dinamalar telegram
Advertisement

நர்ஸ்கள் கவுன்சிலிங் முடிந்தும் இடமாறுதல் இழுபறி!

Share
Tamil News

நர்ஸ்கள் கவுன்சிலிங் முடிந்தும் இடமாறுதல் இழுபறி!
''சின்ன மீனை போட்டு தான் பெரிய மீனை பிடிப்பாங்க... ஆனா, இங்க விலாங்கு மீனையே முதலீடா போட்டிருக்காங்க...'' என முணுமுணுத்தபடியே, பெஞ்சில் அமர்ந்தார் அந்தோணிசாமி.

''புதிர் போடாம விஷயத்துக்கு வாரும்...'' என்றார் அண்ணாச்சி.

''தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி யூனியன், 18வது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு சமீபத்துல இடைத்தேர்தல் நடந்துச்சு... இதுல, தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ம.க., உட்பட எட்டு வேட்பாளர்கள் போட்டியிட்டாங்க...

''தி.மு.க., சார்புல ஓட்டுக்கு 200 ரூபாய், இரண்டு டிபன் பாக்ஸ் மற்றும் சில்வர் பாத்திரங்கள், அ.தி.மு.க., சார்புல ஓட்டுக்கு 200 ரூபாய், சில்வர் தாம்பாளம், சேலைகளை குடுத்தாங்க...

''சமீபத்துல தி.மு.க.,வுல சேர்ந்த முன்னாள் அமைச்சர் பழனியப்பனும், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் அன்பழகனும், இந்த தேர்தலுக்காக தலா 1 கோடி ரூபாய்க்கு மேல செலவழிச்சிருக்காங்க... கடைசியில, தி.மு.க., வேட்பாளர் ஜெயிச்சிட்டாருங்க...'' என்றார் அந்தோணிசாமி.

''துணை தலைவர் மேல ஏகப்பட்ட புகார்கள் குவியுது பா...'' என்றார் அன்வர்பாய்.

''எந்த பஞ்சாயத்துல ஓய்...'' எனக் கேட்டார் குப்பண்ணா.''திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லுார் ஊராட்சி துணை தலைவரா இருக்கிறவர் வேலுசாமி... தி.மு.க.,வைச் சேர்ந்த இவரது மனைவி சாந்தாமணி தான், தலைவர் பதவியில இருக்காங்க பா...

''இதனால, வேலுசாமியின் ஆதிக்கம் தான் பஞ்சாயத்துல கொடி கட்டி பறக்குது... பொதுமக்கள், கடைக்காரர்கள்னு பலரிடமும் அடாவடியா நடந்துக்கிறாராம்... கொரோனா நேரத்துலயே, நலத்திட்ட உதவிகள் வழங்குனவங்களிடம் பிரச்னை செய்தாரு பா...

''சமீபத்துல, பெண் கவுன்சிலர் சிவகாமி, அவரது கணவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்திருக்காரு... இது சம்பந்தமா அவங்க போலீஸ்ல புகார் தந்தும், துணை தலைவர் மேல நடவடிக்கை எடுக்கலை பா...

''ஏன்னா, துணை தலைவருக்கு பாதுகாப்பு அரணா, மக்கள் பிரதிநிதி ஒருத்தர் இருக்காராம்... அதனால, துணை தலைவர் மேல நடவடிக்கை எடுக்க, அதிகாரிகள் தயங்குறாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.

''செல்வராஜ் இப்படி உட்காரும்...'' என, நண்பரை வரவேற்ற குப்பண்ணாவே,

''ஆர்டருக்காக காத்துண்டு இருக்கா ஓய்...'' என, கடைசி தகவலுக்கு மாறினார்.

''எந்த வேலைக்கு யாரு வே காத்துட்டு இருக்கா...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.

''தமிழகம் முழுக்க அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள்ல, ஒப்பந்த அடிப்படையில நர்ஸ்களா இருக்கறவாளுக்கு, பணியிட மாறுதல் கவுன்சிலிங் ஜூலை 30ம் தேதி நடந்தது...

''மாவட்ட தலைநகரங்கள்ல நடந்த கவுன்சிலிங்குல, தமிழகம் முழுக்க 3,000த்துக்கும் மேற்பட்ட நர்ஸ்கள் கலந்துண்டு, தங்களுக்கான பணியிடத்தை 'செலக்ட்' செஞ்சாங்க ஓய்...

''கவுன்சிலிங் முடிஞ்சு ரெண்டரை மாசமாகியும், இன்னும் ஆர்டர் வரலை... இந்த கவுன்சிலிங்கால, சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு பெரிய அளவுல வரும்படி இல்லை ஓய்...

''அதனால, ஆர்டரை பெண்டிங்ல போட்டா, தங்களை தேடி வந்து பணம் தருவாங்கன்னு மவுனமா இருக்காங்க... ஆனா, 'மாசம் 14 ஆயிரம் சம்பளம் வாங்குற எங்களால எப்படி லஞ்சம் தர முடியும்'னு, ஒப்பந்த நர்ஸ்கள் புலம்புறா ஓய்...'' என, முடித்தார் குப்பண்ணா.
அரட்டை முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (3)

  • Maheshkumar - Tiruppur,இந்தியா

    அரசாங்கம் மாறினாலும் அதிகாரிகள் மாறுவதில்லை, இதைப்போன்ற அதிகாரிகளை அரசாங்கமும் கண்டுகொள்வது இல்லை, என்று மாறுமோ தமிழகத்தின் இந்த அவல நிலை

  • DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ

    லஞ்சமில்லாமல் எந்த துறையிலும் எந்த காரியத்தையும் சாதிக்க முடியாதென்ற நிலை நான் பிறந்த தமிழ் நாட்டில் என்பதை நினைக்கும்போது துயர் உருவதைத்தவிர வேறு வழியில்லை

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    'பொன் வைக்கிற இடத்தில் பூவை வைத்தது போல' ஆளுக்கு சில ஆயிரங்களாவது கிடைக்காதா என்ற நப்பாசைதான் லஞ்சமில்லாமல் போஸ்டிங் போட்டு தவறான முன்னுதாரணம் காட்டிவிடக் கூடாதில்லையா ?

Advertisement