dinamalar telegram
Advertisement

உள்ளூரிலேயே வேலை வாய்ப்பு உருவாக்கம் தொழில் கூட்டமைப்பினருடன் ஆலோசனை

Share
கரூர்: கரூரில், வேலை தேடும் நபர்களுக்கு இந்திய தொழில் கூட்டமைப்பினர் உதவியுடன் உள்ளூரிலேயே தனியார் வேலைவாய்ப்புகளை உருவாக்குவது குறித்த ஆலோனை கூட்டம் நடந்தது. கலெக்டர் பிரபுசங்கர் தலைமை வகித்து பேசியதாவது: ஆயத்த ஆடை, கொசுவலை, பஸ் கட்டுமானம் மற்றும் இன்னும் பல தொழில்நகரமாக விளங்குவது நம் மாவட்டம். வேலை தேடும் ஏராளமான நபர்கள் உள்ள நிலையில், அவர்களுக்கு ஏற்ற வேலைவாய்ப்புகளில் பணி வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் மாவட்ட நிர்வாகம் முயற்சி எடுத்து வருகிறது. இதில், இந்திய தொழில் கூட்டமைப்பினரின் ஒத்துழைப்பு இன்றியமையாதது. தங்களுக்கு தேவையான பணிகளுக்கு உரிய கல்வித்தகுதி உள்ளவர்களை தேர்ந்தெடுத்து, அவர்களின் பணிக்கு ஏற்ற பயிற்சிகளை தொழில் நிறுவனங்களே வழங்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக, தனியார் வேலைவாய்ப்பிற்கென்று சிறப்பு இணையதளம் உருவாக்கப்பட்டு, வேலை தேடுபவர்களையும், வேலை கொடுக்கும் தொழில் நிறுவனங்களையும் அதில் ஒருங்கிணைக்க வேண்டும். முதற்கட்டமாக மாவட்டத்தில் உற்பத்தி தொழில்கள், சேவைசார்ந்த தொழில்கள் என எண்ணற்ற தொழில்கள் உள்ளன. அந்த தொழில்களில் தொழில்நுட்ப வல்லுநர், ஆயத்த ஆடை வடிவமைப்பாளர், தையலர், மெக்கானிக், பிளம்பர், எலக்ட்ரீஷியன் என எந்தெந்த வகையிலான பணிக்கு என்னென்ன கல்வித்தகுதியுடன் ஆட்கள் தேவை என்ற விபரங்கள் அடங்கிய பட்டியலை அனைத்து வகையான தொழில் நிறுவனங்களிடமிருந்தும் மாவட்ட தொழில்மையம் இந்திய தொழில் கூட்டமைப்பினரின் உதவியுடன் சேகரிக்க வேண்டும். தமிழ்நாடு நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ், 'நகர வாழ்வாதார மையம்' என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தின் மூலம் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் வசிக்கும் மக்களில் எலக்ட்ரீஷியன், பிளம்பர், தையல், துணி தேய்ப்பவர் உள்ளிட்ட பணிகளில் பயிற்சி பெற்றவர்களின் விபரம் karurclc@gmail.com என்ற இணையதளத்தில் சேகரிக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலத்தில் இந்த இணையதளத்தின் மூலம் கரூர் மாவட்டத்தில் உள்ள தொழில்களுக்கு தேவைப்படுகின்ற பணிகளுக்கு ஏற்ப பல்வேறு துறைகளின் மூலம் வழங்கப்படும் பயிற்சிகளை ஒருங்கிணைத்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இவ்வாறு, அவர் பேசினார். இந்திய தொழில் கூட்டமைப்பு கரூர் மாவட்ட துணைத்தலைவர் வெங்கடேசன், திறன் வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம், இணை ஒருங்கிணைப்பாளர் வசந்தகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement