கணக்கெடுப்பில், தமிழ கத்தில் 6,500 சிலைகள் வரை இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதிகபட்சமாக அம்பேத்கருக்கு 1,336 சிலைகள் உள்ளன.வேலுார் மாவட்டம், அரக்கோணம் தாலுகா, கோனுர்கண்டிகையில், மேய்க்கால் புறம்போக்கில் சிலை வைப்பது தொடர்பான வழக்கு விசாரணை, சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.இவ்வழக்கில், நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கடந்த 6ம் தேதி ஒரு உத்தரவு பிறப்பித்தார்.
பொது விதிமுறைகள்
அதில், 'தமிழகத்தில் பொது இடங்கள், நெடுஞ்சாலைகள், அரசு நிலம், பொது சாலைகள், மேய்க்கால் புறம்போக்கு ஆகியவற்றில் உள்ள சிலைகளை, மூன்று மாதங்களில் கணக்கெடுத்து அடையாளம் காண வேண்டும். 'அனுமதி இல்லாத சிலைகளை ஆறு மாதங்களில் அகற்றி, பூங்கா உள்ளிட்ட இடங்களில் வைக்க வேண்டும். சிலைகள், அதற்கான கட்டமைப்பு போன்றவை குறித்த பொது விதிமுறைகளை அரசு வகுக்க வேண்டும்' என, அந்த உத்தரவில் கூறப்பட்டு இருந்தது.இந்த உத்தரவுப்படி, மாவட்டங்களில் உள்ள சிலைகள் கணக்கெடுப்பு நடந்து வருகிறது. நேற்று வரை நடந்த கணக்கெடுப்பில், தென்காசி, துாத்துக்குடி மாவட்டங்களில் சிலை கணக்கெடுப்பு இன்னும் முழுமை அடைய வில்லை.
பட்டியல்
பொது மற்றும் தனியார் இடங்களில் உள்ள அனைத்து சிலைகளும், முறையான அனுமதி பெற்றவை. நீதிமன்ற உத்தரவில் கூறியபடி சாலை, மக்கள் கூடும் இடங்கள், சட்டம் - ஒழுங்கு பிரச்னை நிலவும் இடங்களில் வரும் சிலைகளை தனியாக பட்டியல் இட்டுள்ளோம்.
ஒவ்வொரு சிலையும் வைக்கப்பட்டது முதல், தற்போது வரை, ஏதாவது பிரச்னைகளை சந்தித்துள்ளதா என்ற விபரத்தையும் பட்டியல் இட்டுள்ளோம். சிலையை சுற்றி இரும்பு கம்பிகளால் கூண்டு அமைத்து பாதுகாக்கப்படும் சிலைகளை தனியாக பட்டியலிட்டுள்ளோம்.
சில மாவட்டங்களில், சில ஜாதி, அரசியல் ரீதியிலான தலைவர்களின் சிலைகளால் பிரச்னை இருக்கலாம். சில வழக்குகள் கூட நிலுவையில் உள்ளன; அவற்றை தனியாக பட்டியலிடுகிறோம்.மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் குறிப்பிட்ட தலைவர்கள், சுதந்திர போராட்ட தலைவர்கள் போன்றோருக்கு சிலைகள் அமைக்கும் கோரிக்கை, இடம் தேர்வு, அதற்கான எதிர்ப்பு, ஆதரவு போன்ற கருத்துகளையும் பதிவு செய்து, அரசுக்கு தாக்கல் செய்ய உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஆறு மாதத்திற்குள்
போலீசார், வருவாய் துறையினரின் கணக்கெடுப்பின்படி, 2021 அக்., 21 நிலவரப்படி, தமிழகம் முழுதும் 6,308 சிலைகள் உள்ளன. துாத்துக்குடி, தென்காசி மாவட்ட சிலை கணக்கெடுப்பு முடியாத நிலையில், அந்த மாவட்ட சிலைகளையும் கணக்கில் சேர்த்தால் 6,500 சிலைகளுக்கு மேல் வரும். இதில், அதிகபட்சமாக அம்பேத்கருக்கு 1,336 சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் மிக அதிகபட்சமாக, சென்னையில் 550 சிலைகள் உள்ளன. அதற்கு அடுத்த இரு இடங்களில், 403 சிலைகளுடன் சேலம் மாவட்டமும்; 380 சிலைகளுடன் கடலுார் மாவட்டமும் உள்ளன; 41 சிலைகளுடன் திருப்பூர் மாவட்டம் கடைசியில் உள்ளது.நீதிமன்ற உத்தரவுப்படி, அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ள சிலைகள், ஆறு மாதத்திற்குள் அகற்றப்பட வேண்டும். அகற்றப்படும் சிலைகளை, 'தலைவர்கள் பூங்கா' அமைத்து அங்கு வைக்கலாம். ஆறு மாதங்களுக்குள் இதற்கான நடவடிக்கையை தமிழக அரசு முடிக்குமா என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.
சிலை வைக்க விதிகள் என்ன?
* ஊராட்சி முதல், மாநகராட்சி வரை உள்ள பகுதியில், எந்த இடத்தில் சிலை வைத்தாலும், அந்தந்த உள்ளாட்சி அமைப்பில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அதை இணைத்து, அந்த உள்ளாட்சியில் அனுமதி பெற்று, கலெக்டரிடம் விண்ணப்பிக்க வேண்டும்
* மாவட்ட போலீசிலும் தடையில்லா சான்று பெற வேண்டும். இச்சிலைக்காக ஒரு கமிட்டி அமைத்து, சிலைக்கான பொறுப்பை அவர்கள் ஏற்க வேண்டும்
* சிலை வைப்பது தொடர்பாக கலெக்டர் வாயிலாக, வருவாய் நிர்வாக ஆணையர் வாயிலாகஉள்துறைக்கு சென்று, தலைமை செயலர் அனுமதி வழங்குவார். அதன்பின், சிலை அமைப்பதற்கான உத்தரவை கலெக்டர் வழங்குவார்
* குறிப்பிட்ட சிலை அமைப்பதால் சட்டம் - ஒழுங்கு பிரச்னை வரும்; அந்த தலைவர், சமுதாயத்துக்கு, நாட்டின் இறையாண்மைக்கு எதிரானவர்; தடை செய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்தவர் அல்லது ஆதரித்தவர் என்றாலும், சிலை அமைப்பது சமூக நல்லிணக்கத்துக்கு எதிரானது என்று தெரிய வந்தாலும், தலைமை செயலரும், டி.ஜி.பி., அலுவலகமும் ஆலோசித்து முடிவெடுக்கும்
* தனியார் பட்டா நிலத்தில், தன் இயக்க தலைவர், பொது தலைவர்களின் சிலைகளை வைக்க விரும்பினால், அதற்கான அனுமதியை கலெக்டரே வழங்குவார். அச்சிலைக்கான நபர் குறித்த முழு விபரமும் பரிசீலிக்கப்பட்டு, தகுதியானவர் என்ற அடிப்படையில் அனுமதி வழங்கப்படும். - நமது நிருபர் குழு -
மக்களை பிரிவினைவாதிகளாக ஜாதி வாதியாக மாற்றிய ஈ் வே ரா பொருக்கியின் சிலைகலை முதல்ல அகற்ற வேண்டும்.