dinamalar telegram
Advertisement

பட்டுப்போனதை வெட்டச் சொன்னா வேலியே பயிரை மேய்ந்தால்... பச்சை மரத்தை பதம் பார்த்துட்டாங்க!

Share
Tamil News
திருப்பூர்:திருப்பூர், மங்கலம் ரோட்டில் பட்டுப்போன மரங்களை வெட்ட அனுமதி பெற்றுவிட்டு, பச்சை மரங்கள் வெட்டப்பட்டுள்ளன.கடந்த 20 ஆண்டுகளுக்கு முன், திருப்பூர் மங்கலம் ரோட்டில், 'வெற்றி' அமைப்பு சார்பில், நடப்பட்ட மரக்கன்றுகள், இன்று மரமாக வளர்ந்துள்ளன. இந்நிலையில், மங்கலம் ரோட்டோரம் உள்ள மரங்களைச் சேதப்படுத்தியதோடு, பெரிய கிளைகளை வெட்டி, வாகனங்களில் சிலர் ஏற்றிச்செல்வதை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
தகவல் அறிந்த 'வெற்றி' அமைப்பினர், அங்கு விரைந்து சென்று தடுத்தனர். கனமழை பெய்யும் நேரத்தில், மரங்கள் முறிந்து விழுந்து விபத்து ஏற்படுவதை தவிர்க்கும் வகையில், பட்டுப்போன மரங்களை மட்டும் அகற்ற, மாவட்ட சாலை பாதுகாப்பு குழு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், 11 பட்டுப்போன மரங்களை அகற்ற, அனுமதி வழங்கியுள்ளனர். ஆனால், இந்த அனுமதியைப் பயன்படுத்தி, பச்சை மரங்களும் வெட்டப்பட்டுள்ளன; இது, அதிகாரிகள் துணையின்றி சாத்தியமில்லை என்று பசுமை ஆர்வலர்கள் குற்றம்சாட்டினர்.
'வெற்றி' அமைப்பினர் கூறியதாவது:சென்ட்ரல் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பச்சை மரத்தை வெட்ட, ஆர்.டி.ஓ., அனுமதி அவசியம்; ஆனால், வருவாய்த்துறை அனுமதி பெறாமல், பச்சை மரங்களை வெட்டியுள்ளனர்.பட்டுப்போன, 11 மரங்களை வெட்டி, மூன்று நாட்களுக்குள் அப்புறப்படுத்த வேண்டுமென, நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் அனுமதி வழங்கியுள்ளார். ஏலம் எடுத்த, அவிநாசி ஆட்டையம்பாளையத்தை சேர்ந்த பழனிசாமி என்பவர், அதை ஆதாரமாக வைத்துக்கொண்டு, கடந்த, 10 நாளாக மரங்களை வெட்டி வருகிறாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அனுமதி பெறாமலேயே, ஒரு வேன் நிரம்பும் அளவுக்கு பச்சை மரங்களை வெட்டியது குறித்து, மாவட்ட நிர்வாகம் விசாரிக்க வேண்டும். திட்டப்பணிக்கு மரங்களை அகற்ற வேண்டிய நிலை வந்தாலும், மாவட்ட பசுமை குழுவின் அனுமதியுடன், அவர்கள் மேற்பார்வையில் மட்டும் மரம் வெட்ட வேண்டும்.வெட்டப்படும் மரங்களை காட்டிலும், 10 மடங்கு மரக்கன்றுகளை நட்டு வளர்க்க உத்தரவாதம் அளிக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, 'சாலை பாதுகாப்பு குழுவின் உத்தரவுப்படியே, மரங்களின் கிளை அகற்றப்பட்டது. பட்டமரங்கள் ஏலம் விட்டு வெட்டப்பட்டன. சாலை பாதுகாப்பு குழு தீர்மான விவரங்கள், போலீசார் பார்வைக்கு சமர்ப்பிக்கப்படும்,' என்றனர்.மரம் வெட்டப்பட்டது தொடர்பான புகாரின் பேரில் மங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் சி.எஸ்.ஆர்., வழங்கப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • duruvasar - indraprastham,இந்தியா

    ஓ கே ஓகே. நான் கூட தேசிய நெடுஞ்சாலை பாதுகாப்பு குழு என நினைத்து விட்டேன். அவர்கள்தான் திட்டமிட்டு தமிழர்களை வஞ்சித்து கொண்டிருப்பவர்கள். அனுமதி அளித்தது மாநில சாலை பாதுகாப்பு குழு. அவர்களின் அனுமதி என்றால் தமிழக மக்கள் நலம் சார்ந்ததாகத்தான் இருக்கும். அப்பாடா..

Advertisement