உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:
ஏ.வி.ராமநாதன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
திராவிட கொள்கையுடையோர், திருவள்ளுவரை முதலில் சமணர் என்றனர்; பின், பவுத்தர் என்றனர். அது ஏற்கப்படவில்லை என்பதால், பல நுாற்றாண்டுகளாக திருவள்ளுவர் உருவத்தில் இருந்து வந்த ஹிந்து அடையாளத்தை அழித்தனர்.
இதையும் மவுனமாக சகித்துக் கொண்டால் நாளைய தலைமுறை, 'திருவள்ளுவர் ஹிந்து இல்லை' என்ற அபத்தமான முடிவுக்கு வந்து விடுவர்; அதுவே வரலாற்றில் பதிவாகி விடும். திருவள்ளுவர், ஹிந்து மத ஞானி தான் என்பதற்கான பல ஆதாரங்களின் பட்டியல் இதோ:திருக்குறளில் திருமால், திருமகள், பிரம்மா, சிவன், இந்திரன், எமன், மன்மதன், பூமா தேவி ஆகிய ஹிந்துக்கள் மட்டுமே வழிபடும் தெய்வங்கள் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன.
தேவர், வேதம், ஊழ்வினை, இருவினை, ஏழு ஜென்மம், தவம், வேள்வி, மந்திரம், நோன்பு, தென்புலத்தார், திதி, அந்தணர், புலால் மறுத்தல், நீத்தார், பிறவாமை, நிலையாமை போன்ற இந்து மதத்தினர் நம்பும், அனுசரிக்கும் விஷயங்கள் இருக்கின்றன.ஹிந்து மத அடிப்படைக் கொள்கைகளான, 'மறுபிறவி, வினைப்பயன்' ஆகிய இரண்டும் திருக்குறளில் தெளிவாக வலியுறுத்தப்படுகின்றன.
தர்ம சாஸ்திரம், அர்த்த சாஸ்திரம், காம சாஸ்திரம் ஆகிய சமஸ்கிருத நுால்களின் சாராம்சமே, திருக்குறளில் முறையே அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் ஆக உருவெடுத்தன என்பது, அறிஞர்கள் ஆய்ந்து அறிந்த உண்மை.கடவுள் வாழ்த்து, நீத்தார் பெருமை, துறவு, மெய்யுணர்தல், அவா அறுத்தல் போன்ற அதிகாரங்களிலும், ஹிந்து கருத்துக்களை வள்ளுவர் தெளிவாக விதைத்திருக்கிறார்.

ஒரு உண்மையான ஹிந்துவால் 1,330 குறள்களையும் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால் மறுபிறவி, வினைப்பயன், பல தெய்வ தத்துவம் போன்ற கருத்துக்கள் உள்ளடக்கிய திருக்குறளை பிற மதங்களில் நம்பிக்கை உள்ளோர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். திருக்குறளில் பரவிக் கிடைக்கும் ஹிந்து கருத்துக்களை ஜீரணிக்க முடியாத, ஈ.வெ.ரா., அந்நுாலை மிகக் கேவலமாக விமர்சித்தார். அற்ப புத்தியுள்ள சிலர் திருக்குறளை, 'மதச்சார்பின்மை போர்வை'யில் திருத்துவதும், திரிப்பதும் போன்ற வேலையில் ஈடுபடுகின்றனர். மத வியாபாரிகளிடம் வாங்கிய பணத்திற்காக அவர்கள் கூவுகின்றனர்; அவ்வளவு தான்!
We started the unnecessary debate on which religion Valluvar belongs to instead of following the thirukkurals. It is common for all human beings not belonging to any religion.