dinamalar telegram
Advertisement

கிராமங்களுக்கான குடிநீர் சப்ளை : தாகம் தீரும்! தொழில்நுட்ப குழுவினர் ஆய்வு

Share
Tamil News
அவிநாசி:அவிநாசி அருகேயுள்ள கிராம ஊராட்சிகளுக்கு, குடிநீர் வினியோகத்தில் உள்ள பிரச்னை குறித்த, 'தினமலர்' செய்தி எதிரொலியால், தொழில்நுட்ப குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

அவிநாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பழங்கரை, சின்னேரிபாளையம், குப்பாண்டம்பாளையம் ஊராட்சிகளுக்கு, குடிநீர் வடிகால் வாரியம் மூலம், இரண்டாவது கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ், குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. அவிநாசிலிங்கம்பாளையத்தை மையமாக கொண்ட குழாய் மூலம், முதலில் பழங்கரை ஊராட்சிக்கு தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது.

அந்த ஊராட்சி மக்களின் பயன்பாடு போக எஞ்சிய தண்ணீர், நியூ திருப்பூர் அருகே வேலுார் என்ற இடத்தில் உள்ள தரைமட்ட நீர்தேக்க தொட்டியில் விழுகிறது. அங்கிருந்து மேட்டார் மூலம் பம்ப் செய்யப்பட்டு. குப்பாண்டம்பாளையம் மற்றும் சின்னேரிபாளையம் ஊராட்சிகளுக்கு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.இதனால், சின்னேரிபாளையம் மற்றும் குப்பாண்டம்பாளையம் ஊராட்சி மக்களுக்கு கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது என, அந்தந்த ஊராட்சி தலைவர்கள், மாவட்ட கலெக்டரிடம் மனு வழங்கினர்.

இதுகுறித்த விரிவான செய்தி, 'தினமலர்' நாளிதழிலும் வெளியானது.விளைவாக, குடிநீர் வடிகால் வாரியத்தினர் துரித நடவடிக்கை மேற்கொண்டனர், குடிநீர் வினியோகத்தில் உள்ள பிரச்னைகளை கண்டறிவதற்காக, கோவை மற்றும் நீலகிரியில் இருந்து குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர்கள் அடங்கிய குழுவினர் வரவழைக்கப்பட்டு, கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. "அவர்களது விரிவான அறிக்கை, வடிகால் வாரிய தலைமை பொறியாளரிடம் வழங்கப்படும். அவரது உத்தரவின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.'இதனால், குடிநீர் பற்றாக்குறை பிரச்னைக்கு விரைவில் தீர்வு கிடைக்கும்,' என, ஊராட்சி மக்கள் நம்பிக்கையில் உள்ளனர்.

குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:மின்வாரியம் சார்பில் அவ்வப்போது பராமரிப்பு பணிக்கென மின்வெட்டு செய்யப்படுகிறது. நீரேற்ற நிலையங்களில் உள்ள மோட்டார்கள் இயக்கப்பட்டு, தண்ணீர் வினியோகம் இயல்பாக சென்று கொண்டிருக்கும் போது, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டால், செயலிழக்கும் மோட்டார்களை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வந்து தண்ணீர் வினியோகிக்க, 3 மணி நேரம் தேவைப்படும்; தினமும், அவ்வப்போது, 3 நிமிடம் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டாலே, 9 மணி நேரம் வீணாகிவிடும்.
இதனால் தான் குடிநீர் வினியோகம் சீராக இல்லை; அதிகம் பாதிக்கப்படுவது, கடைகோடி கிராமங்கள் தான். எனவே, சீராக தண்ணீர் வினியோகம் செய்ய, 24 மணி நேரமும் தடையின்றி மின் இணைப்பு வழங்கப்பட வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
ஒரு நிமிட கரன்ட் 'கட்'மூன்று மணி நேரம் இழப்பு
இரண்டாவது குடிநீர் திட்டத்தின் கீழ் பெறப்படும் தண்ணீர், மேட்டுப்பாளையம் பத்ரகாளியம்மன், நடுவூர், பொகளூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள நீரேற்ற நிலையங்களின் மூலம் அன்னூர், அவிநாசி, திருமுருகன்பூண்டி, சுற்றியுள்ள கிராம ஊராட்சிகள், திருப்பூர் மாநகராட்சி, இடுவாய், மங்கலம் ரோடு, அக்ரஹாரம், பூலுவபட்டி என பல இடங்களுக்கு வினியோகிக்கப்படுகிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement