dinamalar telegram
Advertisement

உற்பத்தியை அதிகரிக்கிறது என்.எல்.சி., நிலக்கரித் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய நடவடிக்கை

Share
நெய்வேலி;நாட்டில் நிலவும் நிலக்கரித் தட்டுப்பாட்டை சரி செய்ய, என்.எல்.சி., நிறுவனத்திற்கு சொந்தமான, ஒடிசா மாநிலம், தலபிரா நிலக்கரி சுரங்கத்தில் ஆண்டுக்கு, 40 லட்சம் டன் நிலக்கரி என்ற அளவை, 2 கோடி டன்னாக அதிகரிக்க உள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.என்.எல்.சி.,இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:நாடு முழுவதும் உள்ள நிலக்கரி சுரங்கங்களில் நிலக்கரித் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இதனை சரி செய்ய, என்.எல்.சி., இந்தியா நிறுவனம், தனது நிலக்கரி சுரங்கத்தில் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதுவரை என்.எல்.சி., இந்தியா நிறுவனம் பழுப்பு நிலக்கரியை மட்டும் தோண்டி எடுத்து மின்சக்தி உற்பத்தி செய்த நிலையில், 2016ம் ஆண்டு, மத்திய நிலக்கரி அமைச்சகம், ஒடிசா மாநிலம், தலபிரா பகுதியில் நிலக்கரிச் சுரங்க பகுதி -2 மற்றும் 3 ஐ என்.எல்.சி., நிறுவனத்திற்கு ஒதுக்கீடு செய்தது.இதையடுத்து அங்கு நிலக்கரியை என்.எல்.சி.,2020 ஏப். 26 முதல் உற்பத்தி செய்கிறது. இந்த நிலக்கரி சுரங்கத்தில், நடப்பு ஆண்டில் 40 லட்சம் டன் வெட்டி எடுக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தற்போது நிலக்கரித் தேவை அதிகரித்துள்ளதால் நடப்பு நிதியாண்டிலேயே ஆண்டிற்கு 60 லட்சம் டன்னாக அதிகரிக்கும் வகையில் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.மேலும், நடப்பு நிதியாண்டின் நிறைவிற்குள் ஆண்டிற்கு ஒரு கோடி டன் வெட்டி எடுக்கவும் வரும் 2022- - 23ம் நிதியாண்டில் அதனை ஆண்டிற்கு 2 கோடி டன்னாக அதிகரிக்கவும் பல்வேறு நடவடிக்கைகளையும் என்.எல்.சி., மேற்கொண்டு வருகிறது. தமிழக அரசுடன் இணைந்து, என்.எல்.சி., இந்தியா நிறுவனம் தொடங்கியுள்ள நெய்வேலி தமிழ்நாடு மின் நிறுவனம் என்ற கூட்டு நிறுவனத்தின் மூலம், துாத்துக்குடியில் செயல்படுத்தும் அனல் மின் நிலையத்தில் மணிக்கு 10 லட்சம் யூனிட் மின்உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.நிலக்கரியில் இயங்கும் இந்த அனல் மின் நிலையத்திற்கு, ஒடிசா மாநிலத்தில் உள்ள தலபிரா சுரங்கத்திலிருந்து ரயில் மற்றும் கப்பல் மூலமாக தற்போது நிலக்கரி எடுத்துச் செல்லப்படுகிறது. ஒவ்வொன்றும் தலா 500 மெ.வா., திறன் கொண்ட இரண்டு மின் உற்பத்திப் பிரிவுகளுடன் செயல்படும் துாத்துக்குடி என்.டி.பி.எல்., அனல் மின் நிலையத்தில் உற்பத்தி செய்யும் மின்சக்தி முழுவதும் தென் மாநிலங்களுக்கு வழங்குவதுடன் 40 சதவீத மின் சக்தி தமிழகத்திற்கு மட்டும் வழங்கப்படுகிறது.மத்திய நிலக்கரி அமைச்சகம், கடந்த அக்.1ம் தேதி நிறைவேற்றிய சுரங்கம் மற்றும் கனிமப் பொருள்கள் மேம்பாடு மற்றும் ஒழுங்கு படுத்துதல் சட்டத்தின் படி, நிலக்கரி சுரங்கங்கள், அவை வழங்கவேண்டிய அனல்மின் நிலையங்களுக்கு எரிபொருளை வழங்கிய பிறகு மீதமுள்ள எரி பொருளை விற்பனை செய்யலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்திருத்தத்தின் அடிப்படையில், என்.எல்.சி., இந்தியா நிறுவனம்,தனது மின் நிலையங்களின் தேவையை பூர்த்தி செய்த பின் மீதமுள்ள நிலக்கரியை விற்பனை செய்ய மத்திய நிலக்கரி அமைச்சகத்தின் அனுமதியை கேட்டுள்ளது.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement