dinamalar telegram
Advertisement

சவால்களுக்கு சாதனை மூலம் பதிலளிக்கும் இந்தியா

Share
தடுப்பூசி போடத் துவங்கிய ஒன்பது மாதங்களில், 2021 அக்., 21 அன்று, 100 கோடி 'டோஸ்' தடுப்பூசியை இந்தியா நிறைவு செய்தது. 2020ம் ஆண்டின் துவக்கத்தில் நிலைமை எப்படி இருந்தது என்பதை நினைத்து பார்க்கும்போது, கொரோனாவை கையாள்வதில் இது மிகப் பெரிய பயணமாக இருந்தது. 100 ஆண்டுகளுக்கு பின், இத்தகைய பெருந்தொற்றை மனிதகுலம் எதிர்கொண்டது. மேலும், இந்த வைரஸ் பற்றி யாருக்கும் அதிகம் தெரியாது. கண்ணுக்குத் தெரியாத எதிரி வேகமாக உருமாறியதால், எத்தகைய எதிர்பாராத சூழ்நிலை உருவானது என்பதை நாம் நினைவில் கொள்கிறோம்.உலகின் மிகப் பெரிய தடுப்பூசி இயக்கத்தின் பயனாக, நம் தேசம் பலமானதாக உருவெடுத்து உள்ளது.

உண்மையான முயற்சிசமூகத்தின் பல பிரிவுகளை உள்ளடக்கிய ஒரு உண்மையான முயற்சி இது. ஒரு தடுப்பூசியை செலுத்த, ஒரு சுகாதார பணியாளருக்கு 2 நிமிடங்கள் மட்டுமே எடுத்தது என வைத்துக் கொள்ளுங்கள்.இந்த விகிதத்தில் இந்த எண்ணிக்கையை அடைய, 41 லட்சம் மனித நாட்கள் அல்லது 11 ஆயிரம் மனித ஆண்டுகள் முயற்சி தேவைப்பட்டது.வேகம் மற்றும் எண்ணிக்கையை அடைவதற்கான எந்த முயற்சிக்கும், அனைத்து தரப்பினரின் நம்பிக்கையும் முக்கியமானது. அவநம்பிக்கை மற்றும் பீதியை உருவாக்க பல்வேறு முயற்சிகள் நடந்தபோதிலும், பிரசாரத்தின் வெற்றிக்கான காரணங்களில் ஒன்று, தடுப்பூசி மற்றும் செயல்முறை மீது மக்களுக்கு ஏற்பட்ட நம்பிக்கையே ஆகும்.வெறுமனே அன்றாட தேவைகளுக்குக் கூட வெளிநாட்டுப் பொருட்களை மட்டுமே நம்பும் சிலர் நம்மிடையே உள்ளனர். இருப்பினும், கொரோனா தடுப்பூசியைப் போன்ற முக்கியமான ஒன்றில் இந்திய மக்கள் ஒருமனதாக 'மேட் இன் இந்தியா' தடுப்பூசிகளை நம்பினர்; இது ஒரு குறிப்பிடத்தக்க முன்னுதாரண மாற்றம்.

எடுத்துக்காட்டுமக்களுடன் கூட்டு எனும் உணர்வில் மக்களும், அரசும் ஒரு பொதுவான குறிக்கோளுடன் ஒன்றிணைந்தால் இந்தியாவால் என்ன சாதிக்க முடியும் என்பதற்கு தடுப்பூசி இயக்கம் ஒரு எடுத்துக்காட்டு. இந்தியா தன் தடுப்பூசி திட்டத்தை துவங்கியபோது, 130 கோடி இந்தியர்களின் திறன்களை சந்தேகிக்கும் பலர் இருந்தனர். இலக்கை அடைய இந்தியாவுக்கு 3 - 4 ஆண்டுகள் ஆகும் என சிலர் கூறினர். வேறு சிலர், தடுப்பூசி போட மக்கள் முன்வர மாட்டார்கள் என்றனர். தடுப்பூசி போடுவதில் தவறான மேலாண்மை மற்றும் குழப்பம் இருக்கும் எனக் கூறியவர்கள் இருந்தனர். இந்தியாவில் வினியோக சங்கிலிகளை நிர்வகிக்க முடியாது என்றும் சிலர் கூறினர். ஆனால், நம்பகமான பங்குதாரர்களாக மக்கள் மாற்றப்பட்டால், முடிவுகள் எவ்வளவு அற்புதமாக இருக்கும் என்பதை இந்திய மக்கள் காட்டினர்.ஒவ்வொருவரும் உரிமை எடுத்துக்கொள்ளும் போது, சாதிக்க முடியாதது எதுவும் இல்லை.

மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு நம் சுகாதார பணியாளர்கள் பல மலைகளைக் கடந்து, கடினமான நிலப்பரப்பைக் கடந்து, ஆறுகளைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது. வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது, தடுப்பூசியை போட்டுக் கொள்வதில் உள்ள தயக்கம் நம் நாட்டில் குறைந்த அளவிலேயே இருந்தது என்றால், அதற்கு நம் இளைஞர்கள், சுகாதார பணியாளர்கள், சமூக மற்றும் மதத் தலைவர்கள் என அனைவரும் பாராட்டுக்கு உரியவர்கள்.

முன்கூட்டியே தயார்தடுப்பூசி தயாரிப்பில் தங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என, பல்வேறு குழுக்களிடம் இருந்து அழுத்தங்கள் வந்தன.எனினும், நம் மற்ற திட்டங்களைப் போலவே, தடுப்பூசி இயக்கத்திலும் வி.ஐ.பி., கலாசாரம் இல்லை என்பதை மத்திய அரசு உறுதி செய்தது.கடந்த 2020ம் ஆண்டின் துவக்கத்தில் கொரோனா வைரஸ் உலகெங்கும் பரவியபோது, அதை தடுப்பூசி உதவியுடன் தான், எதிர்த்துப் போராட வேண்டி இருக்கும் என்பதை நாங்கள் நன்கு அறிந்திருந்தோம். எனவே, முன்கூட்டியே அதற்கு தயாரானோம். நிபுணர் குழுக்களை அமைத்து, கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஒரு செயல் திட்டத்தை தயாரிக்கத் துவங்கினோம்.இன்று வரை ஒரு சில நாடுகள் மட்டுமே சொந்தமாக தடுப்பூசிகளை தயாரித்துள்ளன.

100 கோடி தடுப்பூசிஇந்தியா, 100 கோடி தடுப்பூசி என்ற அளவைத் தாண்டிய நிலையில், 180க்கும் மேற்பட்ட நாடுகள் மிகவும் குறைந்த அளவிலான தயாரிப்பாளர்களையே சார்ந்துள்ளன. பல நாடுகள் தடுப்பூசிகளை பெறுவதற்காக காத்திருக்கின்றன.இந்தியாவுக்கென சொந்தமாக தடுப்பூசி இல்லையென்றால் நிலைமையை கற்பனை செய்து பாருங்கள்; இவ்வளவு பெரிய மக்கள் தொகைக்கு, போதுமான தடுப்பூசிகளை இந்தியா எவ்வாறு பெற்றிருக்கும்? அதற்கு எத்தனை ஆண்டுகள் எடுத்திருக்கும்?

இந்திய விஞ்ஞானிகள் மற்றும் தொழில் முனைவோர்களுக்கு இதற்காக நாம் பாராட்டு தெரிவிக்க வேண்டும். அவர்களின் திறமை மற்றும் கடின உழைப்பால் தான், இந்தியா உண்மையிலேயே தற்சார்பை எட்டி உள்ளது.இவ்வளவு பெரிய மக்கள் தொகையின் தேவைகளைப் பூர்த்தி செய்வதன் வாயிலாக, தாங்கள் யாரையும் விட குறைவானவர்கள் இல்லை என்பதை, நம் தடுப்பூசி தயாரிப்பாளர்கள் காட்டி உள்ளனர்.மத்திய அரசின் அனைத்து துறைகளும் ஒன்றிணைந்து, தடுப்பூசி தயாரிப்பாளர்களுக்கு தேவையான வசதிகளை வழங்கி, அவர்களுக்கு இருந்த தடைகளை நீக்கின.
இந்தியாவைப் போன்ற பெரிய நாட்டில் உற்பத்தி செய்தால் மட்டும் போதாது. கடைசி மைல் வினியோகம் மற்றும் தடையற்ற போக்குவரத்து மீதும் கவனம் செலுத்த வேண்டும். இது தொடர்பான சவால்களைப் புரிந்துகொள்ள, தடுப்பூசிகளின் பயணத்தை சற்று எண்ணிப் பாருங்கள்.புனே அல்லது ஐதராபாதில் உள்ள ஒரு ஆலையில் இருந்து, மற்ற மாநிலத்தில் இருக்கும் ஒரு மையத்திற்கு தடுப்பூசிகள் கொண்டு செல்லப்படுகின்றன. அங்கிருந்து தடுப்பூசி மையத்தை அவை அடைகின்றன. விமானங்கள் மற்றும் ரயில்களின் ஆயிரக்கணக்கான பயண சேவைகள் இதற்கு தேவைப்படுகின்றன.

உறுதி செய்ததுஇந்த முழு பயணத்தின் போதும், வெப்பநிலையை ஒரு குறிப்பிட்ட வரம்பில் பராமரிக்க வேண்டியது அவசியமாகும். இவை அனைத்தும் கண்காணிக்கப்படும்.இதற்காக, ஒரு லட்சத்திற்கும் அதிகமான குளிர்சாதன உபகரணங்கள் பயன்படுத்தப்படுகின்றன. தடுப்பூசிகளின் வினியோக அட்டவணை குறித்து, மாநிலங்களுக்கு முன்கூட்டியே அறிவிக்கப்படும். இதனால், அவர்கள் தங்கள் செயல்பாடுகளை மிகச் சிறப்பாக திட்டமிட முடியும்.இதன் காரணமாக, தடுப்பூசிகள் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட நாட்களில் மாநிலங்களுக்கு சென்றடைந்தன. சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் இதற்கு முன் நடந்திராத முயற்சி இது.

இந்த முயற்சிகள் அனைத்தும், 'கோ - வின்' என்ற வலுவான இணையதள தொழில்நுட்பம் வாயிலாக வலுவூட்டப்பட்டன. தடுப்பூசி இயக்கம் சமநிலையானது, அளவிடக் கூடியது, கண்காணிக்க கூடியது மற்றும் வெளிப்படையானது என்பதை இது உறுதி செய்தது.தேவைப்படுவோருக்கு தடுப்பூசி வழங்கவும், வரிசையில் யாரும் முந்திச் செல்ல வாய்ப்பில்லை என்பதை உறுதி செய்யவும் இந்த தொழில்நுட்பம் உதவியாக இருந்தது. ஒரு ஏழைத் தொழிலாளி தன் சொந்த கிராமத்தில் முதல் டோசையும், அதே தடுப்பூசியின் இரண்டாவது டோசை அவர் வேலை செய்யும் நகரத்தில், தேவையான இடைவெளிக்கு பின் போட்டுக் கொள்ள முடியும் என்பதையும் கோ - வின் உறுதி செய்தது.வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க, தடுப்பூசி குறித்த விபரங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ளும் வசதியும் இதில் ஏற்படுத்தப்பட்டது. இந்தியாவில் மட்டுமல்ல, உலகின் மற்ற பகுதிகளிலும் இதுபோன்ற முயற்சிகளுக்கு எந்த முன்னுதாரணமும் இல்லை.

130 கோடி மக்கள்
'நம் நாடு 130 கோடி மக்களைக் கொண்ட இந்திய அணி என்ற உணர்வில் முன்னோக்கி செல்கிறது' என, 2015ம் ஆண்டு சுதந்திர தின உரையில் கூறினேன். மக்களின் பங்கேற்பு ஜனநாயகத்தின் மிகப்பெரிய பலம். 130 கோடி இந்தியர்களின் பங்கேற்பின் வாயிலாக நாட்டை வழிநடத்தினால், நம் நாடு ஒவ்வொரு கணமும் 130 கோடி படிகள் முன்னேறும். நம் தடுப்பூசி இயக்கம், மீண்டும் இந்த, 'டீம் இந்தியா'வின் சக்தியை நிரூபித்துள்ளது. தடுப்பூசி போடுவதில் நாம் அடைந்துள்ள வெற்றி, 'ஜனநாயகத்தால் சாதிக்க முடியும்' என்பதை இந்த உலகுக்கு உணர்த்தி உள்ளது. இது, உலகின் மிகப்பெரிய தடுப்பூசி இயக்கத்திற்கு கிடைத்த வெற்றி. தடுப்பூசி வினியோகத்தில் நாம் பின்பற்றிய நடைமுறை, இனி நமக்கு மட்டுமல்லாமல், உலக நாடுகளுக்கே முன் மாதிரியாக திகழும் என நம்புகிறேன்.

நரேந்திர மோடி
பிரதமர்

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (11)

 • Kumar - Madurai,இந்தியா

  100 கோடி.சாதித்துவிட்டோம். வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.

 • raja - Cotonou,பெனின்

  வாழ்த்துக்கள் சிங்கமே...பாராட்டுக்கள் அனைவருக்கும்.....எங்க பப்பு பப்பி சத்தத்தையே காணும்.....

 • balakrishnan - Mangaf,குவைத்

  பிரதமர் மற்றும் அனைவரின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி .

 • மோகனசுந்தரம் -

  ஐயா வாழ்த்துக்கள், பாராட்டுகள். இதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கடவுள் ஆசிர்வதிக்குமாறு வேண்டுகிறேன்.

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  இப்படி ஆகும் என்று தெரிந்திருந்தால் முதலிலேயே 'மோடி ஊசி' என்று சொல்வதை தவிர்த்திருப்பார்கள்.

Advertisement