விழி பிதுங்கும் அ.தி.மு.க.,
பெரும்பாலும் கூட்டணி கட்சியில் இருந்து யாராவது விலகி வந்தால், அவரை மற்ற கட்சிகள் சேர்க்க தயங்கும். இதற்கு நேர் மாறாக, அ.தி.மு.க., வழிகாட்டி குழு உறுப்பினரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான மாணிக்கம் நேற்று பா.ஜ.,வில் இணைந்தார். இது, அ.தி.மு.க.,வினரிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பா.ஜ.,வில் இணைந்த மாணிக்கம், அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளர். அவர் தர்மயுத்தம் துவங்கியபோது, அவரிடம் வந்து சேர்ந்த முதல் எம்.எல்.ஏ., இவர் தான். அவரை கட்சியின் வழிகாட்டி குழு உறுப்பினராக பன்னீர்செல்வம் நியமித்தார்.அனைத்தையும் துறந்து, அவர் பா.ஜ.,வில் இணைந்துள்ளார். அவரை இணைத்தது தவறு எனக் கூற முடியாமல், அ.தி.மு.க., விழி பிதுங்கி நிற்கிறது.
மந்திரி உதவியாளரின் எம்.பி., கனவு
தி.மு.க.,வில் யாருக்கு அதிகாரம் என்ற கேள்வி எழும் வகையில், எடுத்தோம்; கவிழ்த்தோம் என திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க.,வில், இரண்டு பகுதி செயலர்கள், எட்டு வட்டச் செயலர்கள் பதவி பறிக்கப்பட்டுள்ளது.
கட்சி மேலிடம் ஒப்புதல் இன்றி, கட்சி பத்திரிகையில் வழக்கமான அறிவிப்பு இன்றி, பெரிய குடும்ப உறவு நெருக்கத்தை வைத்து, புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தன்னிச்சையான நடவடிக்கைக்கு, மாவட்ட அமைச்சர் ஒருவரின் உதவியாளரின் கைங்கர்யமே காரணமாம். சமீபத்தில் அந்த உதவியாளரின் பிறந்த நாள் விழா, வி.வி.ஐ.பி., பிறந்த நாள் விழா போல தடபுடலாக நடந்துள்ளது. தி.மு.க., மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்று, பரிசு வழங்கி வாழ்த்தி உள்ளனர்.
புதிய நிர்வாகிகள் தன் ஆதரவாளர்களாக இருந்தால் தான், வரும் லோக்சபா தேர்தலில், திருச்சி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெறலாம் என்பது, அமைச்சர் உதவியாளரின் தொலைநோக்கு திட்டமாக உள்ளது. அதற்கு அச்சாரமாக தான் கூண்டோடு நிர்வாகிகள் மாற்றம்.மாவட்ட அமைச்சர்கள் இருவரும் ஒற்றுமையாக இல்லாமல், இரு துருவங்களாக இருப்பதால், கோஷ்டி பூசல் தீவிரமாகி விட்டது என்கின்றனர் உடன்பிறப்புகள்.
'பசை' பதவிக்கு பெட்டியுடன் போட்டி!
பொதுப்பணித் துறையில் சென்னை, மதுரை, திருச்சி ஆகிய மூன்று மண்டலங்கள் மட்டுமே இருந்தன. ஒவ்வொரு மண்டலத்திலும் தலைமை பொறியாளர் பதவி முக்கியம். தற்போது, திருச்சி மண்டலத்தை பிரித்து, கோவை மண்டலம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த மண்டலத்தில், கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், கரூர், நீலகிரி, தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன. இம்மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் அரசின் கட்டுமான பணிகள், பராமரிப்பு பணிகளுக்கு அதிக நிதி ஒதுக்கப்படுகிறது.எனவே, கோவை மண்டல தலைமை பொறியாளர் பதவி பசை மிகுந்த பதவியாக பார்க்கப்படுகிறது.
இப்பதவியை பிடிக்க, துறையில் உள்ள அதிகாரிகள் பலரும், அமைச்சர்கள், அரசியல்வாதிகளின் வீடுகள், அலுவலகங்களில் பெட்டியுடன் முட்டி மோதுகின்றனர்.இந்த பதவிக்கு, துறையின் முக்கிய புள்ளி, யாரை, எந்த அடிப்படையில் நியமிக்க போகிறார் என்பது தான், மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.
பாஜக ஆதரவு இல்லாமல் இவர் இவ்வளவு பணம் சேர்த்திருக்க முடியுமா? பத்து வருஷமா பாஜக என்ன செய்து கொண்டிருந்தது?