dinamalar telegram
Advertisement

குழந்தைகளை நல்வழிப்படுத்தும்!

Share
Tamil News
பொம்மலாட்ட கலைஞர் பத்மினி ரங்கராஜன்: என் மகனுக்கு கதை சொல்வதற்காக இந்த கலையைக் கற்றுக் கொண்டேன். இந்த கலையைப் பயிற்றுவிப்பதுடன், பொம்மைகள் வாயிலாக கதை சொல்லியாகவும் இருக்கிறேன். ஆரம்ப காலத்தில், அக்கம் பக்கத்து குழந்தைகளுக்கு மட்டுமே கதை சொல்லி வந்தேன்.
ஒருமுறை என் மகனின் பள்ளியில் கதை சொல்லும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது ஒரு குழந்தை, 'நீங்க பயன்படுத்துற குரங்கு பொம்மையின் பெயர் என்ன?' என்று கேட்டது. அந்த கேள்வி என்னை சிந்திக்க வைத்தது. பொம்மலாட்டக் கலைஞர்களை சந்தித்து, பொம்மைகளுக்குப் பெயர் வைத்து, முறைப்படி கதை சொல்ல கற்றுக் கொண்டேன்.

விலை அதிகமான பொம்மைகளை தான் கதைகளுக்கு பயன்படுத்தணும்னு அவசியமில்லை; பேப்பர் பொம்மைகளை கூட பயன்படுத்தலாம். குழந்தைகளை ஈர்க்கும் வகையில் கதை சொல்வது தான் முக்கியம். அதனால், 15 ஆண்டுகளாக உபயோகம் இல்லாத பொருட்களை வைத்து தான் பொம்மைகளை செய்கிறேன். ஆசிரியர்களிடம், குழந்தைகளுக்கு பொம்மைகளை வைத்து எப்படி கதை சொல்வது என, பயிற்சி அளித்து வருகிறேன்.

'ஸ்பூர்த்தி தியேட்டர்' என்ற பெயரில் பயிற்சி மையம் நடத்தி வருகிறேன். குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு, குழந்தைத் திருமணம் தடுப்பு, பழங்குடிகள், அரசின் நலத்திட்டங்களைக் குறித்து கதையாக சொல்வேன். நுால்பாவைக் கூத்து, தோல்பாவைக் கூத்து, பொம்மலாட்டம் தான் தமிழகம் உட்பட பல மாநிலங்களில் பிரபலமாக உள்ளது. ஆனால், பொம்மைகளை கையில் வைத்து கதை சொல்ல எளிமையாக இருப்பதால், நான் கைப்பாவை கூத்தை தான் அதிகம் கடைப்பிடிக்கிறேன்.

குழந்தைகளை சரியான வழியில் வளர்க்கவும், அவர்களின் சிந்தனையாற்றலைச் சீர்படுத்தவும் கதைகள் மிகவும் பயன் தரும். எளிமையான பொம்மைகளை வைத்து, ஆண், பெண், விலங்குகளுக்கு என்று தனித்தனி குரலில் பேசி, குழந்தைகளோடு குழந்தைகளாய் மாறி கதை சொன்னால், அவர்களுக்கு எளிதில் புரியும்.ஒரு காலத்தில் பொம்மலாட்டத்தை மக்களை நல்வழிப்படுத்தவும், செய்திகளையும் தெரிவிக்கவும் பயன்படுத்தினர்.

கால ஓட்டத்தில், பொம்மலாட்டம் உள்ளிட்ட பல கலைகளுக்கு வரவேற்பு குறைந்து விட்டது; எனவே, அந்த கலையை நம்பியிருக்கும் கலைஞர்களின் வாழ்வாதாரமும் முடங்கி விட்டது. இது தொடர்ந்தால், வருங்காலத்தில் நம் கடந்த கால அடையாளங்களும் தொலைந்து போய்விடும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement