dinamalar telegram
Advertisement

பட்டாசு விற்பனைக்கு அனுமதி கொடுங்க!: 4 மாநில முதல்வர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

Share
சென்னை:'உச்ச நீதிமன்றம் மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாய விதிமுறைகளுக்கு உட்பட்ட பட்டாசுகளை விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும்' என, நான்கு மாநிலங்களின் முதல்வர்களுக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

டில்லி, ஒடிசா, ராஜஸ்தான், ஹரியானா மாநில முதல்வர்களுக்கு ஸ்டாலின் எழுதியுள்ள கடிதம்:


கொரோனா தொற்றால் நாடு முழுதும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் நலிவடைந்து உள்ளன. இவற்றை நம்பியுள்ளோரின் வேலைவாய்ப்பு மட்டுமின்றி, தமிழகத்தின் பொருளாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. என் தலைமையிலான அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளால் இத்துறைகள் புத்துயிர் பெற்று வருகின்றன.

சிவகாசியை சுற்றியுள்ள பட்டாசு தொழில், மாநிலத்தின் மிக முக்கியமான தொழில்; நாட்டின் மிகப்பெரிய தொழில். பட்டாசு தொழிலை நம்பி எட்டு லட்சம் தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர். தீபாவளி பண்டிகை காலத்தில் உங்கள் மாநில அரசு, பட்டாசுகள் விற்பனைக்கு தடை விதித்துள்ளது, என் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுஉள்ளது.

காற்று மாசுபாடு தொடர்பான கவலை அடிப்படையில் நீங்கள் இந்த முடிவை எடுத்துள்ளீர்கள் என்பதை நான் புரிந்து கொள்கிறேன். உச்ச நீதிமன்றம் ஏற்கனவே சில வகை மாசுபடுத்தும் பட்டாசுகளை தடை செய்துள்ளது. எனவே, இப்போது பசுமை பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன. எனவே, பட்டாசுகள் விற்பனைக்கு தடை விதிப்பது நியாயமானதல்ல.

மற்ற நாடுகளில் இதுபோன்ற தடைகள் இல்லை. மற்ற மாநிலங்களில் இத்தகைய தடை விதிக்கப்பட்டால், ஒட்டுமொத்த தொழில் துறையும் முடப்பட்டு, எட்டு லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.பட்டாசு வெடிப்பது, தீபாவளி பண்டிகையின் ஒருங்கிணைந்த நிகழ்ச்சி. எனவே, பட்டாசு விற்பனை மீதான தடையை தயவு செய்து மறுபரிசீலனை செய்ய வேண்டும்.


உச்ச நீதிமன்றம் மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் விதித்த விதிமுறைகளுக்கு உட்பட்ட பட்டாசுகளை, உங்கள் மாநிலத்தில் விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு கடிதத்தில் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

மந்திரியின் முரண்பட்ட பேச்சு



திருவள்ளூரை அடுத்த திருவூர் ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற, தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் பேசியதாவது:தமிழகத்தில் 1,076 கி.மீ., நீளம் உள்ள சதுப்பு நிலங்களை பாதுகாக்கும் வகையில், சதுப்பு நிலம் பாதுகாப்பு இயக்கம் துவக்கப்படும். வரும் தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில், பட்டாசு வெடிப்பதில் இருந்து மக்கள் மனம் திரும்ப வேண்டும்.


சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக, பட்டாசு வெடிப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். தற்போது, எந்தெந்த தொழிற்சாலைகளில், அபாயகரமான ரசாயன கலவை வெளி வருகிறது என்பதை கண்டறிந்து, அவற்றை சுத்திகரிக்க, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அவ்வாறு சுத்திகரிப்பை மேற்கொள்ளாத தொழிற்சாலைகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • R. Vidya Sagar - Chennai,இந்தியா

    ஏன், நீட் விஷயத்தில் பண்ணிய மாதிரி சட்ட சபையில் ஒரு தீர்மானம் போட்டு அதை எல்லா மொழிகளிலும் மொழி பெயர்த்து எல்லா முதல் மந்திரிகளுக்கு நேரடியாக மந்திரிகள் வழியாக அனுப்பலாமே.

Advertisement