ஒரே நாளில் 3.46 டி.எம்.சி., மழை நீர் வீணடிப்பு: சென்னையின் 100 நாள் குடிநீர் கடலில் கலந்தது;முறையான கட்டமைப்பு இல்லாததால் அவலம்

சென்னையின் ஒரு மாத குடிநீர் தேவை, 1 டி.எம்.சி., ஆக உள்ளது. செம்பரம்பாக்கம், பூண்டி, புழல், சோழவரம், தேர்வாய்கண்டிகை நீர்த்தேக்கங்கள் மூலம், சென்னை மக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.கன மழைஅதே போல், கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தின் மூலமும், சில பகுதிகளில் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது.
இதுமட்டுமின்றி, தனியார் விற்பனை செய்யும் 'கேன்' குடிநீரை, அதிக ளவில் மக்கள் பயன்படுத்துகின்றனர்.வர்த்தக நிறுவனங்கள், அலுவலகங்களின் தேவைக்கு, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள ஆழ்துளை குழாய்கள், கிணறுகளில் எடுக்கப்படும் 'டேங்கர்' லாரிகள் வாயிலாக நீர் சப்ளை செய்யப்படுகிறது.வட கிழக்கு பருவ மழை தான், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீராதாரமாக உள்ளது.ஆனால், ஜூன் முதல் பெய்து வரும் தென்மேற்கு பருவ மழை மட்டுமின்றி, ஆந்திராவின் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட நீரும் சேர்ந்து, சென்னை குடிநீர் ஏரிகளில், 75 சதவீதத்திற்கு மேல் நிரம்பி இருந்தன.
கடந்த சனிக்கிழமை இரவு முதல் ஞாயிறு காலை வரை கொட்டித் தீர்த்த கனமழையால், முக்கிய நீர்நிலைகளில் நீர் இருப்பு கிடுகிடுவென உயர்ந்தது.அன்றைய தினம், வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட மழை அளவின் படி, 24 மணி நேரத்தில், மயிலாப்பூரில், 23 செ.மீ., நுங்கம்பாக்கத்தில் 21 செ.மீ., அயனாவரத்தில் 18 செ.மீ., மீனம்பாக்கத்தில் 11 செ.மீ., மழை கொட்டித் தீர்த்தது. ஞாயிறு அன்றும் அவ்வப்போது விட்டு விட்டு கன மழை பெய்தது.
ஆக்கிரமிப்பு
அந்த வகையில், சென்னையின் பல்வேறு இடங்களிலும் சராசரியாக, 20 - 23 செ.மீ., மழை பதிவானது. இதனால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் நான்கு ஏரிகளும் அபாய கட்டத்தை எட்டியதால், உபரி நீர் திறக்கப்பட்டது. முறையான நீர் சேமிப்பு கட்டமைப்புகள் இல்லாததால், மழை நீரை சேமிக்க முடியாமல், அடையாறு, கூவம், பகிங்ஹாம் கால்வாய், கொசஸ்தலை ஆறு, புழல் ஏரி உபரி நீர் கால்வாய் உள்ளிட்ட நீர்வழித்தடங்கள் வழியாக மழை நீர் கடலில் கலந்து வீணானது.
அந்த வகையில், சென்னை முழுதும் பெய்த 23 செ.மீ., மழை என்பது, 3.46 டி.எம்.சி., நீர் ஆகும். இந்த நீரை வைத்து சென்னையின் 100 நாள் குடிநீர் தேவையை எளிதாக பூர்த்தி செய்திருக்க முடியும்.மழை நீரை சேமிக்கும் முறையான கட்டமைப்புகள் இல்லாததே, மழை நீர் வீணடிக்கப்பட்டதற்கு காரணம் என, வல்லுனர்கள் கருத்து தெரிவித்துஉள்ளனர்.
இது குறித்து ஓய்வு பெற்ற நீர்வளத்துறை செயற்பொறியாளர் திருநாவுக்கரசு கூறியதாவது:தென்சென்னையில் ஆக்கிரமிப்புகள் இருந்தாலும், பல ஏரிகள் இன்னும் இருக்கின்றன.ஆனால், வடசென்னையில் பெரம்பூர் பெரிய ஏரி, சித்தேரி, அயனாவரம் ஏரி, ஸ்பர்டாங்க் ஏரி, வியாசர்பாடி ஏரி, கொடுங்கையூர் ஏரி உள்ளிட்டவை தற்போது இல்லை. இங்கிருந்த வடிகால்களும், சாலைகளாக மாற்றப்பட்டு விட்டன.
இதனால், ஏரிகளில் தேங்க வேண்டிய நீர், முழுமையாக கடலில் கலந்து வீணாகியுள்ளது. சென்னையில் உள்ள நீர் வழித்தடங்கள், கழிவுநீர் வெளியேறும் அமைப்பாக பயன்படுத்தப்படுகின்றன.இவற்றில், ஆங்காங்கே தடுப்பணைகளை கட்டி, மழை நீரை சேமித்தால், பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். 'சிங்கார சென்னை 2.0' திட்டத்தில் நிரந்தர தீர்வு காண வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
திட்டமிடப்படாத சாலை, கால்வாய்!
சென்னை உள்ளிட்ட நகரங்களில் சாலையின் இரண்டு புறங்களிலும் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. சாலை புதுப்பிப்பு பணியின் போது, பழைய சாலையை தோண்டி எடுத்து, புதிய சாலை அமைக்க வேண்டும். அப்போது தான் கால்வாயில் மழை நீர் முறையாக செல்லும். கடந்த 10 ஆண்டுகளில் பழைய சாலையை அகற்றாமல், அதன் மேல் புதிய சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனால், பல இடங்களில் மழை நீர் வடிகாலில், நீர் உள் செல்லும் பகுதி மறைக்கப்பட்டுள்ளது. தலைமை செயலராக இறையன்பு பொறுப்பேற்றதும், இப்பிரச்னையை மனதில் வைத்து, 'நகர பகுதியில் சாலை அமைக்கும் போது, கட்டாயம் பழைய சாலையை தோண்டி அப்புறப்படுத்த வேண்டும்' என, உத்தரவிட்டிருந்தார். ஆனால், சென்னையில் பல சாலைகள் பழையபடியே புதுப்பிக்கப்பட்டுள்ளது.
மழை நீர் வடியாமல் இருக்க இதுவும் பிரதான காரணம். இதேபோல, மழைநீர் கால்வாய் அமைக்கும் போது, 100 ஆண்டு வெள்ள சேதங்களை கணக்கீடு செய்து, அதன்படி வடிவமைப்பை செய்ய வேண்டும். அப்போது தான், ஒரே நேரத்தில் அதிகளவில் மழை பெய்தாலும், வெள்ளம் விரைவில் வடியும். ஆனால், சென்னை மாநகராட்சி அப்படி செய்வதில்லை. அறிவியல் ரீதியாக அவை அமையாததால், மழைக்காலங்களில் வெள்ள நீர் வடிவதில் சிக்கல் ஏற்படுகிறது.
3.46 டி.எம்.சி., எப்படி?
1 சதுரமீட்டர் பரப்பில் 1 மி.மீ., மழை பெய்தால் 1 லிட்டர் நீர் கிடைக்கும் 1 சதுர கி.மீ., என்பது 10 லட்சம் சதுர மீட்டர் சென்னையின் பரப்பான 426 சதுர கி.மீ., என்பது 42.60 கோடி சதுர மீட்டர் ஒரே நாளில் சராசரியாக சென்னை முழுதும் 230 மி.மீ., மழை பெய்துள்ளது. இது 23 செ.மீ., ஆகும் 42.60 கோடி சதுரமீட்டரில், 23 செ.மீ., மழைக்கு, 9,798 கோடி லிட்டர் நீர் கிடைத்திருக்கும். இது டி.எம்.சி., அளவில் 3.46 ஆகும் 1 டி.எம்.சி., என்பது 2831.60 கோடி லிட்டர்.
வாசகர் கருத்து (41)
நமக்கு தண்ணியா முக்கியம் டாஸ்மாக் தண்ணி யாவாரம் தானே முக்கியம்
தமிழகத்தில் கேன் வாட்டர் உற்பத்தி செய்யும் 1000 தனியார் நிறுவனங்கள் தங்கள் கூடத்தில் மழை நீர் சேமிப்பு குளம் அல்லது பெரிய தொட்டி அமைத்தது பூமிக்குள் செலுத்தினால் மழை நீர் சேமிக்கபடும், தண்ணீர் உவர்ப்பு தன்மை குறையும். தமிழக அதிகாரிகள் அக்கறை எடுத்து மழை நீர் சேமிப்பு ஆய்வு செய்தால் நலம், சேமிப்பு தொட்டி அமைக்காதவர்கள் ஒருவருடகாலம் கொடுத்து பின்பற்றினால் அடுத்த மழைக்கு மழை நீர் சேமிப்பு கை கொடுக்கும்
மழை மனிதனுக்கு மட்டும் அல்ல கடலுக்கும் தான், கடலுக்கு மழை நீர் செல்ல வில்லை என்றல் மறுசுழற்சி எப்படி நடக்கும்
rain water entry to earth is good for raising ground water level.its avoid sea water entry to land. as you mentioned some of the drinking water cater by borewell. this is also storage system only.
1). மழைநீர் வடிகால் கால்வாய்கள் இன்னும் ஜந்து ஆறு சென்னையில் நிறுவ வேண்டும்.2). இதற்கு தனியார் மற்றும் வெளிநாட்டு கம்பெனிகளின் உதவியை பெறலாம்.3). அப்படி ஒரு பிளான் நல்ல முறையில் கிடைத்தால் அது தனியார் கம்பெனிகள் மூலம்தான் நிறைவேற்ற வேண்டும். லோக்கல் கவுன்சிலர்களின் இதில் உள்ளே அனுமதிக்க கூடாது.4).முதல்வர் நல்ல திறமையுள்ள ஊழல் குற்றச்சாட்டுக்கள் அற்ற IAS மற்றும் IPS மற்றும் அனைத்து மட்டங்களிலும் உள்ள அதிகாரிகளை தேர்ந்து எடுத்து மாநில முழுவதும் நலத்திட்டங்கள் மற்றும் அவர்களின் ஆலோசனைகளை பெற வேண்டும். 5). IAS, IPS மற்றும் Police துறையில் வேலைக்கு சேர்ந்தவர்கள் மனது அளவில் தூய்மையான நல்ல எண்ணங்கள் உடையவர்களாக இருப்பார்கள்.6). சூழ்நிலைகள் மற்றும் சந்தர்ப்பங்கள் அவர்களது கனவுகளை தகர்த்து விடுகிறது. 7). ஆக நல்லவர்களை கண்டறிந்து தன்னுடன் வைத்து கொள்ள வேண்டும். அள்ள கைகளை கட்சி பணியில் மட்டும் உபயோகிக்க வேண்டும். அரசு நிர்வாகங்களில் கூடாது.8). அதேப்போல முதல்வர் இப்போது கட்சி தலைவர். அதனால் பொது மனிதராக எல்லோரும் போற்றும்படி முடிவுகள் மற்றும் செயல்பாடுகள் இருக்க வேண்டும்.9).. தமிழகம் முழுவதும் உள்ள குளம் குட்டை வாய்க்கால் ஏரிகள் மற்றும் சிறு குறு ஆறுகளை தூர்வார்த்து மழை நீர் சேகரிப்புக்கு உதவ வேண்டும். நன்றி வணக்கம் ஐயா