dinamalar telegram
Advertisement

இது உங்கள் இடம்

Share
Tamil News
சினிமாவிற்கு தடை விதிக்கலாமே!

ஸ்ரீ.சாரங்கா, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சமீபத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யான் கான், ஓர் ஆடம்பர கப்பலில் போதை மருந்து வைத்திருந்தது மற்றும் உபயோகப்படுத்தியதற்காக போதை தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு சுஷாந்த் சிங் ராஜ்புத் என்ற நடிகரின் இறப்பு பற்றி விசாரித்தபோது, பாலிவுட் வாரிசு நடிகர்கள் பலர், போதை மாபியா போன்று செயல்பட்டது வெளிச்சத்திற்கு வந்தது.பல ஆண்டு காலமாக கறுப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுவதற்கு, பயங்கரவாதிகளின் சட்டவிரோத செயல்களுக்கு, பாலிவுட் உறுதுணையாக இருந்து வந்துள்ளது.போதைப் பழக்கம் அதிகரிப்பது, நாட்டில் சட்டம் - ஒழுங்கு கெட்டு, குற்றச் செயல்கள் அதிகரிக்க வழிவகுக்கிறது.

ஐ.நா., சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் 3 சதவீத மக்கள் பல்வேறு விதமான போதை மருந்துகளுக்கு அடிமையாகி உள்ளனர் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.இதை தாண்டி நாடு முழுதும், மது அருந்துவோர் மற்றும் புகை பிடிப்போர் எண்ணிக்கை பல கோடியை தாண்டி உள்ளது.இந்த போதைப் பழக்கம் வழிவழியாக வளர்ந்து வந்தாலும், மிகப் பெரிய அளவில் பரவுவதற்கு சினிமா தான் காரணம்.

சஞ்சய் தத், கங்கணா ரணாவத், ரன்பீர் கபூர், ப்ரதீக் பாபர் போன்ற பாலிவுட் நடிகர் - நடிகையர் தாங்கள் போதை மருந்தை எடுத்துக் கொண்டதை, கவர்ச்சி பொருள் விளம்பரம் போல நினைத்து பொதுவெளியில் பகிர்ந்தனர்.இருட்டு அறையில், திரையில் தோன்றும் பிம்பத்தில் தங்களின் தலைவர்களை தேடும் தமிழகம் போன்ற மாநிலங்களின் நிலைமை, இதை விட ஒரு படி மோசமாக உள்ளது.

மது அருந்துவது, சிகரெட் குடிப்பது, வேலையின்றி ஊர் சுற்றுவது, காதலிப்பது போன்றவை தான், ஒவ்வொரு இளைஞரின் கடமையும் என்பது போல தமிழ் படங்களில் காட்சிப்படுத்தி வந்துள்ளனர்.சமூக நீதி, புதிய கல்விக் கொள்கை, 'நீட்' போன்ற விஷயங்களில் அடிப்படை அறிவு கூட தெரியாத சில பிரபல நடிகர்கள், அவர்கள் தான் இந்நாட்டை காப்பாற்ற வந்தோர் போல மேடையில் முழங்கி வருகின்றனர்.

அந்த நடிகர்கள், வரி கூட ஒழுங்காக கட்டாத அயோக்கியர்கள். அதிக பணம் வருவதால், அறக்கட்டளை நடத்தி, கணக்கு காட்டும் பலே கில்லாடிகள்!தனி மனித ஒழுக்கம், சமூக நலன் என நல்வழிக்கு செல்ல வேண்டிய இளைஞர்களை, தவறான பாதைக்கு திருப்பும் சினிமா மற்றும் ஊடகங்களை தடை செய்தால், நாட்டிற்கு நன்மையே விளைவிக்கும்.

அதெல்லாம் சரிப்பட்டு வராது!

வி.ஹெச்.கே.ஹரிஹரன், திண்டுக்கல்லிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த மே மாத சட்டசபை தேர்தல் வெற்றிக்கு பின், திரிணமுல் காங்கிரஸ் பிற மாநிலங்களிலும் கால் பதிக்க எல்லா வழிகளிலும் எத்தனிக்கிறது.கடந்த ஜூலை 28ம் தேதி மம்தா பானர்ஜி, டில்லியில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுல் ஆகியோரை சந்தித்தார்.

அதன்பின் நடந்த இடைத்தேர்தலில், காங்., சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படவில்லை. திரிணமுல் காங்கிரசின் அதிகாரப்பூர்வ பத்திரிகையில், காங்., தோற்கடிக்க முடியாத பா.ஜ.,வை, திரிணமுல் காங்கிரஸ் தோற்கடித்துள்ளது. டில்லியில் பா.ஜ.,வை, காங்கிரஸ் தோற்கடிக்க தவறிவிட்டது. கடந்த இரு லோக்சபா தேர்தல்களும் இதை நிரூபித்ததாக கோடிட்டு காட்டப் பட்டு உள்ளது.

'திரிணமுல் காங்கிரஸ் தெருவில் இறங்கி பா.ஜ.,வை, எதிர்த்தது. காங்கிரஸ் சொகுசாக அமராமல் தெருவுக்கு வந்து, பா.ஜ.,வை சந்திக்க வேண்டும்' என, திரிணமுல் காங்கிரஸ் பொதுச் செயலர் அபிஷேக் பானர்ஜி அறிவுரை கூறுகிறார்.வலுவாக உள்ள பா.ஜ.,வை எதிர்க்க, எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணி என்பது, மிக அசாதாரணமானது.

எவ்வகையிலும் எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமை ஏற்பட வாய்ப்பே இல்லை. அப்படி கூட்டணி அமைந்தாலும், அதன் ஆயுள் என்பது சொற்ப காலமே.பா.ஜ.,வை எதிர்க்க கூட்டணி அமைப்பது வீண் வேலை; கட்சியை வளர்ப்பதே சரியானது!

தி.மு.க.,வினருக்கு ஒளிமயமான எதிர்காலம்!என்.வைகை வளவன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஒன்பது மாவட்டங்களில் நடந்த உள்ளாட்சி தேர்தலில், தி.மு.க., பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி உள்ளது. பொன் விழா கொண்டாடும் அ.தி.மு.க., படுதோல்வி அடைந்து அசிங்கப் பட்டுப் போயிருக்கிறது.

தனித்து போட்டியிட்ட பா.ம.க., நினைத்தபடி நிறைய இடங்களில் வெற்றி பெற முடியவில்லை. நடிகர் கமலின், ம.நீ.மய்யமும், சீமானின் நாம் தமிழர் கட்சியும், தே.மு.தி.க., மற்றும் அ.ம.மு.க., கட்சிகள் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.'நடிகர் விஜய் மக்கள் இயக்கம்' சார்பில் போட்டியிட்ட ரசிகர்கள், 110 இடங்களில் வெற்றி பெற்று அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளனர்.

'தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க., நிறைவேற்றவில்லை' என்ற அ.தி.மு.க., - பா.ஜ.,வின் வாதங்கள், இந்த உள்ளாட்சி தேர்தலில் எடுபடவில்லை.'ஆளுங்கட்சிக்கு ஆதரவாக ஓட்டு அளித்தால் தான், நம் கோரிக்கைகள் நிறைவேறும்' என்ற அசைக்க முடியாத முடிவுக்கு மக்கள் வந்து விட்டனர் என்பதை தான், இந்த ஊராட்சி தேர்தல் முடிவுகள் அம்பலப்படுத்தி உள்ளன.

இந்த தேர்தலில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் செய்யாமலேயே, தி.மு.க., பெருவாரியான இடங்களை கைப்பற்றி உள்ளது. இது நிச்சயம் அ.தி.மு.க., தலைவர்களுக்கு அதிர்ச்சி அளித்து இருக்கும்.அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் கோடிக்கணக்கான ரூபாய் கொள்ளை அடித்து சொத்து சேர்த்திருப்பதை, தி.மு.க., பகிரங்கப்படுத்தியது. இதுவும், அ.தி.மு.க.,வின் படுதோல்விக்கு முக்கிய காரணமாக இருக்கலாம்.

ஜெயலலிதாவுக்கு இருந்த துணிச்சல் பழனிசாமிக்கோ, பன்னீர்செல்வத்திற்கோ இல்லை என்பது தான், நிதர்சனமான உண்மை. இனிமேலும் அ.தி.மு.க.,வுக்கு இரட்டை தலைமை ஒத்துவராது.மருத்துவர் ராமதாசுக்கு, 'பா.ம.க.,விற்கு தனி செல்வாக்கு ஏதும் இல்லை' என்பதை, மக்கள் புரிய வைத்து விட்டனர்.

சீமான், தினகரன், கமல் போன்றோரை மக்கள் ரசிக்கின்றனரே தவிர, ஆதரிக்கவில்லை என்பதை, சட்டசபை மற்றும் உள்ளாட்சி தேர்தல்கள் தெளிவாக எடுத்து காட்டியுள்ளன.ஆட்சியில் இருக்கும் இந்த ஐந்து ஆண்டுகளும், தி.மு.க.,வினருக்கு மட்டும் ஒளிமயமாக இருக்கும் என்பது தெளிவாகி விட்டது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement