dinamalar telegram
Advertisement

யானை, மான்களிடம் இருந்து காப்பாற்றும் மல்பெரி சாகுபடி

Share
Tamil News
பெ.நா.பாளையம்:மலையோர கிராம விவசாயிகள், பயிர்களை, வனவிலங்குகளிடம் இருந்து பாதுகாக்க,மாற்று யோசனையாக, மல்பெரி சாகுபடி செய்துள்ளனர்.கோவை புறநகர், வடக்கு பகுதியில், மலையோர கிராமங்களில், வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால், விவசாயிகள், அறுவடை செய்யும் வரை, வன விலங்குகளிடமிருந்து பயிர்களை காப்பாற்ற பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.வன விலங்குகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த, வனத்துறையினர் தீவிரமாக பணியாற்றினாலும், வன விலங்குகளால் பயிர்களுக்கு ஏற்படும் சேதத்தை, முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை.பெ.நா.பாளையம் வட்டார மலையோர கிராமங்களில், யானை, மான், காட்டுப்பன்றி, மயில் உள்ளிட்ட வன உயிரினங்களிடம் இருந்து, கால்நடைகளுக்கான தீவனப் பயிர்களை காப்பாற்ற, விவசாயிகள் புதிய உத்தியைக் கையாண்டு வருகின்றனர். தேவையம்பாளையம், அண்ணாநகர் பகுதி விவசாயி விஜய கணபதி கூறுகையில், "தோட்டங்களில் தீவனப்பயிர்களை மான்கள் மேய்ந்து விடுகின்றன. இதைத் தவிர்க்க, தற்போது, பட்டுப்பூச்சிகளுக்கான மல்பெரி செடிகளை, ஆடு, மாடுகளுக்காக பயிர் செய்துள்ளோம். மல்பெரியை ஆடு, மாடுகள் நன்கு உண்கின்றன. அதே நேரத்தில், மான் உள்ளிட்ட வனவிலங்குகள் மல்பெரி இலைகளை விரும்புவதில்லை. எனவே, மல்பெரியை என்னுடைய தோட்டத்தில் பயிரிட்டு வருகிறேன்" என்றார். "மல்பெரி இலைகள் அதிக புரோட்டின் கொண்டவை. இவற்றை ஆடு, மாடுகள் உண்பதால், அவைகளுக்கு தேவையான சத்து கிடைக்கும். கால்நடைகளுக்கு எவ்வித தீங்கும் ஏற்படாது" என, கோவனுார்அரசு கால்நடை மருத்துவமனை மருத்துவர், வெற்றிவேல் தெரிவித்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement