dinamalar telegram
Advertisement

ஆயுத பூஜை உற்சாக கொண்டாட்டம் கடை வீதிகளில் திரண்ட மக்கள் கூட்டம்

Share
சென்னை:ஆயுத பூஜை கொண்டாட்டத்திற்கு, பூஜை பொருட்கள் வாங்க, மார்க்கெட்டுகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

கொரோனா பரவலால், கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆயுத பூஜை கொண்டாட்டங்கள் கலையிழந்தன. இந்நிலையில், தொற்று பரவல் குறைந்து, தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இருப்பதால், வழக்கமான உற்சாகத்துடன், சென்னை வாசிகள் ஆயுத பூஜை கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

ஆர்வம்



அதன்படி, வேலை நாளான நேற்று முன்தினமே, சென்னை குடிநீர் வாரியம், மாநகராட்சி மண்டல அலுவலகம், தாசில்தார் அலுவலகம், உணவு வழங்கல் துறை அலுவலகம் போன்ற அரசு அலுவலகங்களில், ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது.தவிர, ஆயுத பூஜையை ஒட்டிய விடுமுறை நாட்களில், மக்கள் தங்கள் வசதிக்கேற்ப, நிறுவனம் மற்றும் வீடுகளில் பூஜை போடுவர்.

நேற்று வீடுகளில் ஆயுத பூஜைக்கான பூஜை பொருட்களை வாங்க, மக்கள் கூட்டம் மார்க்கெட்டுகளில் அலைமோதியது. அதன்படி, பொறி, ஆப்பிள், சாத்துக்குடி, ஆரஞ்சு, வாழைப்பழம், தேங்காய், வாழை இலை உள்ளிட்ட பொருட்களை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.பழங்களின் விலை, வழக்கத்திற்கு மாறாக சற்று அதிகரித்தே காணப்பட்டது.

குறிப்பாக, வடசென்னையின் முக்கிய மார்க்கெட் பகுதிகளான, கொத்தவால்சாவடி, பூக்கடை, வண்ணாரப்பேட்டை எம்.சி., சாலை, புதுவண்ணை மார்க்கெட், கும்மாளம்மன் தெரு, எம்.ஆர்., மார்க்கெட்.நேதாஜி நகர் மார்க்கெட், திருவொற்றியூர் மார்க்கெட், காலடிப்பேட்டை, விம்கோ நகர், கத்திவாக்கம், மணலி மற்றும் மணலி புதுநகர் மார்க்கெட்டுகளிலும், கனிசமான அளவில் மக்கள் கூடி, பொருட்களை வாங்கினர்.

வெறிச்சோடிய சாலைகள்



மதியத்திற்கு பின், தெருக்களில் கூட்டம் மற்றும் வாகன நடமாட்டங்கள் குறைந்து, முக்கிய சாலைகள் வெறிச்சோடியதையும் காண முடிந்தது.வடசென்னையை போல, தென் சென்னையிலும் தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், மடிப்பாக்கம், வேளச்சேரி, தி.நகர், சைதாப்பேட்டை, மயிலாப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதி மார்க்கெட்டுக்களில், ஆயுத பூஜைக்கு பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.

பூசணிக்காய் கிலோ ரூ. 5



பண்டிகைகளை முன்னிட்டு, கோயம்பேடு மார்க்கெட்டில், விற்பனை சூடுபிடிக்கு என, வியாபாரிகள் எதிர்பார்த்தினர். ஆனால், சில பொருட்களை தவிர மற்ற விற்பனை மந்தமாகவே இருப்பதாக வியாபாரிகள் கூறினர். குறிப்பாக, ஆயுத பூஜை நாட்களில் அதிகளவில் விற்பனையாகும், 'திருஷ்டி' பூசணிக்காயின் விலை கடுமையாக சரிந்தது.

இது குறித்து, சிறுமொத்த வியாபாரிகள் கூறியதாவது: பண்டிகை தினத்தை முன்னிட்டு, 300 லாரிகள் வரை கோயம்பேடுக்கு பூசணிக்காய் வரத்து இருந்தது. சிறப்பு சந்தை இல்லாததால், ஆயுத பூஜை போன்ற பண்டிகை தினத்தில் எதிர்பார்த்த அளவிற்கு விற்பனை இல்லை. இதனால், நேற்று முன்தினம், கிலோ 12 - 15 ரூபாய்க்கு விற்பனையான, பூசணிக்காயின் விலை,நேற்று 5 ரூபாய்க்கு விற்பனையானது. இதனால், வியாபாரிகள் கவலையில் உள்ளனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement