dinamalar telegram
Advertisement

அமரீந்தர் திட்டம் என்ன?

Share
Tamil News
பஞ்சாப் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த அமரீந்தர் சிங், சமீபத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்துப் பேசினார். 'பாகிஸ்தான் எப்படி பஞ்சாபிற்குள் 'ட்ரோன்' களை அனுப்புகிறது. பாக்., பயங்கரவாதிகளுடன் பஞ்சாபில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது' என, பல தகவல்களை உள்துறை அமைச்சரிடமும், அஜித் தோவலிடமும் எடுத்து சொல்லியதோடு, சில ஆவணங்களையும் கொடுத்துள்ளாராம். தான் முதல்வராகயிருந்த போது கிடைத்த அனைத்து விஷயங்களையும் அமித் ஷாவிடம் சொல்லிவிட்டார். மத்திய உளவுத்துறையிடம் இந்த விபரங்கள் இருந்தாலும், சில நுணுக்கமான விஷயங்களையும் அமரீந்தர் தெரிவித்துள்ளார் என்கின்றனர். தன் பதவிக்கு வேட்டு வைத்த முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங்கிற்கும், பாகிஸ்தானுக்கும் உள்ள தொடர்பு குறித்தும், பல விஷயங்களை மத்திய அரசிடம் கூறியுள்ளார் அமரீந்தர். அடுத்தாண்டு நடக்கவுள்ள சட்டசபை தேர்தல் வரை காங்கிரசிலேயே இருந்து குழப்பத்தை உண்டாக்கப் போகிறாராம்.

‛பஞ்சாப் குழப்பம்'பஞ்சாப் மாநிலத்தில் எப்படி இருந்த காங்கிரஸ், இப்படி ஆகிவிட்டதே' என புலம்புகின்றனர், கட்சியின் மூத்த நிர்வாகிகள். இதற்கு காரணம் ராகுலும், அவரது சகோதரி பிரியங்காவும் தான் என்றும் அவர்கள் முணு முணுக்கின்றனர். ராகுலோ, என்ன சொல்வது என தெரியாமல் நொந்து போய் உள்ளார். 'கட்சியின் நன்மைக்காக பல முடிவுகள் எடுத்து செயல்படுத்தினால், எனக்கு மட்டும் கடைசியில் இப்படி ஆகிவிடுகிறதே' என, நெருக்கமானவர்களிடம் சொல்லி வருத்தப்படுகிறார். மூத்த தலைவர்கள் கோஷ்டிகளை வளர்த்து விடுகின்றனர் என்பதால், அவர்கள் அனைவரையும் ஓரங்கட்டினார் ராகுல். இளைஞர்களை முக்கிய பதவிகளில் நியமித்தார். ஆனால், சீனியர்களோ கட்சியை ஒரு வழியாக்கி வருகின்றனர்.

வெறுத்துப் போன ராகுல்ஒரு பக்கம் பஞ்சாப் விவகாரம் தலையைப் பிய்த்துக் கொண்டிருக்க, மற்றொரு பக்கம் தமிழக காங்., தொடர்பான வீடியோவால் மனம் உடைந்து போயுள்ளார் ராகுல். அந்த வீடியோ தமிழில் இருந்தாலும், அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ராகுலுக்கு சொல்லியிருக்கின்றனர் அவரது உதவியாளர்கள். 'ஏன் இப்படி நடக்கிறது தமிழகத்தில்' என வெறுத்துப் போயுள்ளாராம் ராகுல்.இந்த வீடியோ தொடர்பாக தமிழக காங்., தலைவரிடம் விரைவில் விளக்கம் கேட்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது. 'தமிழக காங்., தலைவர் அழகிரியை மாற்ற வேண்டும் என தீவிரமாக செயல்படும் கோஷ்டியின் வேலை இது. இந்த வீடியோவை ராகுலுக்கு அனுப்பியவர், தற்போதைய எம்.பி.,யும், தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவருமான ஒரு நபர்' என, சொல்லப்படுகிறது.

தமிழகம் வருகிறார் கமலா ஹாரிஸ்?சமீபத்தில் அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோரை சந்தித்துப் பேசினார். அப்போது இந்தியாவுக்கு வரும்படி இருவருக்கும் அழைப்பு விடுத்தார். இதை ஏற்றுக் கொண்ட கமலா ஹாரிஸ், விரைவில் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். அடுத்த ஆண்டு அவர் இந்தியாவுக்கு வரும்போது, தமிழகத்திற்கும் வருவார் என சொல்லப்படுகிறது. தன் பூர்வீக கிராமத்திற்கும் கமலா வருகை தரவுள்ளார். இது தொடர்பான பூர்வாங்க வேலைகள் துவங்கி விட்டன. மிகப் பெரிய அளவில் கமலாவுக்கு தமிழகத்தில் வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

அண்ணாமலைக்கு மத்திய பாதுகாப்பு'தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை படு வேகமாக செயல்பட்டு வருகிறார். எந்த பிரச்னையையும் திறமையாக கையாள்கிறார். சிக்கலான விஷயங்களையும் எளிதாக முடித்து வைக்கிறார்' என, டில்லி பா.ஜ., தலைவர்கள் சொல்கின்றனர். குறிப்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா, இவர் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளார். 'அண்ணாமலையின் செயல்பாட்டால், தமிழக அரசியலில் அவருக்கு அதிக அளவில் எதிர்ப்புகள் உள்ளன. அவர் மீது தாக்குதல் நடத்தவும் வாய்ப்புள்ளது' என, உளவுத்துறையினர் அமித் ஷாவிற்கு அறிக்கை அளித்துள்ளனர். இதையடுத்து, அண்ணாமலைக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் பாதுகாப்பு அளிக்க அமித் ஷா முடிவெடுத்துள்ளார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement