dinamalar telegram
Advertisement

ஸ்மார்ட் சிட்டியை சீர்கெடுக்கும் போஸ்டர் கலாச்சாரம்: மாநகராட்சி நிர்வாகம் சீரமைக்க எதிர்பார்ப்பு

Share
திருப்பூர்:திருப்பூர் மாநகரப்பகுதியில், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தை சீர்குலைக்கும் வகையில் 'போஸ்டர்' ஒட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், சில வார்டுகளில் மட்டும் பணிகள் நடந்து வந்தாலும், விரைவில் 'மிடுக்கான'மாநகரம் என்ற பெருமை பெறும் என, அதிகாரிகள் கூறுகின்றனர். அதுவரை, மோசமான ரோடுகளில் பயணிக்க வேண்டுமா என, வாகன ஓட்டிகளும் ரத்தக்கண்ணீர் வடிக்கின்றனர்.
குறிப்பாக, 'டூ வீலரில்' சென்று வருவோர் அதிகளவில் சிரமப்படுகின்றனர். 'ஸ்மார்ட் சிட்டி' திட்டப்பணிகள் நடந்து கொண்டிருந்தாலும், சமீபத்தில் பெருகி வரும் போஸ்டர் கலாச்சாரம், மாநகராட்சி நிர்வாகத்தின் ஒட்டுமொத்த உழைப்பையும் சீர்குலைத்துவிடும் என்ற நிலையில் உள்ளது.குறிப்பாக, உயர்மட்ட பாலம், அரசு கட்டடங்கள், நெடுஞ்சாலைத்துறையின் மையத்தடுப்புகளில், போஸ்டர் ஒட்டுவது நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. பல கோடி ரூபாய் மதிப்பில் கட்டிய பாலமும், போஸ்டர் ஒட்டுவதால் களையிழந்து போகிறது.கலெக்டர் அலுவலகம் எதிரே, பல்லடம் ரோட்டில் உள்ள, மையத்தடுப்பில், போஸ்டர் ஒட்டுவது தற்போது அதிகரித்துள்ளது.

நெடுஞ்சாலைத்துறையினர், வெள்ளையடித்து பராமரிக்கும் கான்கிரீட் கற்களில், 'போஸ்டர்' ஒட்டுவதால், பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.எனவே, இது குறித்து, மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகமும், ஆலோசித்து, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது சொத்துக்களை சேதப்படுத்தும் வகையில், போஸ்டர் ஒட்டுவோர் மீது, உரிய நடவடிக்கை எடுக்க, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும் என்பது, தன்னார்வலர்களின் எதிர்பார்ப்பு.உள்ளாட்சி அமைப்புகள் வாரியாக, பொது இடங்களை தேர்வு செய்து, அங்கு மட்டும் போஸ்டர் ஒட்டி அறிவிப்பு செய்ய வழிவகை செய்யலாம்.பாதுகாப்பான உயரத்தில், ஆங்காங்கே பலகை அமைத்து, முன் அனுமதி பெறுவோர், அங்கு மட்டும் போஸ்டர் ஒட்ட அனுமதிக்கலாம் என்ற கருத்தையும் தன்னார்வலர்கள் முன்வைக்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement