dinamalar telegram
Advertisement

சட்டவிரோதமாக தங்கி கஞ்சா விற்ற கும்பல் துப்பாக்கி முனையில் கைது

Share
புதுச்சேரி-புதுச்சேரியில் சட்ட விரோதமாக தங்கி, 3 ஆண்டுகளாக கஞ்சா விற்பனை செய்து வந்த ஆப்ரிக்கா நாட்டைச் சேர்ந்த 3 பெண்கள் உட்பட 7 பேரை போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்தனர். 2.6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.புதுச்சேரியில் கஞ்சா விற்பனையை முற்றிலுமாக தடுக்க, 'ஆப்பரேஷன் விடியல்' என்ற திட்டத்தின் கீழ் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.இந்நிலையில், வாழைக்குளம் பகுதியில் அதிக அளவில் கஞ்சா விற்பனை நடப்பதாக சிறப்பு அதிரடிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சந்தேகத்தின்பேரில், நட்சத்திர விடுதியில், நடன நிகழ்ச்சி, டி.ஜே. நடத்தும் வாழைக்குளத்தைச் சேர்ந்த விவேக், 30; என்பவரை, இன்ஸ்பெக்டர் இனியன் தலைமையிலான போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர், ஆப்ரிக்க நாட்டை சேர்ந்தவர்கள் கஞ்சா சப்ளை செய்வதாக கூறினர்.அதன்பேரில், குருசுக்குப்பம், சின்னதம்பி வீதியில் உள்ள ஆசிரம குடியிருப்பில், சிறப்பு அதிரடிப்படை போலீசார், நேற்று முன்தினம் சோதனை நடத்த சென்றனர்.அங்கிருந்த வெளிநாட்டினர், சிறிய கத்தியால் போலீசாரை தாக்க முயன்றனர். போலீசார் துப்பாக்கியை காண்பித்து, 'சரண் அடையாவிட்டால் சுட்டு விடுவோம்' என எச்சரித்தனர். அதையடுத்து கத்தியை கீழே போட்டவர்களை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.விசாரணையில், ருவாண்டா நாட்டை சேர்ந்த வாவா உக்விஷ்கா, 32; முகியோ ஒலிவர், 30; ஆக்சுவல், 29; உகாண்டாவை சேர்ந்த நிபுகீரா ஹெலன், 25; ஆப்ரிக்கா நாட்டை சேர்ந்த நான்டாங்கோ மேரி, 27; இன்மயிழே மோரிட்டி, 25; என தெரிய வந்தது. விவேக் உள்ளிட்ட 7 பேரையும் போலீசார் கைது செய்தனர்.இவர்களது வீட்டில் இருந்து 2.6 கிலோ கஞ்சா, ரூ. 51,120 ரொக்கம், விலை உயர்ந்த 7 மொபைல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.தொடர் விசாரணையில், தமிழக பகுதியில் உள்ள கல்லுாரியில் படிப்பதாக, விசா பெற்று வந்த 6 பேருக்கும், கடந்த 2018 ஆண்டுடன் விசா காலம் முடிந்து விட்டது.அதன்பிறகு நாடு திரும்பிச் செல்லாமல், சட்ட விரோதமாக புதுச்சேரியில் தங்கி, நட்சத்திர விடுதிகளில் நடன நிகழ்ச்சிக்கு வரும் சுற்றுலா பயணிகள், உள்ளூர் இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வருகின்றனர். ஹைதராபாத்தில் இருந்து கஞ்சாவை கொண்டு வருவதும் தெரிய வந்தது.கைது செய்யப்பட்ட 7 பேரும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.வெளிநாட்டு கும்பல், கடந்த 3 ஆண்டுகளாக சட்ட விரோதமாக புதுச்சேரியில் தங்கி, கடற்கரை சாலை, செஞ்சி சாலை, காந்தி வீதி உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement