு எதிராக டில்லி சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று கூறினர்.

மது கடத்தல்; 2 பேர் கைது

ராய்பூர்: சத்தீஸ்கரின் ராய்பூரில், கடத்தல் வழக்கு ஒன்றில், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை கான்ஸ்டபிள் கணேஷ் ஜெயின், 35, மற்றும் ஷேக் முயின், 32, ஆகியோர் மது கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று முன்தினம் சோதனை நடத்திய போலீசார், அவர்களிடம் இருந்து நான்கு லட்சம் ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் இருவரும் கைதாயினர்.

தமிழக நிகழ்வுகள்கூட்டுறவு சங்கத்தில் கையாடல்: முன்னாள் செயலர் கைது

ராமநாதபுரம்:ராமநாதபுரம் கூட்டுறவு சங்கத்தில் 33 லட்சத்து 8 ஆயிரத்து 362 ரூபாய் கையாடல் செய்ததாக அதன் முன்னாள் செயலரை போலீசார் கைது செய்தனர்.
ராமநாதபுரத்தில் மாவட்ட வருவாய்த்துறை கூட்டுறவு சிக்கன நாணய சங்கம் செயல்படுகிறது. இந்த சங்கத்தின் செயலராக ராமநாதபுரம் வெளிப்பட்டணம் செல்லப்பெருமாள் கோவில் தெரு ராஜா 57, பணியாற்றினார். 2016 ஆக.2 முதல் 2018 அக்.17 வரை இவர் பணியில் இருந்த காலத்தில்சங்கத்தில் கடன் பெற்ற 12 பேரிடம் கடன் தொகையை ரொக்கமாக திரும்ப பெற்றுள்ளார்.
அதன்படி 33 லட்சத்து 8 ஆயிரத்து 362 ரூபாயை வசூலித்து அதனை சங்க தினசரி பதிவேட்டில்வரவு வைக்காமல் லெட்ஜரில் மட்டும் வரவு வைத்து பணத்தை கையாடல் செய்துள்ளார். இதனால் ராமநாதபுரம் கூட்டுறவு துணைப்பதிவாளர் கோவிந்தராஜன், இவரை பணி நீக்கம் செய்தார். ராமநாதபுரம்வணிகவியல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் இளவேனில், ராஜாவை நேற்று கைது செய்தார்.
லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது
சின்னசேலம்:கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த நயினார்பாளையத்தை சேர்ந்தவர் ஜெயராமன், 36. இவர், தன் நிலத்துக்கு பட்டா மாற்றம் செய்ய, சர்வேயரான சூர்யா, 28 என்பவரை அணுகினார்.அவர், 24 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார். நேற்று மாலை 5:00 மணியளவில், ஜெயராமன் கொடுத்த பணத்தை வாங்கிய சர்வேயர் சூர்யா மற்றும் கிராம உதவியாளர் சுசீலா, 35 ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

ஓடும் காரில் பெண்ணிடம் சில்மிஷம் போதை வாலிபர் கைது; இருவருக்கு வலை
நுங்கம்பாக்கம்:ஓடும் காரில் பெண்ணிடம் மதுபோதையில் சில்மிஷத்தில் ஈடுபட்ட மூவரில் ஒருவரை கைது செய்த போலீசார் தப்பிச் சென்ற இருவரை தேடி வருகின்றனர்.
துரைப்பாக்கத்தைச் சேர்ந்தவர் கவுதம் 24. நேற்று முன்தினம் இரவு நண்பர்களான தீபக் சக்தி ஆகிய இருவருடன் தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு மது விருந்திற்கு சென்றார்.அங்கு நண்பர்களுடன் நடனமாடி கொண்டிருந்தபோது வேளச்சேரியைச் சேர்ந்த 29 வயது பெண்ணும் சேர்ந்து நடனமாடினார்.
தொடர்ந்து இரவு கவுதமும் அவரது நண்பர்களும் பெண்ணிடம் காரில் அழைத்துச் சென்று வீட்டில் விடுகிறோம் எனக்கூறி அழைத்தச் சென்றனர்.கார் நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் சென்றபோது மதுபோதையில் இருந்த மூவரும் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உடனே அப்பெண் காப்பாற்றக் கோரி சத்தம் போட்டார்.இதை கேட்ட இலங்கை துாதரக பாதுகாப்பு போலீசார் காரை விரட்டிச் சென்று மடக்கி பிடித்தனர். அப்போது கவுதம் போலீசாரிடம் சிக்கிக்கொள்ள மற்ற இருவரும் தப்பி ஓடிவிட்டனர்.
பின் நுங்கம்பாக்கம் போலீசாரை வரவழைத்து துாதரக பாதுகாப்பு போலீசார் கவுதமை ஒப்படைத்தனர். அவரை கைது செய்த போலீசார் தப்பி ஓடிய இருவரை தேடி வருகின்றனர்.
21 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கிருஷ்ணகிரி:ஊத்தங்கரை அருகே, 21 ஆயிரம் லிட்டர் எரிசாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பெங்களூரில் இருந்து புதுச்சேரிக்கு லாரியில் எரிசாராயம் கடத்தப்படுவதாக, விழுப்புரம் மத்திய புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை மிட்டப்பள்ளி அருகே வந்த 'டாரஸ்' லாரியை, போலீசார் நிறுத்தி சோதனையிட்டனர்.
லாரியில் 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 600 கேன்களில், 21 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் இருந்தது.லாரியுடன் எரிசாராயத்தை பறிமுதல் செய்து, மஹாராஷ்டிராவை சேர்ந்த லாரி டிரைவர் பாலேந்திரசிங், 33, என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மாணவியருக்கு பாலியல் தொல்லை; ஆசிரியர், தலைமை ஆசிரியை கைது
பெரம்பலுார்:அரியலுார் அருகே, இரு மாணவியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பள்ளி ஆசிரியர் 'போக்சோ' சட்டத்தில் கைது செய்யப்பட்டார். சம்பவத்தை மறைக்க முயன்ற தலைமை ஆசிரியையும் கைது செய்யப்பட்டார்.
அரியலுார் மாவட்டம், காட்டுபிரிங்கியம் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் அருள்செல்வன், 35, என்பவர் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த மாதம் 10ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.அந்த மாணவி, தலைமை ஆசிரியை ராஜேஸ்வரி, 53, என்பவரிடம் தெரிவித்துள்ளார்.
அவர், ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கும், அருள்செல்வன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.மாணவி கொடுத்த புகாரில், மாணவி மற்றும் அருள்செல்வன் ஆகியோரை அழைத்துப் பேசிய தலைமை ஆசிரியை, 'இதை பெரிதுபடுத்த வேண்டாம்' என, கூறியுள்ளார்.
இச்சம்பவத்தை அறிந்த பெற்றோர் மற்றும் கிராம மக்கள், பள்ளியை முற்றுகையிட்டு, ஆசிரியர் மீதும், சம்பவத்தை மறைக்க முயன்ற தலைமை ஆசிரியை மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.முதன்மைக் கல்வி அலுவலர் ராமன் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் துரைமுருகன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.
அரியலுார் போலீசார், அருள்செல்வனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். தலைமை ஆசிரியை ராஜேஸ்வரியையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.ஆசிரியர் இடமாற்றம்விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த நடுக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளி வணிகவியல் முதுகலை ஆசிரியர் பழனிவேல், 44. இவர் பிளஸ் 1 படிக்கும் மாணவி ஒருவரிடம், வகுப்பறையில் அநாகரீகமாக பேசியுள்ளார்.
இது குறித்த புகாரை, கோட்டக்குப்பம் மகளிர் போலீசார் விசாரிக்கின்றனர். தற்போது பழனிவேல், செஞ்சி கல்வி மாவட்டம், கீழ்மாம்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கரூரைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி, 'தற்கொலைக்கு பாலியல் தொந்தரவே காரணம்' என கடிதம் எழுதி வைத்து, 19ம் தேதி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.பாலியல் தொந்தரவு கொடுத்த நபரின் பெயரை மாணவி குறிப்பிடாததால் தனிப்படை போலீசார், குற்றவாளியை கைது செய்ய முடியாமல் திணறி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று காலை 9:30 மணிக்கு, கரூர் அரசு கலைக் கல்லுாரி மற்றும் பல்வேறு தனியார் கல்லுாரிகளை சேர்ந்த மாணவர்கள், 'மாணவி தற்கொலை வழக்கில் உரிய நீதி விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்' எனக் கோரி, கரூர் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், கடும் போக்குவரத்து நெரில் ஏற்பட்டது. போலீசார் மறியலில் ஈடுபட்ட, 70க்கும் மேற்பட்ட மாணவர்களை கைது செய்து, நகராட்சி திருமண மண்டபத்துக்கு அழைத்து சென்றனர். மதியம், 2:00 மணிக்கு விடுவித்தனர்.

'போக்சோ' வாலிபருக்கு சாகும் வரை சிறை
பெரம்பலுார்:பள்ளி மாணவியை ஏமாற்றி திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபருக்கு, சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
அரியலுார் அடுத்த ஒட்டக்கோவில் கிராமத்தைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி, 24. இவர் 2018ம் ஆண்டு பக்கத்து வீட்டில் வசிக்கும், 16 வயது மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து, திருச்சியில் குடும்பம் நடத்தி உள்ளார். இதில், மாணவி கர்ப்பமடைந்தார்.
மாணவியின் பெற்றோர் புகாரில், அரியலுார் அனைத்து மகளிர் போலீசார், தட்சிணாமூர்த்தியை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். வழக்கு, அரியலுார் மகளிர் நீதிமன்றத்தில் நடந்தது.தட்சிணாமூர்த்திக்கு, வாழ்நாள் முழுதும் ஆயுள் தண்டனையும், 40 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி ஆனந்த் தீர்ப்பு அளித்தார். மாணவிக்கு 5 லட்சம் ரூபாய் வழங்க, அரசுக்கு உத்தரவிட்டார்.

நள்ளிரவில் மக்கள் சாலை மறியல்: தேசிய நெடுஞ்சாலையில் பரபரப்பு

கிணத்துக்கடவு: தாமரைக்குளத்தில் ஊராட்சி ஆழ்துளை கிணறு அருகே, தனியார் ஆழ்துளை கிணறு அமைக்க ஊராட்சி அனுமதி வழங்கியதை கண்டித்து, மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

கிணத்துக்கடவு ஒன்றியம், நல்லட்டிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்டது தாமரைக்குளம். இங்குள்ள தாழ்த்தப்பட்டோர் குடியிருப்பு பகுதியில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.இப்பகுதியில், அம்பராம்பாளையம் கூட்டுக்குடிநீர், அவ்வப்போது வினியோகிக்கப்படுகிறது. மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, அப்பகுதியில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணற்று நீரை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில், ஆழ்துளை கிணறுக்கு, 100 மீட்டருக்குள் அப்பகுதியை சேர்ந்த ஒருவர், ஆழ்துளை கிணறு அமைக்க நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு முயற்சித்தார்.

அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.அங்கு வந்த, ஊராட்சி தலைவர் கிருத்திகாவின் கணவர் குமரேசன், தனியார் ஆழ்துளை கிணறு அமைக்க ஊராட்சி சார்பில் அனுமதி அளித்துள்ளதாக தெரிவித்ததால், மக்கள் அதிருப்தியடைந்தனர். இதையடுத்து, பொள்ளாச்சி - கோவை நான்கு வழிச்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்து, மறியல் நடந்த பகுதிக்கு வந்த போலீசார், மக்களிடம் சமரச பேச்சு நடத்தினர்.

பிரச்னைக்கு தீர்வு காண ரோட்டில் உட்கார்ந்து மறியல் செய்யக்கூடாது. கலெக்டர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு மனு கொடுத்து, தீர்வு காண வேண்டும் என, போலீசார் அறிவுறுத்தினர்.இதையடுத்து, மக்களின் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால், ஒரு மணி நேரத்துக்கும் கூடுதலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (2)

  • KV Pillai - Chennai,இந்தியா

    உ பி யில் நடைபெறும் கொலைக் குற்ற செய்திகளிலும் அங்கு யாருடைய ஆட்சி நடைபெறுகிறது என்ற விவரத்தையும் சேர்த்து தான் வெளியிடுவீர்களா?

  • meenakshisundaram - bangalore,இந்தியா

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு என்பது மோசமான நிலைக்கு சென்று கொண்டுள்ளது -தலைவர்கள் வெறுப்பு பிரச்சாரத்தை மட்டுமே செய்கிறார்கள் .மக்களின் நிலை பரிதாபத்துக்குரியதாக மாறி விட்டது சில மாதங்களில் ,-தலைவன் எவ்வழி மக்கள் அவ்வழி

Advertisement