dinamalar telegram
Advertisement

ஆய்வகத்தில் விளையும் அசத்தல் காபி!

Share
Tamil News
தோட்டப்பயிர்களுக்கு தலைமை வகிப்பது காபி. ஆனால், அதன் மீது ஒரு புகார் உண்டு. ஆண்டுதோறும் தேவை அதிகரிப்பதால், மேலும் மேலும் காடுகளை அழித்தே காபி பயிராகிறது. எனவே, சுற்றுச்சூழலுக்கு காபி ஒரு பெரும் சுமை என்பது தான் குற்றச்சாட்டு.

இதற்கு மாற்றாக, பின்லாந்தின் வி.டிடி., தாவர உயிரி ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள், ஆய்வகத்திலேயே காபியை தயாரிக்கும் முயற்சியில் வெற்றி கண்டுள்ளனர். அவர்களது ஆய்வு, 'செல் வேளாண்மை' முறையில் காபியை ஆய்வகத்திலேயே வளர்த்தெடுக்கிறது.

முழு செடியாகவோ, காபி கொட்டை வடிவிலோ இல்லை. காபி செடியின் இலையை எடுத்து, அதிலுள்ள செல்களை எடுத்து, 'பயோ ரியாக்டர்' எனப்படும் உயிரிக் கலன்களில் ஊட்டம் மிக்க திரவத்திற்கு வைத்து காபி செல்களை வளர்ப்பர்.

இப்படி பல்கிப் பெருகும் காபி செல்களை, குறிப்பிட்ட நாட்களுக்குப் பிறகு எடுத்து வறுப்பர். உடனே மணக்கும் காபித் துாள் தயாராகிவிடும். இப்படித் தயாரான காபித் துாள்களை அண்மையில் சோதித்துப பார்த்த வி.டி.டி., ஆய்வக விஞ்ஞானிகள், அவை அசல் காபி போலவே மணமும் ருசியும் கொண்டிருந்ததாக தெரிவித்தனர். செல் வேளாண்மையில் விளைந்த காபிக்கு, அதிக இடமோ, தண்ணீரோ, பூச்சி மருந்து மற்றும் உரங்களோ தேவையில்லை.

மேலும், மூட்டை மூட்டையாக காபிக் கொட்டை மற்றும் தூள்களை வாகனங்கள் மூலம் அனுப்ப வேண்டிய கட்டாயம் இல்லை. பசுமை காபித் தூள் நம் கைகளுக்கு வருவதற்கு இன்னும் நான்கு ஆண்டுகளாவது காத்திருக்க வேண்டும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement