dinamalar telegram
Advertisement

தொழில் துவங்கும் வாய்ப்புகளை எளிமைப்படுத்த வேண்டும்: ரங்கசாமி

Share
Tamil News
புதுச்சேரி : ''புதுச்சேரியில், புதிய தொழிற்சாலைகள் துவங்குவதற்கான வாய்ப்புகளை எளிமைப்படுத்த அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும்'' என முதல்வர் ரங்கசாமி பேசினார்.

பிள்ளைச்சாவடியில் உள்ள புதுச்சேரி பல்கலைக் கழக கலாசார மையத்தில், இந்திய அரசு வணிகம் மற்றும் தொழில் அமைச்சகம் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு கழகம் சார்பில் ஏற்றுமதியாளர்கள் மாநாடு, கண்காட்சி நேற்று நடந்தது. மாநாட்டில், முதல்வர் ரங்கசாமி பேசியதாவது:கொரோனா காலத்தில் சோர்ந்திருந்த தொழிலதிபர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் இந்த மாநாடு அமைந்துள்ளது. கொரோனாவிற்கு பிறகு தொழில்கள் மீண்டும் நடக்குமா என்ற ஏக்கத்தில் இருந்தவர்களுக்கு, ஊரடங்கு தளர்வுகள் நீங்கி, தொழில் தொடங்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.புதுச்சேரியில் கடந்த காலங்களில் இருந்ததைப் போல் பல தொழிற்சாலைகள் இப்போது இல்லை. தொழிலாளர்கள் போராட்டம், தொழிலதிபர்கள் எதிர்பார்த்த சலுகையின்மை போன்ற காரணங்களால் பல தொழிற்சாலைகள் போய்விட்டன.

நமது மாநிலத்தில் தொழில் தொடங்க தொழிலதிபர்களை ஈர்க்கச் செய்ய வேண்டும். தொழில் தொடங்க சங்கடமில்லாத நிலையை அதிகாரிகள் ஏற்படுத்த வேண்டும்.புதுச்சேரி சிறிய மாநிலம். இங்கு தொழிற்சாலைகள் வந்தால் தான் பலருக்கும் வேலை கிடைக்கும்.மாநிலத்தில் தொழில் தொடங்க அனுமதி வழங்கும் ஒற்றைச்சாளர முறையில் பல சங்கடங்கள் உள்ளன. முதல்வராக உள்ள நானே அதில் உள்ள சங்கடங்களை அனுபவித்துள்ளேன்.தொழிலதிபர்கள், கடன் பெற்று தொழில் தொடங்கும் நிலையில், அனுமதிக்கு நாம் தாமதப்படுத்தினால்

அவர்கள் பாதிக்கப்படுவர். இந்த நிலையை தவிர்க்க வேண்டும். தொழில் துவங்குவதற்கான அனைத்து அனுமதியையும் ஒரே இடத்தில் வழங்க வேண்டும்.தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் உடனே அனுமதி கிடைப்பதால், பல நிறுவனங்கள் அங்கே செல்கின்றன. மின் இணைப்பு போன்றவற்றை உடனே வழங்க வேண்டும்.சேதராப்பட்டில் சிறப்பு பொருளாதார மண்டலத்துக்காக 750 ஏக்கர் நிலத்தை எடுத்து வைத்திருந்தும், மத்திய அரசு அனுமதி தராததால் கடந்த 10 ஆண்டுகளாக வீணாகவே உள்ளது.புதிய தொழிற்சாலைகள் இல்லாததால், பொறியியல் படித்த பலர் வேலையின்றி உள்ளனர்.

மாநில வளர்ச்சிக்கும், வேலை வாய்ப்புக்கும் தொழிற்சாலைகள் அவசியம்.புதிய தொழிற்சாலைகள் வருவதற்கு எளிமையான வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும். இதில் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும். மத்திய, மாநில அரசுகள் இதற்கான உதவிகளை செய்யும்.இவ்வாறு அவர் பேசினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement