dinamalar telegram
Advertisement

அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு குறித்து சித்தராமையா விளாசல்

Share
பெங்களூரு-பெட்ரோல், டீசல், சமையல் காஸ், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு குறித்து சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, பா.ஜ., அரசை விளாசினார். அப்போது, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால், கடும் கூச்சல் குழப்பம் நிலவியது.பெட்ரோல், டீசல், சமையல் காஸ், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு குறித்து, விதி எண்: 69ன் கீழ், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா நேற்று பேசினார்.சித்தராமையா: பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இத்துடன் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளதால் சாமானிய மக்கள் தத்தளிக்கின்றனர். அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்துவதில் மத்திய, மாநில அரசுகள் தோல்வியடைந்துள்ளன.இந்திரா பிரதமராக இருந்த போது, பெட்ரோல், டீசல் விலை, 7 பைசா உயர்த்தியதற்கு அப்போது எதிர்க்கட்சி வரிசையில் இருந்த வாஜ்பாய், 'கிரிமினல் கொள்ளை' என்றார். தற்போதை ரூபாய் கணக்கில் உயர்வதை என்னவென்று அழைப்பது?கடந்த ஏழு ஆண்டுகளில் முன் எப்போதும் இல்லாத வகையில் விலை உயர்ந்துள்ளது. அதிலும், இரண்டு ஆண்டுகளில், உணவு தானியங்களின் விலை அதிகபட்சமாக உயர்ந்துள்ளது.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, குறைவாக இருந்தாலும் இந்தியாவில் குறைக்கப்படவில்லை.அமைச்சர் மாதுசாமி: பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிப்பது மத்திய அரசு தான். அதற்கும், மாநில அரசுக்கும் சம்பந்தம் இல்லை. பார்லிமென்டில் விவாதியுங்கள். இதென்ன பார்லிமென்டா அல்லது சட்டசபையா?இதனால் கோபம் அடைந்த காங்கிரஸ் உறுப்பினர்கள் எழுந்து நின்று, மாதுசாமிக்கு எதிராக பேசினர். பதிலுக்கு ஆளுங்கட்சியினரும் பேசியதால், கடும் கூச்சல் குழப்பம் நிலவியது. வாக்குவாதம் முற்றியது. யார் என்ன பேசுகின்றனர் என்றே புரியவில்லை.சித்தராமையா: விலை உயர்வு குறித்து பேச வேண்டாம் என்றால் எப்படி... மாநிலத்துக்கு தொடர்புடையது தான் பேசுகிறேன். விலை உயர்வால் கர்நாடக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பார்லிமென்டில் விவாதியுங்கள் என்று கூறுவது எப்படி?நான் யார் மீதும் குற்றஞ்சாட்டவில்லை. விலை உயர்வால் மக்கள் கஷ்டப்படுவதை தான் குறிப்பிடுகிறேன். பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு சர்வதேச சந்தையில் விலை உயர்வு காரணம் என்று பா.ஜ., சொல்வது சரியில்லை.அனைத்து விஷயங்களையும் பார்லிமென்டில் விவாதிக்க முடியும் என்பது உண்மை. முடிந்தால், அனைவரும் ஒப்புகொண்டால் விலை உயர்வு குறித்து தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்புவோம்.அமைச்சர் சுதாகர்: விலை உயர்வு என்பது வழக்கமாக நடக்கும் செயல். இதற்கு மத்திய அரசு தான் காரணம் என்று குற்றம்சாட்டுவது சரியில்லை.அப்போது, மீண்டும் காங்கிரஸ் உறுப்பினர்கள் எழுந்து நின்று அமைச்சர் சுதாகர் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர். பதிலுக்கு ஆளுங்கட்சியினரும் குரல் கொடுத்ததால் சபையில் கடும் கூச்சல், குழப்பம் நிலவியது.சித்தராமையா: கச்சா எண்ணெய் பத்திரம் திட்டம் கொண்டு வந்தது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் என்று உண்மை. அப்போது காலா காலத்துக்கு சரியான முறையில் வட்டி, அசல் செலுத்தப்பட்டது.அமைச்சர் அசோக்: கச்சா எண்ணெய் பத்திரம் திட்டம் கொண்டு வந்தது சரியா, தவறா என்று நீங்களே கூறுங்கள்.சித்தராமையா: அப்போதைய சூழ்நிலைக்கு சரியாக இருந்தது. எண்ணெய் நிறுவனங்கள், விலை உயர்த்தி மக்களுக்கு சுமை ஏற்படுத்த கூடாது என்பதற்காக அத்திட்டம் கொண்டு வரப்பட்டது. தற்போது விலை உயர்வால் மக்கள் கடுமையாக கஷ்டப்படுகின்றனர்.மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக்கியுள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளில், பெட்ரோல், டீசல் மீதான சுங்க வரி மூலம் மட்டுமே, 21 ஆயிரம் கோடி ரூபாய், மத்திய அரசுக்கு சென்றுள்ளது.இவ்வாறு விவாதம் நடந்தது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement