dinamalar telegram
Advertisement

மதுவை மறக்கடித்த மகனின் பாச போராட்டம்

Share
Tamil News
மடிப்பாக்கம், பொன்னியம்மன் கோவில் சாலையில் உள்ள காயிலாங்கடையில், சிவன் பாடலும், சந்தன வாசமும் அப்பகுதியை கடப்போரை கட்டாயம் திரும்பி பார்க்க செய்யும்.
அங்குள்ள கடை உரிமையாளரின் அகண்ட நெற்றி முழுதும், சந்தனத்தால் திருநாமம், நடுவில் குங்கும திலகம், அதன் அடியில் இரு புருவங்களையும் இணைக்கும் திருநீர் என, பக்தி பிழம்பாக காட்சியளிப்பார். அவர் பெயர் சண்முகராஜ பாண்டியன், 59.
காயிலாங்கடை காரருக்கும், சிவகடாச்ச கோலத்திற்கும் எதேனும் சம்பந்தம் இருக்குமோ என்ற ஆவலில், அவரை அணுகினோம்.

எனக்கு உசுரு..'சார், இது ஏதோ ஸ்டைலுக்காக போடுற திருநாமம் இல்லை. அதுக்குள் என்னோட வாழ்க்கை அடங்கி இருக்கு' என, தொடர்ந்தார். தன் வாழ்க்கை பயணம் குறித்து சண்முக ராஜ பாண்டியன் கூறியதாவது:
'பேசிகலி' நான் ஒரு மொடா குடிகாரன். சரக்கு, பாக்கு, சிகரெட் இல்லாம என்னால இருக்க முடியாது. கடையில தான் இதுங்களோட குடும்பம் நடத்தினேன்.
கடவுள் பக்தி எல்லாம் அப்ப கிடையாது. காதலிச்சி கல்யாணம் பண்ண மனைவி ராஜேஸ்வரி, மகன் முத்துப்பாண்டின்னா எனக்கு உசுரு.
கடந்த ஐந்து வருஷத்துக்கு முன்னாடி, பையனுக்கு உடம்பு சரியில்லாம, மூளையில ஆபரேஷன் நடந்துச்சு. 'ஆபரேஷன் சக்சஸ், பேஷன்ட் டெத்'ங்கறா மாதிரி, ரெண்டே நாள்தான் இருப்பான்னு டாக்டருங்க வீட்டுக்கு அனுப்பிட்டாங்க.
நானும், மனைவியும், பையன் போன பின்னாடி, தற்கொலை செஞ்சுக்கலாம்னு இருந்தோம். அன்னைக்கு ராத்திரி குடிக்க தோணல. மகன பத்தி யோசிச்சுக்கிட்டே துாங்கிட்டேன்.
மறுநாள் காலையிலேயே குடிக்க முடிவு பண்ணி கடையிலேர்ந்து சைக்கிள்ல கிளம்பினேன். ஆனா, என்னை அறியாம என் சைக்கிள் சிவன் கோவில் வாசல்ல போய் நின்னுச்சு.

மூலமும் நீ.. முடிவும் நீ..'டாஸ்மாக்' போக வேண்டிய நான், இங்க ஏன் வந்தேன்னு யோசிச்சேன். அப்போ தான் குருக்கள் கோவிலை திறந்தார். நான் முதல் முறையா கோவிலுக்கு போனேன்.

ஈசனை பார்த்ததும், என்னை அறியாம கதறினேன். மகனை காப்பாத்தினா, என்னோட குடி, கெட்டப் பழக்கங்கள விடுறதா அங்கிருந்த பீடத்து மேல சத்தியம் செஞ்சேன். அப்புறமா வீட்டுக்கு வந்துட்டேன். அதுவரைக்கும் அசைவே இல்லாம இருந்த என் மகன், ஒரு வாரத்துல சுய நினைவு வந்து பொழைச்சுட்டான்.

என் வாழ்க்கையில அது ஒரு திருப்புமுனை. அன்னையிலேர்ந்து, நான் சிவ பக்தன். அவருக்கு செஞ்ச சத்தியத்தையும் இதுவரைக்கும் மீறல.மூலமும் நீ, முடிவும் நீ என்பதுதான் இந்த திருநாமம். ஆதியும் நீ ஜோதியும் நீ என்பது நடுவில் உள்ள குங்கும திலகம். சந்திர, சூரியன் நீ என்பது, இரு புருவத்துக்கும் இடையில விபூதி. இதுதான் நான் போடுற நெற்றி திருநாமத்துக்கு அர்த்தம். சண்முக ராஜ பாண்டியன் சொல்லி முடிக்கையில், அவர் கண்களில் கண்ணீர் ததும்பியது.
- நமது நிருபர் -

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (2)

  • NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா

    ஐயா சாமி ஏதோ சினிமா பாக்குறா மாதிரி இருக்கு ஆனா நீங்க நம்புனா கடவுளால் டாஸ்மாக்குக்கு இழப்பு , அதனால் விடிஞ்சா போச்சு என்று அலையும் தேர்ப்பூக்கிகள் அந்த கோவிலை விற்று விடுவார்கள் என்று தான் யோசிக்க தோணுது சரிதானே அநில் லமைச்சரே

  • M Ramachandran - Chennai,இந்தியா

    கடவுள் நம்பிக்கையை பொய்க்க வில்லை

Advertisement