dinamalar telegram
Advertisement

வனப்பகுதியில் களவு போகும் கேமராகள்: மாயமாகும் மர்மம்! தொடர் சம்பவங்களால் போலீசார் அதிர்ச்சி

Share
Tamil News
பெ.நா.பாளையம்:போளுவாம்பட்டி, காரமடை அடுத்து 'மாவோயிஸ்ட்' நடமாட்டம் உள்ள தடாகம் பகுதியில் இரு கேமராக்கள் காணாமல் போனது போன்ற தொடரும் சம்பவங்கள் போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மண்டலத்தில் உள்ள அனைத்து வனச்சரக பகுதிகளிலும் புலிகள் கணக்கெடுப்பு கடந்த மாதம் துவங்கியது. இதற்காக, ஒவ்வொரு வனச்சரகத்திலும், ரோந்து செல்லும் பகுதியை பொருத்து தலா இரண்டு முதல் நான்கு கேமராக்கள் வைத்து கண்காணிக்கப்படுகின்றன. தலா, 30 ஆயிரம் மதிப்புள்ள கேமராக்கள், புலிகளின் உயரத்திற்கு ஏற்ப, விலங்குகள் நடமாட்டம் உள்ள இடங்களில், நிலத்தில் இருந்து மூன்று முதல் நான்கு அடி உயரத்தில், அங்குள்ள மரங்களில் பொருத்தப்பட்டன.கேமராக்களை வனவிலங்குகள் தாக்கி சேதப்படுத்தாமல் இருக்க, அதற்கான இரும்பு பெட்டிகளில் கேமராக்கள் வைக்கப்பட்டு, பிரத்யேக சாவி கொண்டு பூட்டப்பட்டது.
கேமராவுக்குள் இருக்கும் 'ஜிப் பைலில்' பதிவான படங்களை பதிவிறக்கம் செய்து, மீண்டும் கேமராவுக்குள் அதை பொருத்தி, பதிவாகியுள்ள புலிகளின் விவரங்கள், உயர் அதிகாரிகளுக்கு வனச்சரக அதிகாரிகளால் தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில், தமிழக - கேரள எல்லையில், மாவோயிஸ்டுகள் நடமாட்டம் உள்ள துாவைப்பகுதியை ஒட்டிய அடர்ந்த வனப்பகுதியில், புலிகளை கணக்கெடுக்க பொருத்தப்பட்ட இரு கேமராக்கள் தற்போது காணாமல் போனது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்களின் நடமாட்டத்தை கண்காணிக்கும் வகையில், கேமராக்கள் இருப்பதாக கருதி, மாவோயிஸ்ட்கள், அதை எடுத்து சென்றிருக்கலாம் என்ற தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விசாரணை நடக்கிறது!வனத்துறையினர் கூறுகையில்,'ஆனைகட்டியில் கடந்த மாதம் பொருத்தப்பட்ட இரு கேமராக்கள் தற்போது காணாமல் போனது குறித்து தடாகம் போலீசில் புகார் அளித்து, புகார் மனு ரசீது பெறப்பட்டுள்ளது. கேமராக்கள் காணாமல் போனதால், அதில் இருந்த பதிவுகள் குறித்த விபரம் தெரியவில்லை.
கேமரா இருந்த பகுதியை சுற்றியுள்ள வனப்பகுதியில், புதிய நபர்களின் நடமாட்டம் இருந்ததா என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது' என்றனர்.காப்பீடு பெறவே!தடாகம் போலீசார் கூறுகையில்,'புகார் மனு பெறப்பட்டு விசாரணையில் உள்ளது. பெரும்பாலும், இது போன்ற நிகழ்வில், வனத்துறையினர் காணாமல் போகும் கேமராக்களுக்கான காப்பீடு தொகையை பெறவே, புகார் மனு ரசீதுகளை பயன்படுத்திக்கொள்வர்' என்றனர்.
கடந்த சில மாதங்களில் போளுவாம்பட்டியில் இரண்டு, காரமடை வனப்பகுதியில் இரண்டு என நான்கு கேமராக்கள் காணாமல் போனதாக வனத்துறையினர் போலீசில் புகார் அளித்துள்ளனர். தற்போது, தடாகம் பகுதியில் இரு கேமராக்கள் காணவில்லை. ஆனால், இதுவரை கேமராக்களை எடுத்துசென்ற ஒருவர்கூட கண்டறியப்படவில்லை. ஒருவேளை காப்பீடு தொகைக்காக கேமராக்கள் வேண்டுமென்றே பறிக்கப்படுகிறதா அல்லது உண்மையாகவே பறிபோகிறதா என்பது வனத்துறைக்கே வெளிச்சம்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement