dinamalar telegram
Advertisement

கமலா ஹாரிசுடன் பிரதமர் மோடி சந்திப்பு

Share
வாஷிங்டன்:அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசை, பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து சர்வதேச விவகாரங்கள் குறித்து பேசினார்.

நான்கு நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசை சந்தித்து பேசினார். இதைத் தொடர்ந்து இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது மோடி கூறியதாவது: இந்தியாவும், அமெரிக்காவும் இயற்கையிலேயே நட்பு நாடுகளாக விளங்குகின்றன. இரு நாடுகளும் உலகின் மிகப் பெரிய பழமையான ஜனநாயக நாடுகள்.

பல சாதனைகள்அவற்றின் தொன்மை, மதிப்பு, புவிசார் அரசியல் கொள்கைகள் ஆகியவற்றில் ஒற்றுமை உள்ளது. இரு நாடுகள் இடையிலான ஒத்துழைப்பும், கூட்டுறவும் அதிகரித்து வருகிறது. உலகம் மிகக் கடுமையான சவாலை சந்தித்த நேரத்தில், அமெரிக்காவின் உயர் பொறுப்பை ஜோ பைடன், கமலா ஹாரிசும் ஏற்றுள்ளனர். குறுகிய காலத்தில் கொரோனா, பருவ நிலை மாற்றம், 'குவாட்' தொடர்பாக பல சாதனைகளை படைத்துள்ளனர்.

அமெரிக்காவின் முதல் பெண் துணை ஜனாதிபதி என்ற சிறப்பை பெற்றுள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ், உலகம் முழுதும் முன்னேறத் துடிக்கும் பலருக்கு உந்து சக்தியாக உருவெடுத்துள்ளார்.ஆப்கன், இந்தோ - பசிபிக் உள்ளிட்ட சர்வதேச விவகாரங்கள் குறித்து இருவரும் விவாதித்தோம். இரு நாடுகளின் கலாசார இணைப்பு, பரஸ்பர மதிப்பு ஆகியவற்றை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் எங்கள் பேச்சு அமைந்தது.இவ்வாறு அவர் பேசினார்.

இதைத் தொடர்ந்து கமலா ஹாரிஸ் கூறியதாவது: இந்தோ - பசிபிக் கடல் பிராந்தியத்தின் அமைதி பராமரிக்கப்பட வேண்டும் என இந்தியாவும், அமெரிக்காவும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. கொரோனா தடுப்பூசியை மீண்டும் ஏற்றுமதி செய்ய இந்தியா முடிவெடுத்து இருப்பது வரவேற்கத் தக்கது. ஆப்கன் நிலவரம், பருவ நிலை மாற்றம், இந்தோ - பசிபிக் பிரச்னை ஆகியவை தொடர்பாக ஆக்கப்பூர்வமான பேச்சு நடந்தது. இவ்வாறு அவர் பேசினார்.

இந்த சந்திப்பின் போது, கமலா ஹாரிஸ், அவரது கணவர் டக்லஸ் எம்ஹாப் ஆகியோரை இந்தியாவுக்கு வரும்படி பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். அமெரிக்க துணை அதிபருக்கு அசத்தலான பரிசு!பிரதமர் மோடி, அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசை சந்தித்தபோது, அவருக்கு சில பரிசுப் பொருட்களை வழங்கினார்.

கமலாவின் தாத்தா பி.வி.கோபாலன் சென்னையில் வசித்தவர். இந்திய அரசு ஊழியராக பல்வேறு நிலைகளில் பணிபுரிந்தவர். கடந்த 1966ம் ஆண்டு ஜன., 28ல் அவர் இணைச் செயலராக நியமிக்கப்பட்டதற்கான அரசு உத்தரவு 1966 பிப்., கெஜட்டில் வெளியானது. அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய பிரேமில், 55 ஆண்டுகளுக்கு முன் வெளியான இந்திய அரசு கெஜட்டின் பிரதியை கமலாவுக்கு, பிரதமர் மோடி பரிசாக வழங்கினார்.

மேலும், 'குலாபி மீனாகாரி' என்ற சதுரங்க பலகையும் வழங்கினார். இது, வாரணாசி கைவினைக் கலைஞர்களால் வடிவமைக்கப்படுவது. வட மாநிலங்களில் மிகவும் புகழ் பெற்றது. மேலும், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனுக்கு வெள்ளியால் ஆன குலாபி மீனாகாரி கப்பல் சிற்பம், ஜப்பான் பிரதமர் யோஷிஹைடு சுகாவுக்கு சந்தன மரத்தில் செய்யப்பட்ட புத்தர் சிலை ஆகியவற்றையும் பிரதமர் மோடி வழங்கினார்.

பரஸ்பர பாதுகாப்புஅமெரிக்காவில் 'குவாட்' மாநாட்டில் பங்கேற்க வந்த ஜப்பான் பிரதமர் யோஷிஹைடு சுகாவை, பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அப்போது, இந்தோ - பசிபிக் கடல் பிராந்தியத்தின் அமைதி, ஆப்கன் விவகாரம் உள்ளிட்ட சர்வதேச பிரச்னைகள் குறித்து இருவரும் கருத்துகளை பரிமாறினர். இந்தியா - ஜப்பான் இடையே சமீப ஆண்டுகளில் பொருளாதார உறவு மேம்பட்டு வருவது குறித்து இருவரும் திருப்தி தெரிவித்தனர்.

ராணுவ ஆயுதங்கள், தொழில் நுட்பங்கள், பரஸ்பர பாதுகாப்பு உள்ளிட்டவை தொடர்பாக, இரு நாடுகள் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் விவாதித்ததாக வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement