உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:
க.வேலாயுதம், பறக்கை, குமரி மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
'வெறுமனே குற்றச்சாட்டு சொல்வதை ஒரு போதும் ஏற்க முடியாது. ஆதாரத்துடன் சொன்னால் பொறுப்பேற்று கொள்கிறேன். ஒரு நிறுவனத்திற்கு சலுகை வழங்கப்பட்டதாக கூறும் புகாருக்கு, 24 மணி நேரத்தில் ஆதாரங்களை வெளியிட வேண்டும். இல்லையெனில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, பொது வெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும். அரசியல் அரிச்சுவடி படிக்கும் அண்ணாமலைக்கு, என் நேரம், துறையின் நேரத்தை வீணடித்து பதில் அளிக்கிறோம்' என, மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியிருக்கிறார்.
மின் துறையில் ஊழல் நடந்து உள்ளது என குற்றம் சாட்டியதற்கே, 'ஆதாரம் எங்கே, 24 மணி நேரம் கெடு' என்று கதறும் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் ஒரு கேள்வி...நீங்கள், தற்போது இருக்கும் தி.மு.க., கட்சியானது, கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் போது, கவர்னரை சந்தித்து, அமைச்சர்கள் எட்டு பேர் மீது, 97 பக்க ஊழல் புகார் அடங்கிய மனுவை அளித்ததே, அது ஞாபகம் இருக்கிறதா? அதில் இருந்த ஒவ்வொரு புகாரின் முடிவிலும், 'கூறப்படுகிறது, சொல்லப்படுகிறது, நம்பப்படுகிறது, பேசிக் கொள்கின்றனர்...' என்று தான் இருந்ததே தவிர, ஆதாரம் ஏதும் இருந்ததா?

புலியானது, 'நான் சுத்த சைவமாக மாறி விட்டேன். வெறும் புல், பருத்தி கொட்டை புண்ணாக்கு தான் சாப்பிடுவேன்' என்று சொல்வது எத்தனை சதவீதம் சத்தியமோ, அதே அளவுக்கு நம்ப தகுந்தது, தி.மு.க., சார்பில், 'துாய்மையான நிர்வாகத்தை வழங்குவோம்' என்று சொல்வது!தி.மு.க.,வின் பசப்பு வாக்குறுதிகளை நம்பி, ஏமாந்து போய், ஓட்டளித்து ஆட்சியில் அமர வைத்து விட்டோம். பேய்க்கு வாழ்க்கைப் பட்டால் புளிய மரம் ஏறித் தானே ஆக வேண்டும்.
அடுத்த நாலரை ஆண்டு காலத்திற்கு, தி.மு.க., நடத்தும் நாடகங்களையும், கூத்துக்களையும் நம்புவது போல நடித்து தான் ஆக வேண்டும்.அது சரி, அண்ணாமலை தான், 'வழக்கு தொடருங்கள்... நீதிமன்றத்தில் வந்து சந்திக்கிறேன்' என்கிறாரே...அப்புறம் என்ன செந்தில் பாலாஜி அண்ணே... உங்கள் மீது குற்றம் ஏதும் இல்லையென்றால், ஒரு மான நஷ்ட வழக்கு தொடுத்து, அவரை அலைய விட வேண்டியது தானே!
புலியை குட்டியில் இருந்து வளர்க்கும் விதமாக வளர்த்தால் புலியும் சைவமாகும். என்ன ஒரு கேள்வி? அப்பா சாமி தாங்க முடியல? இந்த புலி சைவத்திலிருந்தே அசைவமும் எடுத்துக்கொள்ளும் வளர்க்கும் விதத்தை பொறுத்து. புரிந்தவர்களுக்கு வெளிச்சம்.