dinamalar telegram
Advertisement

தொற்று மாயமாகட்டும்; தொழில் சிறக்கட்டும்!

Share
Tamil News
திருப்பூர்:திருப்பூரில், ஆயுத பூஜையை சிறப்பான முறையில், பொதுமக்கள் கொண்டாடினர்.நேற்று, ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது. தொற்றின் இரண்டாவது அலை தணிந்துள்ள நிலையில், திருப்பூரில் ஆயுத பூஜையை பொதுமக்கள் விமரிசையாக கொண்டாடினர்.வீடுகளில், கல்விக்கடவுள் சரஸ்வதி உள்ளிட்ட சுவாமி படங்களை அலங்கரித்து வைத்திருந்தனர். பாடப்புத்தகங்கள் போன்றவற்றை சுவாமி படங்கள் முன்பு மாணவர்கள் வைத்தனர். வாழைக்கன்று, மாவிலை தோரணம் கட்டி, வீடுகள் அலங்கரிக்கப்பட்டிருந்தன. சுண்டல், பொரி, மிட்டாய், பாயாசம் போன்றவற்றை தலைவாழை இலையில் வைத்து படையலிட்டனர்.''ஏற்கனவே ஒன்பது முதல் பிளஸ் 2 வரை வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன. வரும் நவ., 1ம் தேதி முதல், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை வகுப்புகள் துவங்கப்படுகின்றன; மாணவர்களுக்கு கல்வி இனி தடையின்றிக் கிடைக்கும். இதேபோல், வேலைவாய்ப்புகள் இனி பெருகும்'' என்று பெற்றோர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.பனியன் நிறுவனங்கள்திருப்பூரில், உள்நாட்டு, ஏற்றுமதி ஆடை தயாரிப்பு நிறுவனங்கள்; நிட்டிங், டையிங், பிரின்டிங், எம்ப்ராய்டரி என, பல்வேறுவகை ஜாப்ஒர்க் நிறுவனங்கள் ஏராளம் உள்ளன.நேற்று முன்தினம், நிறுவனங்களில் துாய்மை பணி நடந்தது. நிறுவன வளாகம், ஆடை தயாரிப்புக்கு பயன்படுத்தும் மெஷினரிகள் துாய்மை செய்யப்பட்டன.திருப்பூர் -- தாராபுரம் ரோடு, காங்கயம் ரோடு, அவிநாசி ரோடு, பல்லடம் ரோடு உள்பட அனைத்து பகுதிகளில் உள்ள நிறுவனங்களிலும், நேற்று காலை, ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது.தொழிலாளர்கள், நிறுவன நுழைவாயிலில் சாணம் தெளித்து, வண்ண கோலமிட்டனர்; வாழை மரம் கட்டி, மாவிலை தோரணம், வண்ண காகித அலங்கார தோரணங்கள் தொங்கவிடப்பட்டது. நிட்டிங், டையிங், பிரின்டிங், எம்ப்ராய்டரி, தையல் என ஆடை தயாரிப்புக்கு பயன்படுத்தும் மெஷின்களில், சந்தனம், குங்கும் பொட்டு வைத்து, பூ மாலை தொங்கவிடப்பட்டது.விநாயகர், சரஸ்வதி, லட்சுமி சுவாமி படங்கள் வைத்து, பூ அலங்காரம்; வெற்றிலை பாக்கு, கனி வகைகள், சுண்டல், பொரி, அவல், பாயாசம், படையல்; கணக்கு புத்தகம்; சாவி கொத்து வைத்து வழிபட்டனர்.சரக்கு போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் வாகனங்கங்கள்; தொழிலாளர் பயன்படுத்தும் இருசக்கர வாகனங்களை தண்ணீர் விட்டு சுத்தம் செய்து, மாலை அணிவித்து, வழிபட்டனர்.'தொற்று முற்றிலும் ஒழியவேண்டும்; தொழில் சிறக்கவேண்டும்' என, வேண்டினர். தொழிலாளர் உட்பட அனைவருக்கும் பொங்கல், பிரசாதம் வழங்கப்பட்டது. சில நிறுவனங்களில், மாலை, 5:00 மணிக்கு ஆயுதபூஜை கொண்டாடப்பட்டது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement