dinamalar telegram
Advertisement

ஒரிக்கை மகாசுவாமி மண்டபம்

Share
நீண்ட காலத்திற்கு முன் திருமழிசையாழ்வார் காஞ்சி பெருமாளுக்கு சேவை செய்து வாழ்ந்து வந்தார் அவரின் சீடர் கணிகண்ணன் அவர் ஒரு முறை மன்னரின் கோபத்திற்கு ஆளானார்.அவர் நாடு கடந்து செல்ல பணிக்கப்பட்டார்.
சீடரும் கிளம்பினார், சீடரை பிரிய மனமில்லாத திருமழிசையாழ்வாரும் சீடருடன் கிளம்பிச் சென்றார், இவர்கள் இருவரும் ஊருக்கு வெளியே ஒரு இடத்தில் வந்து தங்கினர். இவர்கள் இருவரையும் பிரிய மனமில்லாத பெருமாளும் கோவிலைவிட்டுக் கிளம்பி இவர்கள் இருப்பிடத்திற்கு வந்து இவர்களுடனே ஒர் இரவு முழுவதும் தங்கினார்.இந்த செய்தி அறிந்த மன்னர் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டு மீண்டும் அவரவர் இடத்திற்கு வரவழைத்தார்.பெருமாள்,திருமழிசையாழ்வார்,சீடர் கணிகண்னன் மூவரும் ஒர் இரவு தங்கியிருந்த இடம்தான் ஒர் இரவு இருக்கை என்ற பெயரால் வழங்கப்பட்டு பின்னர் அந்தப் பெயரே மருவி தற்போது ஒரிருக்கையாகி உள்ளது.
இந்த இடத்தின் புனிதம் கருதி காஞ்சி பெரியவர் இங்கு சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொண்டு உள்ளார்.
மழை பெய்து புல் புண்டு முளைக்கும் இந்த காலகட்டத்தில் புழு பூச்சி போன்ற பல சிறு உயிரினங்கள் மண்ணில் அங்கு இங்கும் செல்லும்,அவைகள் கால்பட்டு உயிரிழந்துவிடக்கூடாது என்பதற்காக அறுபது நாட்கள் எங்கும் போகாமல் ஒரே இடத்தில் இருந்து ஆன்மீக செயல்களில் ஈடுபடுவதுதான் சாதுர்மாஸ்ய விரதம்.பெரியவர் எப்படி ஒரே இடத்தில் இருந்து அறுபது நாட்கள் இந்த விரதத்தை மேற்கொண்டாரோ அதே போல இப்போது உள்ள காஞ்சி சங்கரமடம் சுவாமிகளான விஜயேந்திர சுவாமிகளும் கடந்த அறுபது நாட்கள் ஒரிக்கையில் தங்கியிருந்து விரதம் மேற்கொண்டார்.
கடந்த அறுபது நாட்களாக களைகட்டியிருந்தது.இந்த இடத்திற்கு செல்வதற்கான வாய்ப்பு எனக்கும் கிடைத்தது.பெரியவர் மீது பக்தி கொண்ட பக்தர்கள் அவரின் நினைவாக ஒரிக்கையில் எழுப்பியுள்ள மகாசுவாமி மண்டபம் பிரம்மாண்டமாக காணப்படுகிறது.
ஆயிரம் வருடங்களுக்கு முன் தமிழகத்தில் எப்படி சிமெண்ட்,இரும்பு பயன்படுத்தப்படாமல் கோவில்கள் கட்டப்பட்டதோ அதே பாணியில் கட்டியுள்ளனர். இணைப்புக்கு கரும்புச்சாறு கொண்ட சுண்ணாம்பு கலவையை பயன்படுத்தியுள்ளனர்.
இரண்டு ஏக்கர் பரப்பளவில் தஞ்சை பெரிய கோவில் வடிவத்தில் கட்டப்பட்ட இந்தக் கோவிலில் நுாறு அடி உயர விமானம் கல்துாண் மணிமண்டபம் ஒரே கல்லினால நந்தி இசைத்துாண் கல்சங்கிலி என்று பல விஷயங்கள் சிற்ப வேலைப்பாட்டின் பெருமையை பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.அதிலும் எண்கோண வடிவத்தில் உள்ள தெப்பம் மிகச் சிறப்பு.கோவிலை ஒட்டி கோசாலை அமைந்துள்ளது, ருத்ராட்ச மண்டபத்தில் பெரியவர் சிலை வடிவத்தில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.80 டன் எடை கொண்ட கோபுர விமானம் 16 துண்டுகளாக செதுக்கப்பட்டு இணைக்கப்பட்டு உள்ளது.மண்டபத்தின் வாசலில் பெரிய சிங்கமும் அதன் வாயில் உருண்டைக்கல்லும் இடம் பெற்றுள்ளது.பெரியவர் நுாறு ஆண்டுகள் வாழ்ந்ததன் அடையாளமாக நுாறு துாண்கள் மண்டபத்தில் உள்ளன.இத்துணை சிறப்பு கொண்ட ஒரிக்கை மகாசுவாமி மண்டபத்தை நீங்களும் ஓரு முறை சென்று பார்த்து வாருங்களேன்.
-எல்.முருகராஜ்
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • SENTHIL NATHAN - DELHI,இந்தியா

    ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர

Advertisement