dinamalar telegram
Advertisement

இன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்

Share

இந்திய நிகழ்வுகள்அவதுாறு புகார்: ஒருவர் கைது

சம்பல்: உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த அபிஷேக் குப்தா என்பவர், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் உள்ளிட்ட பிரபலங்களின் படத்தை 'மார்பிங்' செய்து, பொம்மை போல உருவாக்கி சமூக ஊடகங்களில் அவதுாறு பரப்பியுள்ளார்.இது குறித்து, 'டுவிட்டர்' நிறுவனம் அளித்த புகாரின் அடிப்படையில் அபிஷேக் குப்தாவை போலீசார் கைது செய்துள்ளனர்.

வெடி விபத்து: 4 பேர் காயம்

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் காஷ்மீர் செல்லும் ரயிலில், 'டெட்டனேட்டர்' எனப்படும் வெடி பொருள் அடங்கிய பெட்டிகளை துணை ராணுவத்தினர் ஏற்றினர். அப்போது ஒரு பெட்டி கை தவறி கீழே விழுந்ததில் வெடி பொருட்கள் வெடித்து சிதறின. இந்த விபத்தில் துணை ராணுவத்தைச் சேர்ந்த நான்கு பேர் காயம் அடைந்தனர்.

மின்சாரம் தாக்கி 3 பேர் பலி

கும்லா: ஜார்க்கண்ட் மாநிலம் துமர்டோலி மொஹல்லாவில், கட்டுமான பணிகளில் பயன்படுத்தப்படும் கான்கிரீட் கலவை இயந்திர வண்டியை தொழிலாளர்கள் தள்ளிச் சென்றனர். அப்போது, உயர் அழுத்த மின்சார கம்பியில் அந்த வண்டி லேசாக உரசியது. அந்த வண்டியை தள்ளிச் சென்ற தொழிலாளர்களை மின்சாரம் தாக்கியது. இதில் மூன்று தொழிலாளிகள் உயிரிழந்தனர்

.மிரட்டல் விடுத்தவர்கள் கைது

கோல்கட்டா: பிரபல ஹிந்துஸ்தானி பாடகர் உஸ்தாத் ரஷீத் கானிடம், 20 லட்சம் ரூபாய் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த, அவரது முன்னாள் ஊழியர்கள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் முதலில் 50 லட்சம் ரூபாய் கேட்டு, பின் 20 லட்சம் ரூபாய் வரை இறங்கி வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

தமிழக நிகழ்வுகள்ஆதம்பாக்கம் ரவுடி கொலை பெண் உள்ளிட்ட 9 பேர் கைது

ஆதம்பாக்கம் : ஆதம்பாக்கத்தில், பிரபல ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், ஒரு பெண் உள்ளிட்ட 9 பேரை, போலீசார் கைது செய்தனர்.

சென்னை, ஆலந்துாரைச் சேர்ந்தவர் நாகூர் மீரான், 28; தென்சென்னையில் பிரபல ரவுடி. சில மாதங்களுக்கு முன், காங்., கட்சியில் இணைந்த இவர், மேடவாக்கம், சந்தோஷபுரம், விக்னராஜபுரத்தில் வசித்தார். கடந்த, 14ம் தேதி மாலை, ஆதம்பாக்கம், அம்பேத்கர் நகர், மூன்றாவது தெருவில் வசிக்கும் தன் தோழி லோகேஸ்வரி, 27, என்பவரை பார்க்க சென்றார்.அவரை பின் தொடர்ந்த கும்பல், சரமாரியாக வெட்டி விட்டு தப்பியது. நாகூர் மீரான் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

ஆதம்பாக்கம் போலீசார் விசாரித்ததில், நாகூர் மீரானுக்கும், ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த ராபின் என்பவருக்கும் இருந்த முன் விரோதத்தால் கொலை நடந்தது தெரிய வந்தது.கொலையில் தொடர்புள்ள ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த சீனிவாசன், 39, சாமுவேல், 22, காணிக்கை ராஜ், 23, பிரபாகரன், 23, விமல்ராஜ், 23, கார்த்திக், 26, ஆகியோர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.தலைமறைவாக இருந்த முக்கிய குற்ற வாளியான ராபின், 27, ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த பவுல்ராஜ், 22, குற்றவாளிகளுக்கு தகவல் கொடுத்த லோகேஷ்வரி ஆகியோர், நேற்று கைது செய்யப்பட்டனர்.பின், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, போலீசார் சிறையில் அடைத்தனர்.

3 வயது குழந்தை மாயம்

ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் அருகே, ஒரகடம் அடுத்த வலையகரணை ஊராட்சி ஊமையாள்பரணஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த 3 வயது குழந்தை நேற்று, வீட்டின் அருகே உள்ள ஏரிக்கரை பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தது. பின், குழந்தை மாயமானது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற ஒரகடம் போலீசார், மறைமலை நகர், ஸ்ரீபெரும்புதுார் தீயணைப்பு நிலைய வீரர்கள் உதவியுடன், ஏரியில் குழந்தை மூழ்கியதா என தேடினர். இரவு நேரமானதால் தேடுதல் பணி நிறுத்தப்பட்டது.மேலும், குழந்தையை மர்ம நபர்கள் யாரேனும் கடத்திச் சென்றனரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரிக்கின்றனர்.

மின்மாற்றியின் மீது அமர்ந்து வாலிபர் அட்டகாசம்

கும்மிடிப்பூண்டி ; கும்மிடிப்பூண்டி ஜி.என்.டி., சாலையில் உள்ள துணை மின் நிலையத்தின் உயர் அழுத்த மின் மாற்றியின் மீது, நேற்று காலை, ஒரு நபர் ஏறினார்.

அதை கண்ட மின் வாரிய ஊழியர் ஒருவர், உடனடியாக மின் இணைப்பை துண்டித்தார்.மின் மாற்றியின் மீது ஏறி அமர்ந்தபடி, செய்வது அறியாமல், இந்தியில் பேசிக் கொண்டிருந்தார். கும்மிடிப்பூண்டி தீயணைப்பு வீரர்கள், மின் மாற்றியின் மீது ஏறி காப்பாற்ற முயன்றனர்.

அவர்களை ஏற விடாமல் அந்த நபர் தாக்கியதுடன், இரும்பு கம்பத்தை இறுக்கமாக பிடித்து கொண்டு இறங்க மறுத்தார். ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின், அந்த நபரை கயிறு கட்டி இறக்கினர்.அவர், மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த சாய்புரூஅடோய், 30, என்பதும் அவர் மன நலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது.அவரை, சென்னை அயனாவரத்தில் உள்ள மன நல மருத்துவமனையில் சேர்த்தனர். சம்பவ இடத்தில், நுாற்றுக்கணக்கான மக்கள் கூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பாம்பை விழுங்கும் கட்டு விரியன் பாம்பு

கடலுார்:கடலுார், கோண்டூர், ராம்நகரில் உள்ள ஒரு வீட்டு தோட்டத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணியளவில் ஒரு பாம்பு புகுந்தது.

வீட்டில் உள்ளவர்கள் வன விலங்கு ஆர்வலர் செல்லா என்பவருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் வந்த போது, நான்கு அடி நீள கட்டுவிரியன் பாம்பு, இரண்டடி நீள மற்றொரு நழுவை (நரிமுக பாம்பு) பாம்பை உயிருடன் விழுங்கிக் கொண்டிருந்தது.
இதனை செல்லா மற்றும் அங்கிருந்தவர்கள் அலைபேசியில் வீடியோ எடுத்தனர். அப்பகுதியில் பொது மக்கள் திரண்டதால் பரபரப்பு நிலவியது. பாம்பை முழுதும் விழுங்கியதும் கட்டுவிரியனை செல்லா பாதுகாப்பாக பிடித்து, அரசு காப்புக் காட்டில் விட்டார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement