dinamalar telegram
Advertisement

புதுச்சேரி அருகே அரசு ஊழியர் வெட்டிக்கொலை

Share
புதுச்சேரி-முன்னாள் கவுன்சிலர் கொலைக்கு பழிக்குப் பழியாக , தமிழக அரசு ஊழியர் கொலை செய்யப்பட்டார்.புதுச்சேரி, காமராஜ் நகர் கட்டபொம்மன் தெருவை சேர்ந்தவர் மணிவண்ணன்,53; புதுச்சேரி கோரிமேடு அருகே தமிழக பகுதியான திருநகரில் வாட்டர் டேங்க் ஆபரேட்டராக பணியாற்றி வந்தார்.ஆயுத பூஜையையொட்டி நேற்று இரவு 7.௦௦ மணியளவில், திருநகர் வாட்டர் டேங்கில் பூஜை செய்ய சென்றார். அங்கு வந்த ஒரு கும்பல், கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் மணிவண்ணனை வழிமறித்தது.அதிர்ச்சியடைந்த மணிவண்ணன் ஓட்டம் பிடித்தார். ஆனால் அக்கும்பல் அவரை ஓட ஓட விரட்டி வெட்டியது. இதில், உடலில் பல இடங்களில் வெட்டு காயமடைந்த மணிவண்ணன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார்.இதைப் பார்த்ததும் அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதன்பின் அக்கும்பல் தப்பிச் சென்றது. தகவலறிந்த ஆரோவில் போலீசார் விரைந்து வந்தனர். மணிவண்ணன் உடலை கனகசெட்டிக்குளம் பிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் தடயங்கள் சேகரிக்கப்பட்டன. ஆரோவில் போலீசார் வழக்கு பதிந்து கொலையாளிகள் குறித்து விசாரணை நடத்தினர்.பழிக்குப் பழிகடந்தாண்டு செப்., 30ம் தேதி, புதுச்சேரி மேட்டுப்பாளையம் போக்குவரத்து முனையத்தில் என்.ஆர்.காங்., பிரமுகரும் காமராஜ் நகர் வார்டு முன்னாள் கவுன்சிலருமான மாந்தோப்பு சுந்தர், 53, என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்டார்.இவ்வழக்கில், தற்போது கொலை செய்யப்பட்ட மணிவண்ணனின் மகன்கள் வினோத், சுந்தர் ஆகியோர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருந்தனர்.இருவரையும் பழிக்குப் பழியாக கொலை செய்ய, எதிரிகள் நோட்டமிட்டு வந்தனர். இதையறிந்த இருவரும் தலைமறைவாகினர்.கடந்த 30ம் தேதி மாந்தோப்பு சுந்தரின் நினைவு நாளில் இருவரையும் கொலை செய்ய எதிரிகள் திட்டம் தீட்டியுள்ளனர்.இந்நிலையில், சுந்தர், வினோத் இருவரும் ஊருக்குள் நுழைய, போலீசார், 144 தடையுத்தரவு பிறப்பித்து இருந்ததால், அவர்களது திட்டம் தோல்வியில் முடிந்தது. அதையடுத்து, அவரது தந்தை மணிவண்ணனை வெட்டி கொலை செய்துள்ளது, முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.பதட்டம் நீடிப்புமணிவண்ணன் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்து அவரது ஆதரவாளர்கள் அங்கு குவிந்தனர். அவர்களை, புதுச்சேரி, தமிழக போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பினர்.கொலை சம்பவத்தால் இரு மாநில எல்லை பகுதி நகர்களில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. கோரிமேடு காமராஜர் நகர், தமிழக பகுதியான திருநகரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.கொலை நடந்த இடத்தை கோட்டக்குப்பம் டி.எஸ்.பி., அருண், ஆரோவில் இன்ஸ்பெக்டர் அன்பரசு, சப் இன்ஸ்பெக்டர் சுந்தரராஜன், புதுச்சேரி சீனியர் எஸ்.பி., லோகேஸ்வரன், சிறப்பு அதிரடிப்படை எஸ்.பி., ஜிந்தா கோதண்டராமன் ஆகியோர் பார்வையிட்டனர்.கொலையாளிகளை பிடிப்பது தொடர்பாக இரு மாநில போலீசாரும் ஆலோசனை மேற்கொண்டனர். மூன்று தனிப்படை அமைத்து, கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement