dinamalar telegram
Advertisement

கண்டுபிடிப்பு!சட்ட விரோத குடிநீர் இணைப்பு...3,774 பேருக்கு அபராதம் விதிப்பு

Share
பெங்களூரு, செப். 16-பெங்களூரு மாநகரில், முறைகேடாக பெற்றிருந்த, 3,774 காவிரி குடிநீர் இணைப்பை, குடிநீர் வடிகால் வாரியம் கண்டுபிடித்துள்ளது. விதிகளை மீறி, குடிநீர் இணைப்பு பெற்றவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு, காவிரி குடிநீர் திட்டத்தின் மூலம், பெங்களூரு குடிநீர் வடிகால் வாரியம் குடிநீர் வினியோகிக்கிறது. 10.30 லட்சம் கட்டடங்கள், வீடுகள் குடிநீர் இணைப்பை பெற்றுள்ளன். ஒரு இணைப்பில் எவ்வளவு குடிநீர் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை, தெரிந்து கொள்ள மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது. பயன்படுத்திய தண்ணீரின் அளவுக்கு தகுந்தபடி, கட்டணம் செலுத்த வேண்டும். பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள், கட்டடங்களுக்கு குடிநீர் வினியோகித்தும் கூட, குடிநீர் வாரியத்துக்கு எதிர்பார்த்த வருவாய் கிடைக்கவில்லை. தண்ணீர் பயன்பாட்டு அளவு, நாளுக்கு நாள் அதிகரிக்கிறதே தவிர, வருவாய் வரவில்லை. இதற்கு என்ன காரணம் என்பதை கண்டறியும் நோக்கில், வீடுகளில் குடிநீர் வாரியம் ஆய்வு நடத்தியது. ஆயிரக்கணக்கானோர், முறைகேடாக குடிநீர் இணைப்பு பெற்று, மோசடி செய்வது தெரிந்தது. வருவாய் இழப்புக்கு காரணமான வீடுகளின் உரிமையாளர்களுக்கு, பெங்களூரு குடிநீர் வாரியம் அபராதம் விதித்துள்ளது. இது தொடர்பாக, குடிநீர் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:வினியோகிக்கப்படும் குடிநீரின் அளவுக்கும், வசூலான கட்டணத்துக்கும் இடையே, ஏராளமான வித்தியாசம் உள்ளது. வருவாய் இழப்புக்கு, சட்ட விரோத குடிநீர் இணைப்பு பெற்றுள்ளதே காரணம் என்பதை கண்டுபிடித்துள்ளோம். கிழக்கு மண்டலத்தில், 1,436, மேற்கு மண்டலத்தில், 2,338 விதிமீறலான குடிநீர் இணைப்புகள் பெறப்பட்டுள்ளன.

அந்த இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இது போன்று மோசடி செய்தவர்கள், மாதந்தோறும் எவ்வளவு தண்ணீர் பயன்படுத்தினார்களோ, அதை விட, 6 மடங்கு அபராதம் விதிக்க, சட்டத்தில் இடம் உள்ளது. இதன்படி தலா 5,000 ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் வசூலிக்கலாம். ஆண்டு தோறும், கோடைக்காலத்துக்கு முன், விதிமீறலான குடிநீர் இணைப்புகளை கண்டுபிடிக்க ஆய்வு நடத்தப்படும். மார்ச் மாதம் நடத்திய ஆய்வில், 64 ஆயிரத்து 540க்கும் மேற்பட்டோர், திருட்டுத்தனமாக குடிநீர் இணைப்பு பெற்றிருந்தது தெரிந்தது. அனைத்து இணைப்புகளையும் துண்டித்து, அபராதம் விதிக்கப்பட்டது.

குடிநீர் வாரியம் சார்பில் பொருத்தப்பட்ட மீட்டர் மூலமாகவே, பொது மக்கள் குடிநீர் இணைப்பு பெற வேண்டும். திருட்டுத்தனமாக இணைப்பு பெறுவது, சட்டப்படி குற்றமாகும். அதிகாரப்பூர்வமாக குடிநீர் இணைப்பு பெறவோ அல்லது புகார் அளிக்கவோ, உதவி எண் - 1916, தொலைபேசி எண் 080 - 2223 8888, வாட்ஸ் ஆப் எண் 87622 28888ல் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement