dinamalar telegram
Advertisement

உயிரை மாய்த்து கொள்ள வேண்டாம்! மாணவர்களுக்கு முதல்வர் வேண்டுகோள்

Share
சென்னை:'மாணவ செல்வங்கள் தயவு செய்து, தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம்' என, முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்ட வீடியோவில் பேசியிருப்பதாவது: கடந்த 2017 செப்டம்பரில் மாணவி அனிதா இறந்தபோது, என்ன மனநிலையில் இருந்தேனோ, அதே மனநிலையில் தான், இப்போதும் இருக்கிறேன்.சேலத்தைச் சேர்ந்த மாணவன் தனுஷ் தற்கொலை செய்து கொண்டபோதே, இனி இப்படியொரு துயரம் நடக்கக் கூடாது என, மாணவ செல்வங்களை கேட்டுக் கொண்டேன்.

ஆனால், நேற்று முன்தினம் அரியலுாரில் கனிமொழி; நேற்று வேலுாரில் சவுந்தர்யா என்ற மாணவி, தற்கொலை செய்த செய்தி கேள்விப்பட்டதும், சுக்கு நுாறாக உடைந்து விட்டேன்.

துயரம் நடக்கக் கூடாதுஇப்போது எனக்கு இருக்கும் வேதனையை விட, இனி இப்படியொரு துயரம் நடக்கக் கூடாது என்ற கவலை தான் அதிகமாக இருக்கிறது. பல குளறுபடிகளை கொண்ட நீட் தேர்வு, ஏழை மாணவர்களின் கல்விக் கனவை நாசமாக்கக் கூடியது என்று தான், தி.மு.க., நீட் தேர்வுக்கு எதிராக, பல்வேறு போராட்டங்களை நடத்தியது.

நாம் ஆட்சியில் இருந்தபோதும், நீட் தேர்வை நடத்த விடவில்லை. ஆனால், சிலர் தங்களுடைய சுய லாபத்துக்காக, நீட் தேர்வை தமிழகத்திற்குள் அனுமதித்தனர்.டாக்டராக வேண்டும் என்ற லட்சியத்துடன் இருப்போரின் கனவை சிதைக்கக் கூடியதாக நீட் தேர்வு முறை இருக்கிறது. ஆனால், மத்திய அரசு இதில் இருந்து விலக்களிக்க, இன்னும் இறங்கி வராமல், கல்நெஞ்சோடு இருக்கிறது.

கடந்த மே மாதம் ஆட்சிக்கு வந்த தி.மு.க., அரசு நீட் தேர்வு குறித்து விசாரிக்க, ஒரு ஆணையத்தை அமைத்தது. ஆணையத்திடம் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர், தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.ஒரு சிலரை தவிர எல்லாருமே நீட் தேர்வை எதிர்த்தனர். அந்த அடிப்படையில், நீட் தேர்வு வேண்டாம் என்று அந்த ஆணையம் அறிக்கை அளித்தது.அதை அடிப்படையாக வைத்து, நீட் தேர்வை ரத்து செய்வதற்கான தனி மசோதாவை சட்டசபையில் நிறைவேற்றி உள்ளோம்.

பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், மருத்துவ படிப்பில் மாணவர் சேரும் வகையில், இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.இந்தக் கருத்தை, பல்வேறு மாநில அரசுகளின் கவனத்திற்கு எடுத்து செல்ல உள்ளோம். இறுதியாக நீட் தேர்வை ரத்து செய்யும் நிலையை நிச்சயம் ஏற்படுத்துவோம்.

இந்த சூழலில், நீட் தேர்வில் வெற்றி பெற முடியவில்லையே என்ற ஏக்கத்தால், உயிரை மாய்த்துக் கொள்ளும் செய்தி, என் நெஞ்சில் ஈட்டியை பாய்ச்சுவதாக உள்ளது.மனநல ஆலோசனைகள்உங்களுடைய உயிர், விலைமதிப்பு இல்லாதது. உங்கள் உயிர், உங்கள் குடும்பத்துக்கு மட்டுமல்ல, இந்த நாட்டுக்கும் முக்கியம்.

உங்கள் எதிர்காலத்தில் தான், இந்த நாட்டின் எதிர்காலம் அடங்கி இருக்கிறது. அத்தகைய மதிப்பு வாய்ந்த உயிரை, மாய்த்துக் கொள்ள வேண்டாம்.பெற்றோரும் தங்களுடைய குழந்தைகளை, கல்வியில் மட்டுமின்றி, தன்னம்பிக்கை கொண்ட மனிதர்களாக வளர்க்க வேண்டும்; குழந்தைகளுக்கு, அளவுக்கு மீறிய அழுத்தம் தர வேண்டாம்.

நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, மனநல ஆலோசனைகள் வழங்க, அரசு சார்பில், '104' என்ற தொலைபேசி எண் உருவாக்கப்பட்டுள்ளது. மனநல மருத்துவர்கள் எப்போதும் தயாராக இருப்பர்.ஆசிரியர்கள், சமூக சேவை செய்வோர், திரைத்துறையினர் போன்றோர், மாணவர்களுக்கு தன்னம்பிக்கை விதை விதைக்க வேண்டும். தயவு செய்து மாணவர்கள் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம்.இவ்வாறு ஸ்டாலின் பேசி உள்ளார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • Nanban - Kajang,மலேஷியா

    அரை மண்டையும், செங்கல் திருடனும் சேர்ந்து தனது குடும்பம் பதவி சுகம் அனுபவிக்க வேண்டும் என்று ஊர் தோறும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் இருக்காது என்று புருடா விட்டு ஆட்சிக்கு வந்து நான்கு மாதங்களில் மூன்று மாணவர்களின் உயிரை குடித்து விட்டனர் , ஆனாலும் இன்னும் பாருங்கள் மற்றவர் மீது தான் குற்றம் சொல்லுகிறார்கள் ஒழிய தன் இயலாமையை ஒத்துக்கொள்ள மறுக்கிறார்கள். இவர்களெல்லாம் பதவிக்காக என்ன வேண்டும் என்றாலும் செய்வார்கள், உதாரணம் ஈழத்தமிழர்கள் கொலை, கச்சத்தீவு தாரை வார்ப்பு .

Advertisement