dinamalar telegram
Advertisement

இது உங்கள் இடம்: மதிப்பதில்லை அரசு!

Share

உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்



ஆர்.நடராஜன், கோவையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

சென்னை: நீதிமன்ற உத்தரவுகள், பொதுமக்களிடம் நடைமுறைப்படுத்தப்படும் அளவுக்கு, அரசிடமோ, ஆளுங்கட்சியிடமோ செல்லுபடியாவது இல்லை.சமீபத்தில், சென்னை உயர் நீதிமன்றம், 'தமிழகம் முழுதும் பொது இடங்களில் உள்ள சிலைகளை மூன்று மாதங்களில் அகற்ற வேண்டும். அந்த சிலைகளை, 'தலைவர் பூங்கா' உருவாக்கி, அங்கு பாதுகாக்க வேண்டும்' என அரசுக்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

ஒன்று மட்டும் உறுதி.மூன்று மாதங்களுக்கு பின், ஒரு சிலை கூட அகற்றப்பட்டிருக்காது. அந்த உத்தரவை, நீதிமன்றமும் மறந்துவிடும்.அதையும் மீறி, யாராவது ஒருவர் இந்த வழக்கை நீதிமன்ற பார்வைக்கு எடுத்து சென்றால், தமிழக அரசு மேலும் ஒரு ஆண்டு அவகாசம் கேட்கும்; நீதிமன்றமும், 11 மாத அவகாசம் கொடுக்கும். வழக்கு முடிந்து விடும். வழக்கம் போல 11 மாதங்கள் கழித்தும் ஒன்றும் நடக்காது.கடந்த மே மாதம், சென்னை உயர் நீதிமன்றம், ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு ஏராளமான உத்தரவுகளைப் பிறப்பித்து, மூன்று மாத அவகாசம் கொடுத்தது. இப்போது, ஐந்து மாதங்கள் முடிந்து விட்டன. நீதிமன்றத்தின் உத்தரவுகளை அரசு நிறைவேற்றியதா என்றால், இல்லை.

இதற்கு முன் சிலை கடத்தல் வழக்கில், நீதிமன்றம் சில உத்தரவுகளை பிறப்பித்தது. முன்னாள் முதல்வர் பழனிச்சாமி ஆட்சியில், ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.எதையேனும் அரசு நிறைவேற்றியதா?சில உயிர் பலிகள் நிகழ்ந்த பின் நீதிமன்றம், 'வீதிகளில் பேனர் வைக்கக் கூடாது' என்று உத்தரவு பிறப்பித்தது. ஆனால் பேனர் வைக்காமல் எந்த கூட்டம் நடைபெறுகிறது?நீதிமன்றத்திலிருந்து, அரசுக்கு சாதகமான மற்றும் வருவாய் வரக்கூடிய உத்தரவு வந்தால் அரசு உடனே நிறைவேற்றும்.அதற்கு சிறந்த உதாரணம், இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும், 'ஹெல்மெட்' அணிய வேண்டும்.அரசு, இந்த உத்தரவை செயல்படுத்த காட்டிய அக்கறையை, நாம் அனைவரும் அறிவோம். அதே அரசு, நீதிமன்றத்தின் மற்ற உத்தரவுகளை ஏன் அலட்சியப்படுத்துகிறது? நீதிமன்றமும் ஏன் அதை வேடிக்கை பார்க்கிறது?'கனிம வளத்தை கொள்ளையடிப்பதை, இரும்புக் கரத்துடன் ஒடுக்க வேண்டும்' என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் தமிழகத்தில் கனிம வள கடத்தல் நடந்தபடியே இருக்கிறது.நீதிமன்ற உத்தரவு, பொதுமக்கள் மீது மட்டும் உடனே நிறைவேற்றப்படும். அரசுக்கு அது பொருந்தாது. தீர்ப்பை கண்டவுடன் இரண்டு நாட்களுக்கு, 'ஆஹா, ஓஹோ...' என்று அதைப் பற்றி பெருமை பேசி, நாமும் அதை மறந்து விடுவோம். அடுத்து வேறொரு தீர்ப்பு வரும். இப்படியே காலம் போகும்...நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றவில்லை என்றால், ஒன்றும்பிரச்னை இல்லை என்ற மனோபாவம் அரசுக்கு வந்து விட்டால், அது நாட்டுக்கு நல்லதில்லை. நீதிமன்றத்தில் மதிப்பையும், மாண்பையும் அது குறைக்கும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (54)

  • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

    நான் நீதிபதியாக இருந்தால் என்று பிள்ளை பருவங்களில் கட்டுரை எழுத சொல்வார்கள் அல்லது பேச்சு போட்டி வைப்பார்கள். ஒன்றும் தெரியாது எதை எழுதுவது என்ன பேசுவது என்று. யாரேனும் எழுதி தரவேண்டும். அப்படி எழுதி தருவதில் முதல் பத்தி மட்டுமே பிரதானமாக இருக்கும். சூரியனை போல வீற்றிருக்கும் தலைவர் அவர்களே, எழுஞாயிறாம் எங்கள் நடுவர் அவர்களே என்று தான் இருக்கும். வேறொன்றும் தெரியாது. அதற்கெல்லாம் எப்படி எழுதலாம் என்று அப்போதே சிந்தித்தது உண்டு. இப்போது நான் பிள்ளை பிராயத்திற்கு சென்று பள்ளியில் அதே கேள்விக்கு சொல்வதென்றால், நான் நீதிபதியாக இருந்து தீர்ப்பை சொல்லும் பொது, பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் சிலைகளை மூன்று மாதத்தில் அகற்றவேண்டும் என்று மட்டும் தீர்ப்பை எழுதுவேன். கூடுதலாக பூங்காக்கள் அமைத்து அங்கே நிறுவ வேண்டும் என்று நிச்சயம் தீர்ப்பில் எழுதமாட்டேன் என்று கட்டுரையோ பேச்சு போட்டியோ அதில் சொல்வேன். நடுவர் எதற்காக அப்படி தீர்ப்பை எழுவாய் என்று கேட்டால் சொல்வேன், இந்த அரசியல் வாதிகளுக்கு சிறிது இடம் இருந்தால் போதும் சமாளித்து விடுவார். தலைவர்களின் சிலையை அமைப்பதற்கு பூங்காக்களுக்காக அரசு இடம் தெரிவு செய்து கொண்டிருக்கிறது என்று அல்லது பூங்கா அமைக்க அரசிடம் போதிய நிதி இல்லாத பற்றாக்குறை நிலவுவதால் அடுத்து வரும் ஐந்தாண்டுகளில் நிதி நிலைமை சீரடைந்ததும் நிச்சயம் நிறுவுவோம் என்று சொல்லி தீர்ப்பை திருப்தி படுத்தி விடுவார்கள். ஆகையால் தான் தீர்ப்புக்கள் அப்படி எழுதுவேன். இரண்டியும் இணைத்து தீர்ப்பை எழுதவேண்டி வந்தால், முதலில் சிலைகளை அகற்ற வேண்டும் என்றும் அதன் பிறகு இரண்டாவதாக பூங்காக்கள் அமைப்பதற்கு ஆயத்தம் செய்துவிட்டு நீதிமன்றத்திற்கு தெரிவிக்கவேண்டும் என்றும் அதன் பிறகு இறுதி தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்து விடவேண்டும். தீர்ப்புக்கள் நிறைவேற்ற தாக்கத்திற்கு வாய்ப்புக்கள் இருப்பதாக இருக்கவேண்டும். எழுபது வயது கிழவனுக்கு அறுபது ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்குவதாக இருக்க கூடாது, அப்படி செய்தால் எசமான் அந்த அறுபது ஆண்டையும் ஒரு சேர ஒரே வாரத்தில் அனுபவித்து விடவேண்டும் என்று கருணை மனு போடுவார்கள். நீதி மன்றங்கள் அரசிடம் பேசி ஒரு சமரசத்திற்கு வர செய்வது சரியாக இருக்குமோ என்று கூட குழம்ப தோன்றுகிறது சிலவேளைகளில். அதாவது பொது இடங்களில் இருக்கும் சிலைகள் அனைத்தும் இனி புராதான சின்னங்கள் என்று அறியப்படும் என்று ஒரு அறிவிப்பின் வழியில் நீதி மன்றத்தீர்ப்பையும் நிறைவேற்றி சிலாகிகளின் கண்ணியத்தையும் காத்து இருக்கும் நடைமுறைகளை தொடர செய்து விடுவாராம். இலவசமாக எதையும் தரக்கூடாது என்று சொன்னால், அதெற்கென்ன இனி இலவசங்கள் என்பதற்கு பதிலாக விலையில்லா மடி கணணிகள், வண்ண தொலைக்காட்சி பேட்டிகள் ஆடு மாடு என்று கொடுத்து விடவேண்டியது தான் என்று அறிவியலுக்கும் அப்பாற்பட்ட உன்னத கண்டுபிடிப்புக்களை கண்டு அதை உடனடியாக மறுநொடியே மக்களுக்கு பயனுறும் வகையில் செய்தவர்கள் அல்லவா நாம். யூனியன் என்பதற்கு தமிழ் அர்த்தம் ஒன்றியம் ஆகவே இது ஒன்றிய அரசு என்று அழைக்கிறோம். நடுவணரசு என்றோ மத்திய அரசு என்றோ நடுமத்திசென்டர் அரசு என்றோ அழைக்கவேண்டியதில்லை என்று கொல்கிறோமல்லவா? ஒரு அறிவாளி கேட்டார், ரிசெர்வ் பேங்க் ஆப் இந்தியா என்றுதானே இருக்கிறது, அப்படி இருக்க பாரதம் என்று என்னாலைக்கவேண்டும். என்று நமது கரன்சியை அச்சிடப்பட்டதை காண்பித்து. அதற்கு மற்றொருவர் சொன்னார் அதற்கும் மேலே பாருங்கள் ஹிந்தியில் பாரதீய சர்க்கார் என்று தான் ஹிந்தியில் எழுதியிருக்கும். ஹிந்தியில் எழுதியிருப்பதே சட்டத்திற்கு விளக்கத்திற்கு பொருளுக்கு கொள்ளளவேண்டியது என்று உள்ளது என்று. காமடி செய்வோர் அரசியலில் பெருகி இருக்க சோசியல் மீடியாக்களில் பொழுது நன்கு போகிறது. மனதே ரிலாக்ஸ் ப்ளீஸ் என்று தனியாக ஓரணும் தேவையில்லை அல்லவா?

  • Bhaskaran - Chennai,இந்தியா

    தனியார் நிறுவன ஓய்வுபெற்ற தொழிலாளருக்கு ஓய்வூதியம் உயர்த்தித்தர சொல்லி பல உயர் நீதிமன்றங்கள் சொல்லியும் கிடப்பில் போட்டிருக்கும் பிரதமரயம் நிதியமைச்சரையும் ஒன்றும் சொல்ல மாடீர்களோ

  • தஞ்சை தாசன் -

    அருமையான உண்மையான பதிவு.பெரும்பான்மையான மக்களின் கருத்தும் இதுதான்.ஆனால் எந்த அரசியல் கட்சியும் இதை செயல் படுத்தாது.நீதி மன்றமும் கை கட்டி வேடிக்கைதான் பார்க்கும்.திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்த பின் மக்கள் வரி பணத்தை வீன் செய்து எங்கும் சிலை எதற்கும் மணி மண்டபம் என்று தெருக்களை பாழ் செய்துள்ளார்கள்.தலைவர்களின் பிறந்த நாள் மற்றும் இறந்த நாள் அன்று மட்டும் மாலை மரியாதை.மற்றபடி மற்ற நாட்களில் சிலைகளை பராமரிக்க ஆட்கள் இல்லை.நேரமில்லை.இது தவிர ஜாதி தலைவர்கள் சிலைக்கு காவல் பாதுகாப்பு வெறே.

  • ஆரூர் ரங் -

    தென் மாவட்டங்களில் சாதித் தலைவர்களுக்கு ஏராளமான🙄🙄 சிலைகள். அவற்றை பாதுகாப்பாக இரும்புக் கூண்டுகளில்🤑 வைத்துள்ளனர் . கூடுதல் பாதுகாப்புக்காக 24 மணி நேரமும் போலீஸ் காவல்.. மக்கள் வரிப்பணம் எப்படியெல்லாம் விரயமாகிறது பாருங்கள்

  • Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்

    எல்லா நாடுகளிலும் இதுதான் நிலை. "ஆகாயக் கோட்டை கட்டித் தருவோம்" என்று கட்சிகள் சொன்னால், உடனே நம்பலாமா. எம்ஜிஆர் அவர்கள் மட்டும்தான், சொன்னதையும் செய்வார். சொல்லாததையும் செய்வார்.

Advertisement