dinamalar telegram
Advertisement

மொழி தெரியாது வழி புரியாது ஆனாலும் சென்னை வாழவைக்கிறது

Share

பெரிய கண்கள் அடர்த்தியான வண்ணத்துடன் விதவிதமான துர்கா மற்றும் காளி பொம்மைகள் சென்னை தி.நகர் வெங்கட்நாராயணா ரோடு தக்கர் பாபா வித்யாலயாவில் தயாராகிக் கொண்டு இருக்கிறது. மொழி தெரியாது ,விட்டால் போய் வர வழி புரியாது ஆனாலும் சென்னைதான் எங்களை நீண்ட காலமாக வாழவைக்கிறது என்று மனம் நெகிழ்கிறார் பொம்மைகள் தயாரித்து வரும் குழுவின் தலைவர் ஈஸ்வர் மோகன் பால்.நாம் எந்த ஊர் சென்றாலும் அந்த ஊரில் முருகன், மாரியம்மன் கோவில்கள் இருக்கிறதா? என்று தேடிப் போய் வழிபடுவது போல சென்னைக்கு குடிபெயர்ந்துள்ள கோல்கட்டா மற்றும் சுற்றியுள்ள மேற்கு வங்கத்தைச் சார்ந்த மக்கள் தங்களது இஷ்ட தெய்வமான துர்கை மற்றும் காளியை வணங்குவர். நாம் நவராத்திரி கொண்டாடுவது போல அவர்கள் துர்கா பூஜை கொண்டாடுவர்.விநாயகர் சிலை செய்து பொது இடத்தில் வைத்து வழிபாடு செய்வது போல இவர்கள் விதவிதமாக துர்கை மற்றும் காளி பொம்மைகள் செய்து அவர்கள் வாழ்விடத்தில் வைத்து வழிபட்டு பின் கடலில் கரைப்பர்.
இதற்காக ஒரு காலத்தில் சிலைகள் வாங்க கொல்கத்தா சென்று வந்தனர் அங்கு இருந்து சிலைகளை கொண்டு வருவதில் பலவித சிரமம் இருக்கவே சிலை செய்பவர்களை வரவழைத்து தங்களது தேவைக்கு ஏற்ப சென்னையிலேயே சிலைகள் செய்தனர்.

இதற்காக கடந்த 1982ம் ஆண்டு சென்னைக்கு தன் குழுவினருடன் வந்தவர்தான் ஈஸ்வர். அந்த ஆண்டு இருபது சிலைகள் செய்வதற்காக வந்தார், வந்து செய்து கொடுத்துவிட்டு சென்றுவிட்டார். அது முதல் தொடர்ந்து இப்போது வரை வந்து கொண்டிருக்கிறார். நடுவில் கொரோனா காரணமாக இரண்டு ஆண்டு மட்டும் வரவில்லை என்றார்.ஆரம்பத்தில் இருபது பொம்மைகள் செய்து தந்தவர் இப்போது இருநுாறு பொம்மைகள் வரை செய்து தருகிறார். ஒரு பொம்மை உருவாக்க பத்தில் இருந்து இருபது நாட்கள் வரையாகும். பொம்மை செய்ய தேவையான பொருட்கள் யாவும் கோல்கட்டாவில் இருந்தே கொண்டு வந்து விடுகிறார். இவருடன் ஐந்திற்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்கின்றனர்.

கடந்த மூன்று மாதத்திற்கு முன்பிருந்தே வேலைகளை துவங்கிவிட்டார். பத்தாம் தேதி அனைத்து பொம்மைகளையும் வழங்கிவிட்டு பிறகு ஊர் சென்றுவிடுவார். இப்படி வருடத்தில் மூன்று மாதம் சென்னையில் தங்கியிருந்து விதவிதமான துர்கா மற்றும் காளி பொம்மைகள் தயார் செய்துதரும் இவருக்கு இந்தி மற்றும் வங்க மொழி மட்டுமே தெரியும்.

பொம்மைகளின் விலை விவரம் எல்லாம் தர தயங்கியவர் இதை வாங்குபவர்களுக்கு எல்லா விவரமும் தெரியும் நாங்கள் மனநிறைவாக செல்லும்படியாக சன்மானமும் பரிசுப்பொருளும் தந்து அனுப்புவர். அதனால்தான் அடுத்து எப்போது சென்னை வருவோம் என்ற துடிப்புடன் இருப்போம்.

இந்த பொம்மைகள் அனைத்தும் பராம்பரியமான முறையிலேயே தொடர்கிறோம் எவ்வித மாற்றமும் செய்வதில்லை தவிர இது எங்களிடம் தயராகும் வரைதான் பொம்மை அவர்களிடம் சென்ற பிறகு அது வழிபாட்டிற்குரிய தெய்வம் ஆகவே அதற்குரிய தன்மை மாறாமல் பார்த்துக் கொள்வோம்.துர்கை சாந்த சொரூபினி காளி ஆங்கார வடிவத்தினள் இருவருமே தீமைகளை அழித்து பக்தர்களை காத்தருள்பவர்களே.

இங்கு வைத்து துர்கா பொம்மை செய்வதன் மூலம் எங்களுக்கு மன நிறைவும் சந்தோஷமும் நிறைய இருக்கிறது ஆகவே எங்களை வாழவைக்கும் துர்கா தேவிக்கும் சென்னைக்கும் நன்றி தெரிவிப்பதாக ஈஸ்வர் கூறி முடித்தார்.
ஈஸ்வர் தயார் செய்யும் துர்கா தேவி பொம்மைகளில் வலது பக்கம் சரஸ்வதியும் இடது பக்கம் லட்சுமியும் கீழே இடது பக்கத்தில் விநாயகரும் வலது பக்கத்தில் முருகனும் இடம் பெற்றுள்ளனர்.இதில் மயில் மேல் அமர்ந்துள்ள முருகன், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி போல மீசை வைத்துள்ளார்.இது பற்றி ஈஸ்வர் கூறுகையில் எங்க பக்கம் (மே,வங்கம்) முருகன் என்றால் மீசை வைத்துத்தான் தயாரிப்போம் மேலும் இங்கேதான் முருகனுக்கு வள்ளி தெய்வானை என இரண்டு மனைவிகள் அங்கே அவர் திருமணமாகாத பிரம்மச்சாரி கடவுள் என்றும் குறிப்பிட்டார்.
-எல்.முருகராஜ்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • S.kausalya - Chennai,இந்தியா

    இங்கு ஒரு , . முருகன் தமிழ் கடவுள், எனவே முருகனை கடவுளாக வட நாட்டில் ஏற்பதில்லை என்றும் ,கூரி திரிகிறது. இந்த பொம்மை தயாரிப்பாளர் கூறுவதில் இருந்து தான் மேற்கு வாங்க மக்களும் முருகனை பிரமச்சரியாக கும்பிடுகிரார்கள் என தெரிய வருகிறது. குண்டு சட்டிக்குள் இதுவரை குதிரை சவாரி நடந்துள்ளது. நாமும் இவன் போன்ற ஆட்கள் சொல்வது சரி என நம்பி இருக்கிறோம். வேதனை

Advertisement