dinamalar telegram
Advertisement

மூன்று கி.மீ., ரோட்டை அகலப்படுத்த... இதுவல்லவோ சாதனை! பத்தாண்டுகள் கடத்திய தமிழக அரசு!

Share
Tamil News
கோவையின் முக்கிய ஆன்மிகத் தலமாகவுள்ள மருதமலைக்குச் செல்லும் ரோட்டை அகலப்படுத்தும் பணி, பத்தாண்டுகளாக இழுத்துக் கொண்டிருக்கிறது.கோவையில் மேற்கு மலைத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மருதமலைக்கு, தமிழகம் மற்றும் கேரளாவிலிருந்துஆண்டு முழுவதும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.

வழியிலுள்ள பாப்பநாயக்கன்புதுார், வடவள்ளி போன்ற பகுதிகள், வளர்ந்து வரும் முக்கிய குடியிருப்புப் பகுதிகளாக உள்ளன. இதனால் மருதமலை ரோட்டில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை,நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது.லாலி ரோடு சந்திப்பில் ஏற்படும் கடுமையான போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, அந்தப்பகுதியில் மேம்பாலம் கட்டுவதற்கு, மாநில நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டுள்ளது.பி.என்.புதுாரிலிருந்து வடவள்ளி வரையிலான ரோடு, ஏற்கனவே அகலப்படுத்தப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக, காளிதாஸ் தியேட்டர் பகுதியிலிருந்து பாரதியார் பல்கலை வரையிலுமான 2.7 கி.மீ., துாரத்துக்கு, தற்போது ஏழு மீட்டர் அகலமுள்ள ரோட்டை 22 மீட்டர் ரோடாக அகலப்படுத்த, 2011ம் ஆண்டிலேயே திட்டம் வகுக்கப்பட்டது.நிலம் கையகப்படுத்துவதற்கு அரசாணையும் வெளியிடப்பட்டு, 2013ம் ஆண்டில் 9 கோடியே 80 லட்ச ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டது.ஆனால் அந்த அளவுக்கு ரோட்டை அகலப்படுத்துவதால், ஏராளமான கட்டடங்கள் இடிபடும் அபாயம் ஏற்பட்டதால், கடும் எதிர்ப்பு கிளம்பியது.
வேளாண் பல்கலை, வடவள்ளி, பி.என்.புதுார் போன்ற பகுதிகளில் இதற்கும் குறைவான அகலத்தில்தான் ரோடு அமைக்கப்பட்டுள்ளது.அந்தப் பகுதிகளைக் கடந்து, பாரதியார் பல்கலைக்கும், மருதமலைக்கும் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவுஎன்பதால், இங்கு 22 மீட்டர் அகலத்துக்கு ரோடு அமைக்கத் தேவையில்லை என்று மக்கள் தரப்பில் வாதிடப்பட்டது.மாநில அளவிலான குழுவில் பேச்சுவார்த்தை நடத்தியும் பயன் கிடைக்கவில்லை. இதனால், நில நிர்வாக ஆணையரிடம், கட்டாய நிலமெடுப்பு செய்வதற்குப் பரிந்துரை செய்யப்பட்டது.
கடந்த ஆண்டில், 22 மீட்டர் அகலத்தில் ரோடு அமைக்கும் பணியைத் துவக்குவதற்கு, அன்றைய அமைச்சர் வேலுமணி முன்னிலையில் பூஜையும் போடப்பட்டது. மீண்டும் எதிர்ப்பு கிளம்பியதால் பணி நிறுத்தி வைக்கப்பட்டது.மாநில நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டுள்ள 22 மீட்டர் ரோட்டுக்குப் பதிலாக, இரு புறமும் தலா ஏழரை மீட்டர் அகலத்தில் ரோடு அமைத்து, நடுவில் 'சென்டர் மீடியன்' சேர்த்து மொத்தம் 18.6 மீட்டர் அகலத்தில் ரோடு அமைக்கலாம் என்று மக்கள் தரப்பில் கருத்துத் தெரிவிக்கப்பட்டது.
அப்படி ரோடு அமைத்தாலும், இரு புறத்திலும் ஒன்றரை மீட்டர் அளவுக்கு, சாக்கடை மற்றும் மழை நீர் வடிகால் அமைக்க வேண்டுமென்பதால், 22 மீட்டர் அகலத்துக்கு நிலம் தேவையென்று துறை அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இருப்பினும், மக்களின் கருத்தை ஏற்று, 18.6 மீட்டர் அகலத்தில் ரோடு அமைக்கும் திட்டத்துக்கு, மாவட்ட சாலை பாதுகாப்புக்குழுவில் கலெக்டரால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.அதற்குப் பின் இப்போது வரை எந்தப் பணியும் நடக்கவில்லை.
2011ல் போடப்பட்ட நில ஆர்ஜித பிரேரணையை மாற்றி, புதிதாகத் தயாரிக்குமாறு மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு தற்போது அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு இந்த ரோடு விரிவாக்கம், கானல் நீராகத் தள்ளிக்கொண்டே போகிறது.மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'இன்னும் சில நாட்களில், திருத்தப்பட்ட நில ஆர்ஜித பிரேரணை (Land Plan Shedule) சமர்ப்பிக்கப்பட்டு விடும். அதன்படி வருவாய்த்துறை நிலம் கையகப்படுத்திக் கொடுத்தால், உடனடியாகப் பணிகளைத் துவக்க, நெடுஞ்சாலைத்துறை தயாராகவுள்ளது' என்றனர்.மூன்று கி.மீ., ரோட்டை அகலப்படுத்த பத்தாண்டுகளைக் கடத்தியதுதான், நமது தமிழக அரசின் 'தன்னிகரில்லா' சாதனை! -நமது நிருபர்-
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • duruvasar - indraprastham,இந்தியா

    இந்தமாதிரியே எல்லா இடங்களிலும் மக்களை வைத்து கோரிக்கைகளை விட செய்ய முடியும். நவராத்திரிக்கு முன்பே கோவில்களை திறக்கவேண்டும் என அனைத்து தரப்பு மக்களுக்கும் கோரிக்கை வைத்தார்கள். என்ன ஆயிற்று ?

Advertisement