dinamalar telegram
Advertisement

தாறுமாறாக கிடக்கிறது நேரு ஸ்டேடியம்: என்ன, விளையாடறீங்களா?பயிற்சிக்கு ஜி.எஸ்.டி.,யுடன் கட்டணமாம்!

Share
Tamil News
கோவை:தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் பிளஸ்2 வரை, இலவச கல்வி அளிக்கப்படும் சூழலில் கோவை, நேரு ஸ்டேடியத்தில் தடகள பயிற்சி மேற்கொள்ளும் வீரர்களிடம் ஜி.எஸ்.டி., யுடன் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வசூலிக்கப்படும் கட்டணத்துக்கு ஏற்ற அடிப்படை வசதி, விளையாட்டு உபகரணங்கள் இருந்தால் பரவாயில்லை; அதுவும் கிடையாது என்பதால் விளையாட்டு வீரர்கள் வேதனைப்படுகின்றனர்.
கோவையில் உள்ள பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் தனியார் விளையாட்டு அமைப்பினர் தடகள பயிற்சி மேற்கொள்ள, நேரு ஸ்டேடியத்தை பயன்படுத்துகின்றனர். கொரோனா தொற்று குறைந்துள்ளதால், அரசு வழிகாட்டுதலின் படி, சுழற்சி முறையில் காலை மற்றும் மாலை நேரங்களில் பயிற்சி மேற்கொள்ள, வீரர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
சிந்தெடிக் ஓடுதளப்பாதையில் பயிற்சி பெறும் வீரர், வீராங்கனைகள் மாநிலம், தேசிய அளவிலான தடகள போட்டியில் பதக்கங்களை குவித்து, கோவைக்கு பெருமை தேடி தருகின்றனர்.இப்படி நம் வீரர்களின் திறமை குறித்து பெருமைப்பட ஆயிரமிருக்க, சிந்தெடிக் மைதானம், உள்விளையாட்டு அரங்குகளில் பயிற்சி பெறும் வீரர்களிடம், மாத கட்டணம் வசூலிக்க வேண்டுமென, மாவட்ட விளையாட்டு அலுவலர்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (எஸ்.டி.ஏ.டி.,)அறிவுறுத்தி, அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
அதுவும் ஜி.எஸ்.டி.,யுடன்!நேரு ஸ்டேடியத்தில் பயிற்சி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மாதம், 100 ரூபாயுடன் ஜி.எஸ்.டி., கல்லுாரி மாணவர்களுக்கு 150 ரூபாயுடன் ஜி.எஸ்.டி., இதர பிரிவினருக்கு, 200 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.இத்தொகையை 'தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், உறுப்பினர் செயலர்' என்ற பெயரில் வரையோலை எடுத்து, மாவட்ட விளையாட்டு அலுவலரிடம் கொடுக்க வேண்டும்.
1ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை இலவச கல்வி அளிக்கும் தமிழகத்தில், விளையாட்டுக்கு பயிற்சி மேற்கொள்ள ஜி.எஸ்.டி.,யுடன் கட்டணம் வசூலிப்பதை, விளையாட்டு வீரர்கள் குமுறலுடன் பார்க்கின்றனர்.உடை மாற்ற வசதியில்லை!மைதானத்தில் தரமான குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, பெண்கள் உடைமாற்றும் அறை, மாலை நேரங்களில் ஸ்டேடியத்தில் விளக்கு, செயற்கை ஓடுதளப்பாதை சேதம் என, பிரச்னைகள் எக்கச்சக்கம்.தடகளத்தில் தடம் பதிக்க நினைக்கும் இளம் சாதனையாளர்களிடம் கட்டணம் வசூலிப்பதை நிறுத்திவிட்டு, மைதானங்களை மேம்படுத்தி, வீரர்களின் குறைகளை பூர்த்தி செய்தால், இன்னும் பல தரமான விளையாட்டு வீரர்களை உருவாக்க முடியும் என்கின்றனர் சீனியர் பயிற்சியாளர்கள்.
தடகள வீரர்கள் சிலர் இது குறித்து நம்மிடம் புலம்பித்தீர்த்ததாவது:பல ஆண்டுகளாக கேட்கப்படும் கோரிக்கைகளில், ஒன்று கூட இதுவரை நிறைவேறவில்லை. சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் தான், சிறந்த தடகள வீரர்கள் உள்ளனர். ஆனால், இங்கு வந்து பார்த்தால் தானே தெரியும், ஸ்டேடியத்தின் அவல நிலை.
சிந்தெடிக் பாதையை மேம்படுத்தாததால், பல வீரர்களுக்கு காலில் காயம், எலும்பு முறிவு ஏற்பட்டு விளையாட்டை பாதியில் நிறுத்தி விட்டனர். இப்படிப்பட்ட மைதானத்திற்கு தான் நாங்கள் கட்டணம் செலுத்துகிறோம்.சென்னையிலும்தான் பயிற்சிக்கு கட்டணம் வசூலிக்கப்படுகின்றது. ஆனால், அங்கு அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி தருகின்றனர். ஆனால், கோவையில் எந்த விளையாட்டு உபகரணங்களும் கொடுப்பதில்லை. இந்த லட்சணத்தில் பயிற்சி பெற ஜி.எஸ்.டி.,யுடன் கட்டணம் வசூலிப்பது அநியாயம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
விளையாட்டு வீரர்களின் குமுறல்களை, மாவட்ட விளையாட்டு அலுவலர் ரவிச்சந்திரனிடம் அப்படியே எடுத்துச் சென்று கொட்டினோம்.அதற்கு அவர், ''தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், உறுப்பினர் செயலர் அலுவலக பெயரில் தான் வரையோலை எடுக்கப்படுகிறது. எங்களுக்கு ஒரு ரூபாயும் கிடைப்பது இல்லை. வீரர்களின் புகார்கள் எஸ்.டி.ஏ.டி., அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடைமாற்று அறை அமைக்க, பொதுப்பணித்துறையிடம் ஒப்பந்த புள்ளி பெற்று, உறுப்பினர் செயலருக்கு அனுப்பப்பட்டுள்ளது,'' என்று பிடி கொடுக்காமல் பேசினார்.திறமையான நம் வீரர்களுக்கு வசதிகளை செய்து கொடுக்காமல், சர்வதேச போட்டிகளில் பதக்கம் கிடைக்கவில்லையே என்று புலம்புவது, எந்த ஊர் நியாயம் என்பதை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் விளக்க வேண்டும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • S. Narayanan - Chennai,இந்தியா

    விளையாட்டு துறைக்கு ஒதுக்கிய நிதி என்ன ஆச்சு. ஏப்பம் தானா. விடியல் விடியல்.

Advertisement